Published:Updated:

`டேய் உதய், இது தியாகு இல்ல வெட்டாத!’ - ஆள்மாறாட்டத்தால் சென்னையில் நடந்த கொலை

`டேய் உதய், இது தியாகு இல்ல வெட்டாத!’ - ஆள்மாறாட்டத்தால் சென்னையில் நடந்த கொலை
`டேய் உதய், இது தியாகு இல்ல வெட்டாத!’ - ஆள்மாறாட்டத்தால் சென்னையில் நடந்த கொலை

சென்னை மாங்காடு பகுதியில் ஆள்மாறாட்டத்தால் தியாகு என்பவருக்குப் பதில் தினேஷ் என்பவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை மாங்காடு பகுதியை அடுத்த கொளப்பாக்கத்தைச் சேர்ந்தவர் தினேஷ் (31). டிரைவர். இவர் கடந்த 2-ம் தேதி அந்தப் பகுதியில் மது அருந்தியுள்ளார். அப்போது பைக்கில் வந்த இரண்டு நபர்களுக்கும் தினேஷுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அதில் தினேஷ் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அதன் பிறகு பைக்கில் வந்த இரண்டு பேர் தப்பி ஓடிவிட்டனர். 

இதுகுறித்து மாங்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசந்திரன் விசாரணை நடத்தினார். தினேஷ் எதற்காகக் கொலை செய்யப்பட்டார் என்ற கோணத்தில் விசாரணை நடந்தது. கொலை நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளைப் போலீஸார் ஆய்வு செய்தனர். அப்போது பைக்கில் வரும் இரண்டு நபர்கள் தினேஷிடம் தகராறில் ஈடுபடுவதும், பிறகு அவரை வெட்டிக் கொலை செய்யும் காட்சிகள் தெளிவாகப் பதிவாகியிருந்தது. பைக்கின் நம்பரை வைத்து போலீஸார் விசாரித்தனர். அப்போது கொலை வழக்கில் துப்பு துலங்கியது. இந்த வழக்கில் நெற்குன்றத்தைச் சேர்ந்த பிரசன்னநாத் (19), தாம்பரத்தைச் சேர்ந்த உதயசந்தர் (22) ஆகிய இருவரை கைது செய்துள்ளோம். அவர்களிடம் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. 

இதுகுறித்து போலீஸார் கூறுகையில் ``டிரைவர் தினேஷ் கொலை வழக்கு குறித்து விசாரித்தபோதுதான் ஆள்மாறாட்டத்தில் இந்தச் சம்பவம் நடந்தது தெரியவந்தது. அதாவது, பிரசன்னநாத்தின் உறவினர் வீடு கொளப்பாக்கத்தில் உள்ளது. இதனால் அடிக்கடி பிரசன்னநாத் அங்கு வருவார். இந்தச் சமயத்தில் பிரசன்னநாத்தின் உறவுக்காரப் பெண் ஒருவரை தியாகு என்பவர் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதை அந்தப் பெண், பிரசன்னநாத்திடம் கூறியுள்ளார். இதனால், தியாகுவை கொலை செய்ய பிரசன்னநாத் திட்டமிட்டுள்ளார். இதற்காக உதயசந்தரை பைக்கில் அழைத்துக்கொண்டு கொளப்பாக்கத்துக்கு பிரசன்னநாத் வந்துள்ளார். 

 அப்போது அங்கு தினேஷ் மது அருந்தியுள்ளார். அவ்வழியாகச் சென்ற பிரசன்னநாத்திடம் தினேஷ், `நீ யாரு, உனக்கு எந்த ஊரு’ என்று போதையில் கேட்டுள்ளார். இதனால் தினேஷுக்கும் பிரசன்னநாத்துக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. தினேஷின் முகத்தைப் பார்க்காத உதயசந்திரன், பின்னால் இருந்து அது தியாகு என்று தவறுதலாகக் கருதி வெட்டியுள்ளார். முதல் வெட்டு விழுந்ததும், `டேய் உதய் இது, தியாகு இல்ல’ என்று பிரசன்னநாத் சொல்லியுள்ளார். அதற்குள் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த தினேஷ், சம்பவ இடத்திலேயே உயிருக்குப் போராடியுள்ளார்.

தவறுதலாக ஆளை வெட்டிவிட்டோம் என்று கருதிய பிரசன்னநாத்தும் உதய சந்திரனும் சம்பவ இடத்திலிருந்து பைக்கில் தப்பி ஓடிவிட்டனர். தகவல் கிடைத்ததும் தினேஷை மீட்டு சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதித்தோம். அங்கு சிகிச்சைப் பலனின்றி தினேஷ் இறந்துவிட்டார். இதனால் கொலை வழக்கு பதிவு செய்து பிரசன்னநாத், உதயசந்திரனை கைது செய்துள்ளோம்’’ என்றனர். 

ஆரம்பத்தில் தினேஷ் இந்தவழக்கை கையில் எடுத்த போலீஸாருக்கு கொலைக்கான காரணம் எதுவும் தெரியவில்லை. இதனால் சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்த பிறகுதான் கொலையாளிகள் குறித்த தகவல்கள் கிடைத்தன. தற்போது ஆள்மாறாட்டத்தில் தவறு செய்துவிட்டோம் என்று கைதானவர்கள் கூறியதும் போலீஸார் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதே நேரத்தில் இந்தத் தகவலைக் கேட்டு தினேஷின் குடும்பம் சோகத்தில் மூழ்கியுள்ளது 

மாங்காடு பகுதியில் ஆள்மாறாட்டத்தில் நடந்த கொலை சம்பவத்தால் பெரும் சோகம் ஏற்பட்டுள்ளது. தினேஷின் குடும்பம் அவரை இழந்து தவிக்கிறது. இந்தச் சம்பவத்தைக் கேள்விபட்ட தியாகு, எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை. அவரிடமும் விசாரணை நடத்த போலீஸார் முடிவு செய்துள்ளனர்.