Published:Updated:

விடிய விடிய விஜிலென்ஸ் சோதனை!- வழக்கறிஞரால் சிக்கினாரா பெண் சார்-பதிவாளர்? 

விடிய விடிய விஜிலென்ஸ் சோதனை!- வழக்கறிஞரால் சிக்கினாரா பெண் சார்-பதிவாளர்? 
விடிய விடிய விஜிலென்ஸ் சோதனை!- வழக்கறிஞரால் சிக்கினாரா பெண் சார்-பதிவாளர்? 

சென்னை திருவொற்றியூர் காலடிப்பேட்டை பகுதியில் உள்ள சார்-பதிவாளர் அலுவலகத்தில் நேற்றிரவு விடிய விடிய
விஜிலென்ஸ் போலீஸார் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில் 50,000 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. 

சென்னை திருவொற்றியூர் காலடிப்பேட்டையில் சார்-பதிவாளர் அலுவலகம் செயல்பட்டுவருகிறது. இங்கு சார்-பதிவாளராக ராஜி என்பவர் பணியாற்றிவருகிறார். இவர், கடந்த சில வாரங்களுக்கு முன்புதான் இங்கு இடமாற்றம் செய்யப்பட்டார். திருவொற்றியூர் சார்-பதிவாளர் அலுவலகத்தில் லஞ்சம் வாங்கப்படுவதாக விஜிலென்ஸ் போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

இந்த நிலையில் நேற்று அமாவாசையையொட்டி திருவொற்றியூர் சார்-பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப் பதிவுக்கு ஏராளமானவர்கள் வந்திருந்தனர். அப்போது லஞ்சம் வாங்கப்படும் தகவல் கிடைத்ததும் விஜிலென்ஸ் போலீஸ் டி.எஸ்.பி. குமரன் தலைமையில் 15 பேர் கொண்ட குழுவினர் சார்-பதிவாளர் அலுவலகத்துக்குள் அதிரடியாக நுழைந்தனர். அவர்கள் அலுவலகம் முழுவதும் சோதனை செய்தனர். 
இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

விஜிலென்ஸ் போலீஸைப் பார்த்ததும் புரோக்கர்கள் தலைதெறிக்க ஓடி தலைமறைவாகினர். இந்தச் சோதனையில் 50,000 ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. சார் - பதிவாளர் ராஜி மற்றும் உதவியாளர் கோவர்த்தனன் மற்றும் அலுவலக உதவியாளர்கள் செந்தில், மாணிக்கம் ஆகியோரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். 

இதுகுறித்து விஜிலென்ஸ் போலீஸார் கூறுகையில், ``திருவொற்றியூர் சார்-பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவுக்கு லஞ்சம் வலுக்கட்டாயமாக வாங்கப்படுவதாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது. அதன்பேரில்தான் நேற்று சோதனையில் ஈடுபட்டோம். நேற்று மாலையில் தொடங்கிய சோதனை விடிய விடிய நடந்தது. இன்று அதிகாலையில்தான் சோதனை நிறைவடைந்தது. இந்தச் சோதனையால் அலுவலக ஊழியர்கள், சார்-பதிவாளர் என யாரையும் வெளியில் செல்ல அனுமதிக்கவில்லை. கைப்பற்றிய பணம் குறித்து சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரித்துவருகிறோம். அவர்கள் கொடுக்கும் விளக்கத்தின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார். 

பத்திரப்பதிவுத்துறை அலுவலர் ஒருவர் கூறுகையில்,`` சார்-பதிவாளர் ராஜி, விழுப்புரத்திலிருந்து சமீபத்தில்தான் திருவொற்றியூருக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அவர் வந்த சில தினங்களிலேயே விஜிலென்ஸ் சோதனையில் சிக்கியுள்ளார். அதற்குப் பின்னணியில் சிலர் உள்ளனர். திருவொற்றியூர் சார்-பதிவாளர் அலுவலகத்தைப் பொறுத்தவரை வழக்கறிஞர்கள் சிலரின் ஆதிக்கம் அதிகமாக இருந்துவருகிறது. அவர்களில் ஒரு வழக்கறிஞர்தான் திட்டமிட்டு விஜிலென்ஸில் சிக்க வைத்துவிட்டார். அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில்தான் நேற்று சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது 50,000 ரூபாய் பணம் சிக்கியுள்ளதால் சம்பந்தப்பட்டவர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. பணத்துக்குரிய காரணம் கூறவில்லையெனில் வழக்கை சந்திக்க நேரிடும்" என்றனர். 

பதிவுத்துறை ஊழியர்கள் கூறுகையில், ``பதிவுத்துறையில் லஞ்சம் வாங்குவதைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. ஆன் லைன் மூலம்தான் பத்திரப்பதிவுகள் நடந்துவருகின்றன. ஆனாலும், பதிவுத்துறையில் லஞ்சம் வாங்கப்படுவதைத் தடுக்க முடியவில்லை. இதற்கு பதிவுத்துறையில் பின்பற்றப்படும் நடைமுறைகளும் கமிஷன் கேட்கும் அதிகாரிகள்தான் காரணம்.

பதிவுத்துறையில் மாதந்தோறும் குறிப்பிட்ட தொகையை உயரதிகாரிகளுக்கும் அமைச்சர் அலுவலகத்துக்கும் மாமூலாக கொடுக்க வேண்டும் என்பது எழுதப்படாத சட்டமாக இருக்கிறது. அதோடு அதிக பத்திரப்பதிவு நடக்கும் சார்-பதிவாளர் அலுவலகங்களுக்கு போஸ்டிங் பெற குறிப்பிட்ட தொகை கொடுக்க வேண்டிய நிலையும் உள்ளது. இல்லையெனில் பணத்தை பெற்றுக்கொண்டு நேர்மையாக  செயல்படும் பதிவுத்துறையினர் வேண்டுமென்றே இடமாற்றம் செய்யப்படுகின்றனர். சார்-பதிவாளர், பதிவாளர்கள் இடமாற்றத்துக்கென தனி நெட்வோர்க் செயல்படுகிறது. இதுஎல்லாம் திருப்பதி வெங்கடேசன் பெயரில் உள்ள ஒருவரின் தலைமையில்தான் நடக்கிறது. அதை அமைச்சரும் அதிகாரிகளும் கண்டுக்கொள்வதில்லை" என்றனர்.