தூத்துக்குடியிலிருந்து வெளிநாடுகளுக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.4 லட்சம் மதிப்புள்ள 200 கிலோ பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகளை போலீஸார் பறிமுதல் செய்து இருவரை கைது செய்தனர்.
வங்காளவிரிகுடா கடல் பகுதியில் உள்ள மன்னார்வளைகுடா கடல்பகுதி பாதுகாக்கப்பட்ட உயிரிக்கோளப்பகுதியாகும். உலகில் உள்ள பவளப்பாறைகளில் 17 சதவிகிதம் மன்னார்வளைகுடா பகுதியாக உள்ளது. இதில், பல்வேறு அரிய வகையான கடல்வாழ் உயிரினங்கள் காணப்படுகின்றன. இந்திய கடல்வளத்தைப் பாதுகாக்கும் வகையில், இப்பகுதி பாதுகாக்கப்பட்ட கடல்பூங்காவாக மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு கடற்பசு, கடல்குதிரை, பால்சுறா, கடல் அட்டை உள்ளிட்ட 53 வகையான அரிய கடல்வாழ் உயிரினங்களைப் பிடிக்கவும், வைத்திருக்கவும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தடை விதித்துள்ளது.
இருந்தபோதிலும், இந்தத் தடையை மீறி பலவித மருந்துகள் தயாரிப்பதற்காக கடல் அட்டைகளைப் சட்டவிரோதமாகப் பிடித்து உயிருடனும், பதப்படுத்தியும் கடத்தப்படுவது தொடர்கதையாக நடந்து வருகிறது. இதைத் தடுக்கும் பணியிலும் வன உயிரினப் பாதுகாப்புத்துறை, கடலோர பாதுகாப்புக் குழுமம் உள்ளிட்ட பலரும் தீவிரக் கண்காணிப்பிலும் ஈடுபட்டு வந்தாலும் கடல் அட்டைக் கடத்தல் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன.
இந்நிலையில், தூத்துக்குடி கோவில்பிள்ளை விளையில் சட்டவிரோதமாக சங்கு குடோனில் கடல் அட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு கடத்தப்படுவதாக கடலோரப் பாதுகாப்பு குழும போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், ஆய்வாளர் நவீன்குமார், உதவி ஆய்வாளர் ஜானகிராமன், சிறப்பு உதவி ஆய்வாளர் முருகன் ஆகியோர் தலைமையிலான போலீஸார் அப்பகுதியில் உள்ள ஒரு சங்கு குடோனில் திடீரென சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்தக் குடோனின் மேல் மாடியில், சாக்கு மூட்டைகளில் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, 6 சாக்கு மூட்டைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பதப்படுத்தப்பட்ட 200 கிலோ எடையிலான கடல் அட்டைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். மேலும், இவற்றை வெளிநாடுகளுக்கு கடத்திச் செல்வதற்காக அங்கு பதுக்கி வைத்திருந்த லூர்தம்மாள்புரத்தைச் சேர்ந்த சதாசிவம் மற்றும் திரேஸ்புரத்தைச் சேர்ந்த அந்தோணிராஜ் ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர். மேலும், இது தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட பதப்படுத்தப்பட்ட 200 கிலோ கடல் அட்டைகளின் மதிப்பு சுமார் ரூ.4 லட்சம் வரை இருக்கலாம் என போலீஸார் தெரிவித்தனர்.