Published:Updated:

மகாத்மா காந்தியைத் துளைத்த நான்காம் குண்டு யாருடையது ? - மறுத்த உச்ச நீதிமன்றம்!

காந்தியின் உயிரைப் பறித்தது மூன்று அல்ல நான்கு குண்டுகள் எனவும், அந்த நான்காவது குண்டு யாருடைய துப்பாக்கியிலிருந்து சுடப்பட்டது எனவும் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

மகாத்மா காந்தியைத் துளைத்த நான்காம் குண்டு யாருடையது ? - மறுத்த உச்ச நீதிமன்றம்!
மகாத்மா காந்தியைத் துளைத்த நான்காம் குண்டு யாருடையது ? - மறுத்த உச்ச நீதிமன்றம்!

தேசப்பிதா மகாத்மா காந்தி சுடப்பட்டு கடந்த ஜனவரியோடு 71 ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனால், இன்றும் அவரது இறப்பைப் பற்றிய சர்ச்சைகளும் சந்தேகங்களும் தீர்ந்தபாடில்லை. 

மும்பையைச் சார்ந்த ஆராய்ச்சியாளர் பங்கஜ் பாட்னிஸ், மகாத்மா காந்தியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் அவரது கொலையைச் சுற்றிய பெரிய சதி இதுவரை வெளியிடப்படவில்லை எனவும், புதிதாக, தான் சேமித்த சில ஆதாரங்களை வைத்து இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் எனவும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். புதிய விசாரணையைத் தொடங்குவதற்கு அனுமதி மறுத்த உச்ச நீதிமன்றம், கடந்த வருடம் மார்ச் மாதம் 28-ம் தேதி அந்த வழக்கையும் தள்ளுபடி செய்தது.

இந்த நிலையில், மகாத்மா காந்தியின் கொலையில் புதிய தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்திருப்பதாகவும், மீண்டும் இந்த வழக்கை போலீஸார் விசாரித்தால், அவர் கொலையின் மர்மங்கள் விலகும் எனவும் மறுசீராய்வு மனு போடப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.ஏ.போப்டே, எல்.என்.ராவ் அடங்கிய பெஞ்ச், இந்த மறு சீராய்வு மனுவைத் தள்ளுபடி செய்தது. இந்த வழக்கு விவரங்கள் பின்வருமாறு: 

1948-ம் ஆண்டு நடந்த மகாத்மா காந்தியின் கொலையில், விசாரணை நடந்து 1949-ம் ஆண்டு கோட்சே உட்பட ஏழு பேர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டனர். வி.டி.சாவர்க்கருக்கு எதிராகப் போதுமான சாட்சியங்கள் இல்லாததால் அவர் விடுவிக்கப்பட்டார். 

கோட்சே நேருக்கு நேராக நின்று காந்தியைச் சுட்டதும், அவரது துப்பாக்கியில் இருந்து புறப்பட்ட மூன்று குண்டுகள் காந்தியைக் கொன்றதும் உறுதிப்படுத்தப்பட்டு, கோட்சேவுக்குத் தூக்குத் தண்டனை வழங்கப்பட்டது. ஆனால், இங்குதான் பங்கஜ் பாட்னிஸ் தன்னுடைய சந்தேகத்தைப் பதிவுசெய்கிறார். 

காந்தியின் உயிரைப் பறித்தது மூன்று அல்ல நான்கு குண்டுகள் எனவும், அந்த நான்காவது குண்டு யாருடைய துப்பாக்கியிலிருந்து சுடப்பட்டது எனவும் கேள்வி எழுப்பியிருக்கிறார். இதற்குச் சான்றாக, ஜனவரி 31 ,1948 தேதியிட்ட டான் (Dawn ), ரியூட்டர்ஸ் (Reuters), டைம்ஸ் ஆப் இந்தியா (Times of India) மற்றும் லோக்சத்தா (Loksatta) ஆகிய பத்திரிகைகளில் வெளிவந்த செய்திகளில் அவர் மீது நான்கு குண்டுகள் பாய்ந்ததாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அதுமட்டுமன்றி, பிர்லா இல்லத்தில் காந்தியின் அறைக்கு வெளியே இருக்கும் அறிவிப்பு பலகையில், அவர் மரணத்தைப் பார்த்த சாட்சியின் வாக்குமூலம் எழுதப்பட்டிருக்கிறது. அதிலும், நான்கு குண்டுகள் சுடப்பட்டது என்றே சொல்லப்பட்டிருக்கிறது. மிக முக்கியமாக, இந்து நாளிதழில் வெளியான காந்தியின் பூத உடல் புகைப்படத்தில், `அவர் மீது நான்கு குண்டு பாய்ந்த காயம் இருப்பது தெளிவாகத் தெரிகிறது’ என்கிறார். 

மேலும், `காந்தியைக் கொன்றது யார்’ என்ற லொரென்சோ டி சல்வதோர் (`Who Killed Gandhi’ by Lourenco de Salvador) எழுதிய புத்தகத்தையும் `இந்திய நினைவுகள்’ என்ற பமீலா மவுன்ட்பேட்டனின் புத்தகத்தையும், ஆராய்ந்து பார்க்கும்போது, காந்தியின் மரணத்தில் அன்றைய அதிகார வட்டத்தில், உயர் பதவியில் இருந்த பலருக்குத் தொடர்பு இருப்பது தெரியும் என்றும் தன்னுடைய மனுவில் பங்கஜ் குறிப்பிட்டிருந்தார். 

இதுகுறித்த அமைக்ஸ் கியூரி (வழக்குக்குச் சம்பந்தப்பட்ட துறை நிபுணர்) அபிப்ராயத்தையும் கேட்ட நீதிமன்றம், இவ்வழக்கில் சமர்பிக்கப்பட்ட அனைத்துத் தரவுகளையும் முழுவதும் ஆராய்ந்த பிறகும், இந்த வழக்கு விசாரணையை மீண்டும் தொடங்குவதற்கான எந்த முகாந்திரமும் இல்லை. மேலும், இது நேர விரயமாக மட்டுமே இருக்கும் என்று கூறி மறு சீராய்வு மனுவைத் தள்ளுபடி செய்தது.