Published:Updated:

``அவர் தூங்கிக்கொண்டிருப்பார்!”- பெண் மருத்துவர் கொலை குறித்து சாட் செய்த முன்னாள் காதலன் 

``அவர் தூங்கிக்கொண்டிருப்பார்!”- பெண் மருத்துவர் கொலை குறித்து சாட் செய்த முன்னாள் காதலன் 
``அவர் தூங்கிக்கொண்டிருப்பார்!”- பெண் மருத்துவர் கொலை குறித்து சாட் செய்த முன்னாள் காதலன் 

ஆஸ்திரேலியாவின் சிட்னி அருகே பல் மருத்துவராக பணியாற்றி வந்தவர் ப்ரீத்தி ரெட்டி. இந்திய வம்சாவளியான இவர் கடந்த வாரம் சிட்னி நகரில் நடைபெற்ற பல் மருத்துவம் தொடர்பான கருத்தரங்கில் கலந்துகொள்வதற்காக சிட்னி சென்றிருக்கிறார். அங்கிருந்து 3-ம் தேதி வீடு திரும்புவதாக அவர் கடைசியாக வீட்டில் பேசியபோது தெரிவித்திருக்கிறார். ஆனால் அவர் உரிய நேரத்தில் திரும்பாததால் அவரின் உறவினர்கள் அவரது அலைபேசிக்கு அழைத்துள்ளனர். ஆனால், அவரது அலைபேசி ஆஃப் செய்யப்பட்டிருந்தது. 

இதனால், அவரின் உறவினர்கள் இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இந்த நிலையில், கடந்த 5-ம் தேதி அவரது கார் கண்டுபிடிக்கப்பட்டது. அதில் சோதனையிட்டபோது, ஒரு சூட்கேஸ் இருந்திருக்கிறது. அதில் ப்ரீத்தி ரெட்டி உடல் இருந்ததைக் கண்டு போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர். அவரது உடலில் பல்வேறு இடங்களில் கத்திக் குத்து காயங்கள் இருந்திருக்கின்றன.

சிட்னியில் நடைபெற்ற பல் மருத்துவம் தொடர்பான கருத்தரங்கில் ப்ரீத்தி ரெட்டியின் முன்னாள் காதலன் ஹர்ஷ்வர்தன் நார்டேவும் கலந்துகொண்டுள்ளார். ப்ரீத்தி ரெட்டி காணாமல் போனதாக வந்த புகாரின்போது, போலீஸாரின் சந்தேகப் பார்வை ஹர்ஷ்வர்தன் மீது விழுந்துள்ளது. அப்போது போலீஸார் அவரைத் தொடர்புகொண்டு பேசியுள்ளனர். ஆனால், அவர் காணாமல் போனது தொடர்பாக தனக்குத் தெரியாது என மறுத்தார். இந்த விசாரணை நடைபெற்ற சில மணி நேரத்தில் ஹர்ஷ்வர்தன் நார்டே சென்ற கார் விபத்தில் சிக்கியது. இதில் அவர் தலையில் பலத்த காயங்களுடன் பலியானார். இந்த விபத்து 4-ம் தேதி நடக்கிறது. 5-ம் தேதி ப்ரீத்தியின் உடல் கைப்பற்றப்பட்டது.  
இதனால், கடைசியாக ப்ரீத்தி தனது வீட்டில் பேசியபின்னர் என்ன நடந்தது என போலீஸார் விசாரித்து வந்தனர். ஹர்ஷ்வர்தன் மற்றும் ப்ரீத்தி நீண்ட காலமாக காதலித்து வந்த நிலையில், சில மாதங்களுக்கு முன்னர் இருவரும் பேசி பிரிந்துள்ளனர். இந்தச் சூழ்நிலையில்தான் இந்தக் கருத்தரங்கில் கலந்துகொள்ள பல் மருத்துவரான ஹர்ஷவர்தன் சுமார் 400 கி.மீ பயணம் செய்து வந்திருக்கிறார். 

