Published:Updated:

ஓடும் பேருந்தில் பெண்ணிடம் சில்மிஷம்!- ஒப்படைக்கப்பட்ட வாலிபரால் போலீஸுக்கு நடந்த சோகம் 

ஓடும் பேருந்தில் பெண்ணிடம் சில்மிஷம்!- ஒப்படைக்கப்பட்ட வாலிபரால் போலீஸுக்கு நடந்த சோகம் 
ஓடும் பேருந்தில் பெண்ணிடம் சில்மிஷம்!- ஒப்படைக்கப்பட்ட வாலிபரால் போலீஸுக்கு நடந்த சோகம் 

சென்னையில் அரசுப் பேருந்தில் பயணித்த பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டவரை பொதுமக்கள் பிடித்து போக்குவரத்து காவலரிடம் ஒப்படைத்தனர். அப்போது அந்த நபர், தனியாக இருந்த போக்குவரத்து காவலரை சரமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை, பாரிமுனையிலிருந்து எண்ணூர் தாழங்குப்பம் நோக்கி, வழித்தடம் எண் 56 என் என்ற அரசு மாநகரப் பேருந்து சென்றது. மாலை நேரம் என்பதால் பேருந்தில் கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதின. கூட்ட நெரிசலில் பேருந்தில் பயணித்த இளம்பெண் ஒருவரிடம் வாலிபர் சில்மிஷத்தில் ஈடுபட்டார். வாலிபரின் செயல் எல்லை மீறத் தொடங்கியதும் அந்தப் பெண் ஆத்திரமடைந்தார். வாலிபரின் சட்டையைப் பிடித்த அந்தப் பெண் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து பேருந்தில் பயணித்தவர்கள், பெண்ணுக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். இன்னும் சிலர் வாலிபரைப் பிடித்து நையப் புடைத்தனர். அடிவாங்க முடியாமல் அந்த வாலிபர் தப்பி ஓட முயன்றார். இவை அனைத்தும் ஓடும் பேருந்தில் நடந்தது. 

இதையடுத்து சுங்கச்சாவடி பகுதியில், போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் இருந்த போக்குவரத்து தலைமைக் காவலர் கணேசனிடம் விவரத்தைக்கூறி வாலிபரை பொதுமக்கள் ஒப்படைத்தனர். அதன்பிறகு பேருந்து அந்தப் பகுதியைக் கடந்து சென்றது. அப்போது வாலிபரும் காவலர் கணேசன் மட்டுமே அங்கிருந்தனர். வாலிபரிடம் காவலர் கணேசன் விசாரித்தார். தனியாக இருந்த கணேசனை வாலிபர் சரமாரியாக தாக்கினார். அதில் கணேசனின் புருவம் கிழிந்தது. நிலைமை மோசமானதும் உடனடியாக கணேசன், புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். 

உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், காவலர் கணேசனை மீட்டு அவரை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.  இதையடுத்து, அந்த வாலிபரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். விசாரணையில் அவரின் பெயர் மோகன் என்றும் அவர் மீது திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, மோகனை போலீஸார் கைதுசெய்தனர். விசாரணையின்போது மோகன் கஞ்சா போதையில் இருந்தார் என்கின்றனர் போலீஸார். 

 பெண்ணிடம் சில்மிஷம் செய்த சம்பவத்தில் சிக்கிய மோகன், காவலரைத் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.