Published:Updated:

தனியார் பேருந்தில் கத்தை கத்தையாக ரூபாய் நோட்டுகள்!- தேர்தலுக்கு முன் சிக்கிய பின்னணி 

தனியார் பேருந்தில் கத்தை கத்தையாக ரூபாய் நோட்டுகள்!- தேர்தலுக்கு முன் சிக்கிய பின்னணி 
தனியார் பேருந்தில் கத்தை கத்தையாக ரூபாய் நோட்டுகள்!- தேர்தலுக்கு முன் சிக்கிய பின்னணி 

தேர்தல் நடைபெறுவதற்கு முன் திருவள்ளூர் மாவட்டம், எளாவூர் சோதனைச் சாவடியில் ஒன்றரைக் கோடி ரூபாய் பணம் சிக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பணத்தைக் கொண்டு வந்தவரிடம் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். 

நாடாளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணியில் அரசியல் கட்சிகள் ஆர்வம் காட்டிவருகின்றன. யாருடன் யார் கூட்டணி என்பதுதான் இன்றைய அரசியலில் பரபரப்பான செய்தியாக உள்ளது. இந்தச் சூழ்நிலையில் ஹைதராபாத்திலிருந்து சென்னை நோக்கி வந்த தனியார் பேருந்தில் கோடிக்கணக்கான ரூபாயுடன் ஒருவர் வருவதாக குற்றப்பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

 உடனடியாக குற்றப்பிரிவு கூடுதல் காவல் இயக்குநர் ஆபாஷ்குமார், உத்தரவின் பேரில் போதை பொருள் நுண்ணறிவுப் பிரிவு காவல் கண்காணிப்பாளர் ஆனி விஜயா, முன்னிலையில், போதை பொருள் நுண்ணறிவுப் பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளர் ஜூலியஸ்  சீசர் மேற்பார்வையில், போதைப்பொருள் நுண்ணறிவுப் பிரிவு, இன்ஸ்பெக்டர் சீதாராமன் தலைமையில், சிறப்பு உதவி ஆய்வாளர்  செல்வம், மற்றும் போலீஸார் லிங்கநாதன், ராஜராஜன் சர்தார் ஆகியோர் கொண்ட போலீஸ் டீம் அந்தப் பேருந்தை கண்காணித்தனர். 

 திருவள்ளூர் மாவட்டம், எளாவூர் சோதனைச் சாவடியில் இன்று போலீஸார் அந்தப் பேருந்தை மடக்கி சோதனை செய்தனர். அப்போது அதில் பயணம் செய்த ஹைதராபாத்தைச் சேர்ந்த நீரஜ் குப்தா (47) என்பவர் வைத்திருந்த இரண்டு டிராவல்ஸ் பைகளை போலீஸார் சோதனை செய்தனர். அதில் கத்தை கத்தையாக 500, 2000 ரூபாய் நோட்டுகள் இருந்தன. இதையடுத்து நீரஜ் குப்தாவையும் ரூபாய் நோட்டுகளையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். நீரஜ் குப்தாவிடம் போலீஸார் விசாரித்தபோது அவர் எந்தவித தகவலும் தெரிவிக்காமல் அமைதியாக இருந்தார். மேலும், அவரிடம் பணத்துக்கான எந்தவித ஆவணங்களும் இல்லை. இதையடுத்து நீரஜ் குப்தாவை போலீஸார் வருமான வரித்துறையினரிடம் ஒப்படைத்தனர். அவரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரித்துவருகின்றனர். 

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், தனியார் பேருந்தில் வந்த நீரஜ் குப்தாவிடமிருந்து ரூ.1,53,000,00 பறிமுதல் செய்துள்ளோம். அவரிடம் பணம் குறித்து விசாரித்தபோது எந்தவித தகவலும் தெரிவிக்கவில்லை. மேலும், அவர் ஹைதராபாத்திலிருந்து சென்னை  சௌகார்பேட்டைக்கு வருவதாக மட்டும் கூறினார். சௌகார்பேட்டையில் உள்ள ஒருவரிடம் பணத்தை கொடுக்க வந்ததாகவும் தெரிவித்தார். ஆனால் அந்த நபர் குறித்த விவரங்களை நீரஜ் குப்தா சொல்லவில்லை. தற்போது வருமானவரித்துறையினர் விசாரித்துவருகின்றனர் என்றனர். 

இதுகுறித்து வருமான வரித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,``நீரஜ் குப்தா கொண்டு வந்த பணம் ஹைதாரபாத்தில் உள்ள ஜூவல்லரி கடையின் உரிமையாளருடையது. மேலும், அந்தக் கடையில் நீரஜ்குப்தா மாதம் 35,000 ரூபாய் சம்பளத்தில் வேலை பார்ப்பதாகவும் கூறியுள்ளார். நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு முன் கோடிக்கணக்கான ரூபாய் சிக்கியது. இதனால், இந்தப் பணம் தேர்தலுக்குப் பயன்படுத்த கொண்டுவந்ததா என்றும் விசாரித்துவருகிறோம். பணத்துக்குரிய ஆவணங்கள் சமர்பிக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்க மாட்டோம். இல்லையென்றால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார். 

தேர்தலுக்காக இந்தப் பணம் கொண்டு வரப்பட்டதா என்று போலீஸ் உயரதிகாரி ஒருவரிடம் கேட்டதற்கு இல்லை என்று அவர் மறுத்தார். மேலும் அவர், ``இந்தப் பணத்தை நீரஜ் குப்தா சௌகார்பேட்டை என்எஸ்சி போஸ் சாலைக்குக் கொண்டு வந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். கோடிக்கணக்கான ரூபாய் நோட்டுகளை எவ்வித பாதுகாப்பும் இல்லாமல் தனியாளாக ஒருவர் கொண்டு வருவது எங்களுக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒருவேளை இந்தப் பணம் ஹவாலா பணமாகக்கூட இருக்கலாம். அந்தக் கோணத்திலும் விசாரணை நடந்துவருகிறது" என்றார்.