Published:Updated:

`மனைவி-குழந்தை கொடூரக் கொலை!’ -மாற்றுத்திறனாளி நபருக்கு இரட்டை ஆயுள் தண்டனை

`மனைவி-குழந்தை கொடூரக் கொலை!’ -மாற்றுத்திறனாளி நபருக்கு இரட்டை ஆயுள் தண்டனை
`மனைவி-குழந்தை கொடூரக் கொலை!’ -மாற்றுத்திறனாளி நபருக்கு இரட்டை ஆயுள் தண்டனை

காட்பாடியில், மனைவி மற்றும் பச்சிளங் குழந்தையைக் கொடூரமாகக் கொன்ற மாற்றுத்திறனாளி நபருக்கு, இரட்டை ஆயுள் தண்டனை விதித்து, நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.

வேலூர் அடுத்த காட்பாடி ரயில்வே குடியிருப்பில் உள்ள சிவசக்தி செல்வ விநாயகர் கோயில் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ் என்கிற அணிலா (38). காது கேட்காத, வாய் பேசமுடியாத மாற்றுத்திறனாளியான இவர், கூலி வேலை செய்துவந்தார். இவரின் மனைவி மீனா என்கிற மணிலா (20). இவர்களுக்கு, ஆறுமாத பெண் குழந்தை இருந்தது. இந்த நிலையில், மனைவியின் நடத்தையில் பிரகாஷுக்கு சந்தேகம் ஏற்பட்டது. குழந்தை தனக்குப் பிறக்கவில்லை என்று மனைவியிடம் சண்டை போட்டுள்ளார். இதுதொடர்பான தகராறில், கடந்த 2016-ம் ஆண்டு மே மாதம் 4-ம் தேதி அதிகாலை, பாறாங்கல்லைத் தூக்கி மனைவி மீனாவின் தலையில் போட்டு பிரகாஷ் கொடூரமாகக் கொன்றார். பச்சிளங் குழந்தையை காலைப் பிடித்து சுழற்றி தரையில் மிகக்கொடூரமாக அடித்துக் கொலை செய்தார். இச்சம்பவம் தொடர்பாக, காட்பாடி போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். 

இந்த வழக்கு விசாரணை, வேலூர் மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்றது. குற்றவாளி காது கேட்காத, வாய் பேசமுடியாத மாற்றுத்திறனாளி என்பதால், வழக்கு நிலுவையில் போடப்பட்டது. இந்த நிலையில், கடந்த 11 நாள்களுக்கு முன்பு, வேலூர் மாவட்டக் கூடுதல் விரைவு நீதிமன்றத்திற்கு, இந்த வழக்கு மாற்றப்பட்டது. குற்றவாளி தரப்பில் சிறப்பு ஆசிரியர் மணிமாறன் என்பவரை நீதிமன்றம் ஆஜர்படுத்தியது. அவர் மூலம் 11 நாளில் வழக்கு விசாரணை விரைவாக முடிக்கப்பட்டது. நீதிபதி குணசேகரன் 7-ம் தேதி தீர்ப்பளித்தார். மனைவி மற்றும் குழந்தையைக் கொடூரமாகக் கொன்ற மாற்றுத்திறனாளி பிரகாஷுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். இதையடுத்து, வேலூர் மத்திய சிறையில் பிரகாஷ் அடைக்கப்பட்டார்.