அவர்கள் இருவரும் சில மாதங்களுக்குப் பின்னர் சந்தித்துப் பேசியதாக இருவருக்கும் பொதுவான நண்பர் ஒருவர் ஊடகத்திடம் தெரிவித்திருக்கிறார். தனது அடையாளங்களை வெளிக்காட்டிக்கொள்ள விரும்பாத அந்த நண்பர், ``நீண்ட காலத்துக்குப் பிறகு சந்தித்த அவர்கள் மகிழ்ச்சியாகப் பேசிக்கொண்டிருந்தனர்” என்றார். அதன் பின்னர் ப்ரீத்தி ஓர் உணவகத்தில் உணவு வாங்க காத்திருக்கும்போது அங்கிருக்கும் சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தார். 

பின்னர், அவர்கள் தங்கியிருந்த ஹோட்டலின் சிசிடிவி கேமரா காட்சிகளை ஆராய்ந்தபோது, ஹர்ஷ்வர்தன் கனமான சூட்கேஸ் ஒன்றை ஹோட்டல் பணியாளர் உதவியுடன் தூக்கிச் சென்றதும் பதிவாகியுள்ளது. இதைத் தொடர்ந்து, ஹர்ஷ்வர்தன் விபத்து தொடர்பாக விசாரித்த அதிகாரிகள், இந்த விபத்து வேண்டுமென்றே நடத்தப்பட்ட விபத்து என்கின்றனர்.

ப்ரீத்தி காணாமல் போன அன்று, இருவருக்கும் பொதுவான நண்பர் ஒருவர் ப்ரீத்தி குறித்து தகவல் எதாவது தெரியுமா என ஹர்ஷ்வர்தனிடம் சாட் செய்திருக்கிறார். அப்போது ஹர்ஷ்வர்தன், `நான் சனிக்கிழமை ப்ரீத்தியிடம் பேசினேன். நன்றாகதான் பேசினாள் என்றார். ப்ரீத்தி எங்கு போனார் எனத் தெரியுமா என்ற கேள்விக்குப் பதிலளித்த ஹர்ஷ்வர்தன், வீட்டுக்குச் செல்வதாகதான் சொன்னாள். அவள் போன் ஆஃப் செய்யப்பட்டுள்ளது. அவர் தூங்கிக் கொண்டிருப்பார் என நினைக்கிறேன். எதுவும் மோசமாக நடந்திருக்காது. 4 -5 மாதங்களுக்குப் பின்னர் நான் இப்போதுதான் பேசினேன். தற்போது தூங்கி எழும்பினால் அவரைக் காணவில்லை என்று கூறுகிறீர்கள். எனக்கு என்ன சொல்லன்னு தெரியவில்லை” என்றிருக்கிறார்.

ஆனால், போலீஸ் தரப்பில் இதில் ஹர்ஷ்வர்தன் கூறியது அனைத்தும் பொய் எனக் கூறுகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரிந்த பிறகு, ப்ரீத்தி ரெட்டி சன்னி வெமூலா என்பவரைக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. ப்ரீத்தி - ஹர்ஷ்வர்தன் சந்திப்பின்போதும் ப்ரீத்தி, நானும் சன்னியும் காதலிக்கிறோம். அவருடன் மெல்போர்ன் நகருக்குச் செல்ல இருக்கிறேன். நான் பழைய விஷயங்களைக் கடந்து வந்துவிட்டேன். நீயும் கடந்து செல்ல வேண்டும்'' என்று கூறியிருக்கிறார். 

ப்ரீத்தி கொலை செய்யப்பட்டப் பின்னர், முக நூலில் பதிவிட்டுள்ள சன்னி வெமூலா, ``ப்ரீத்தி, நாம் நிச்சயமாக மீண்டும் சந்திப்போம். அப்போது எங்கு முடிந்ததோ, அங்கிருந்து தொடர்வோம்” என பதிவிட்டிருக்கிறார். போலீஸார் கார் விபத்தில் பலியான ஹர்ஷ்வர்தன்தான் கொலை செய்தவர் என நம்புகிறது. எனினும் கடைசியாக ப்ரீத்தி வீட்டுக்குத் தொடர்புகொண்டு பேசிய பின்னர் என்ன நடந்தது என்பது தொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.