Published:Updated:

`இன்ஸ்பெக்டர் லீவ் தராததால் அம்மாவைக் காப்பாற்ற முடியவில்லை!’ - காவலரின் கடிதத்தால் பரபரப்பு

`இன்ஸ்பெக்டர் லீவ் தராததால் அம்மாவைக் காப்பாற்ற முடியவில்லை!’ - காவலரின் கடிதத்தால் பரபரப்பு
`இன்ஸ்பெக்டர் லீவ் தராததால் அம்மாவைக் காப்பாற்ற முடியவில்லை!’ - காவலரின் கடிதத்தால் பரபரப்பு

``உடல்நலம் சரியில்லாத அம்மாவைக் கவனிப்பதற்காக விடுமுறை கேட்டேன். ஆனால், இன்ஸ்பெக்டர் விடுமுறை அளிக்காமல் அலைக்கழித்தார். இதனால் அம்மாவைக் காப்பாற்ற முடியவில்லை. அம்மாவின் இறுதிச்சடங்குக்குச் செல்ல இன்ஸ்பெக்டர்தான் எனக்கு விடுமுறை அளிக்கவில்லை என்று காவலர் பொன்லிங்கம் எழுதிய கடிதம் காவல்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை ராமாபுரம் ராயலா நகர் காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றியவர் பொன்லிங்கம். இவர் கடந்த 6-ம் தேதி இன்ஸ்பெக்டர் கௌதமன் மீது பகிரங்க குற்றச்சாட்டை சுமத்தி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்தக் கடிதம் சமூகவலைதளங்களில் வைரலாகியது. உடனடியாகப் போலீஸ் உயரதிகாரிகள் பொன்லிங்கத்தை இடம்மாற்றம் செய்துள்ளனர். 

 காவலர் பொன்லிங்கம் எழுதிய கடிதம் இதுதான். 

 ``நான் ராயலா நகர் காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு பிரிவில் இரண்டாம் நிலை காவலராகப் பணிபுரிந்துவருகிறேன். நான் இதுவரை 3 இன்ஸ்பெக்டர்களிடம் பணியாற்றியுள்ளேன். அவர்கள் மரியாதையுடன் குறைகளைக் கேட்டு என்னை நடத்தினர். ஆனால், இப்போது வந்த இன்ஸ்பெக்டர் கௌதமன் என்னை மரியாதை இல்லாமல் நடத்தினார். என் தாய், உயிர்போகும் நிலையில் இருந்தபோது விடுமுறை கேட்டேன். 10 நாள்கள் இழுத்தடித்த பின்பும் விடுமுறை தராமல் காலம் கடந்து சென்றதால் என் தாயைக் காப்பாற்ற முடியவில்லை. என் தாய் சாவுக்கு சரியான நேரத்தில் விடுமுறை தராததற்கு இவரே காரணம்.

அம்மாவுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய பிறகு, மீண்டும் பணிக்கு வந்தேன். அதன் பிறகு நெல்லை மாவட்டத்துக்கு இடமாற்றம் கேட்டேன். இடமாற்ற உத்தரவு வந்த பின்பும் எனக்கு இடமாறுதலுக்கான கடிதத்தை (ரிலிவிங் ஆர்டர்) தரமாட்டேன் என்று அவதூறாகப் பேசிவிட்டார். இன்று 11.45 மணி வரை போராடிப் பார்த்தேன். அவமரியாதை மட்டுமே மிஞ்சியது. பிறகு உதவி கமிஷனர், இணை கமிஷனர் அலுவலகங்களுக்குச் சென்றேன். ஆனால், அவர்களைச் சந்திக்க முடியவில்லை. எனவே, என் தாய்க்கு சடங்கு முறை கழிக்க விடுமுறை கிடைக்காததாலும் இடமாற்றம் கிடைக்காததாலும் மனஉளைச்சலில் உள்ளேன். இதனால் தற்கொலை செய்துகொள்ளப் போகிறேன். இதற்கு இன்ஸ்பெக்டர் கௌதமன்தான் காரணம்’’ என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்தக் கடிதத்தைப் பார்த்த காவல்துறை உயரதிகாரிகள் உடனடியாகப் பொன்லிங்கத்தை இடமாற்றம் செய்து உத்தரவிட்டனர். 

இதுகுறித்து காவல்துறை உயரதிகாரி ஒருவரிடம் கேட்டதற்கு, ``காவலர் பொன்லிங்கத்துக்கு ஏன் விடுமுறை அளிக்கவில்லை என இன்ஸ்பெக்டர் கௌதமனிடம் விளக்கம் கேட்டுள்ளோம். அவர் அளிக்கும் விளக்கத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். காவலர்களின் மனஅழுத்தத்தைக் குறைக்க கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவரும் நேரத்தில் இதுபோன்ற சம்பவம், காவல்துறைக்கு கெட்ட பெயரை ஏற்படுத்துகிறது’’ என்றார். 

இதுகுறித்து இன்ஸ்பெக்டர் கௌதமனிடம் கேட்க அவரை பலமுறை தொடர்புகொண்டோம். ஆனால், அவர் பதிலளிக்கவில்லை. அவரின் விளக்கத்தையும் பரிசீலனைக்குப் பிறகு வெளியிடத் தயாராக உள்ளோம்