Published:Updated:

மதுரையில் புதிய ரயில்வே பாதையில் பயங்கர சத்தத்துடன் வெடித்த குண்டு -போலீஸ் விசாரணை

செ.சல்மான் பாரிஸ்
மதுரையில் புதிய ரயில்வே பாதையில் பயங்கர சத்தத்துடன் வெடித்த குண்டு -போலீஸ் விசாரணை
மதுரையில் புதிய ரயில்வே பாதையில் பயங்கர சத்தத்துடன் வெடித்த குண்டு -போலீஸ் விசாரணை

மதுரையில், இன்று காலை போடிக்கு அமைக்கப்பட்டுவரும் புதிய ரயில்வே பாதையில்  பயங்கர சத்தத்துடன்  நாட்டு வெடிகுண்டு வெடித்ததால், அப்பகுதி மக்கள் மிகவும் அச்சத்துக்கு உள்ளாகியுள்ளனர். 

மதுரையில், சமீப காலமாக கொலை, கொள்ளை என குற்றச் செயல்கள் அதிகரித்துவருகின்றன. சில நாள்களுக்கு முன், அனுப்பானடி பகுதியில் ரவுடி ஒருவரிடமிருந்து பிஸ்ட்டல் கைப்பற்றப்பட்டது. சில மாதங்களுக்கு முன், கீரைத்துறைப் பகுதியில் பழிக்குப் பழி வாங்க வெடிகுண்டுகள் தயாரித்துக்கொண்டிருந்த இருவர்,  குண்டு வெடித்துப் பலியானார்கள். மதுரையில் குற்றச்செயலில் ஈடுபடுவோர் அரிவாள், கத்தியிலிருந்து மாறி  துப்பாக்கி, வெடிகுண்டு என அதிரவைத்துவருகிறார்கள்.

மதுரை மஹாலட்சுமிபுரம் பகுதியில் புதிதாக அமைத்துவரும் போடி ரயில்வே பாதை  வேலைகள்  நடைபெற்றுவருகிறது. அந்தப் பகுதியில், தண்டாவளத்துக்கு அருகில் பெரிய சத்தத்துடன் இன்று காலை வெடிகுண்டு வெடித்தது. சத்தம் கேட்டு மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.  இதுபற்றி தகவல் தெரிந்து  ரயில்வே காவல் துறையினரும், மாநகர காவல் துறை அதிகாரிகளும் உடனே சம்பவம்  நடந்த இடத்துக்கு வந்தனர். மோப்ப நாய் மூலம் ஆய்வுசெய்தார்கள். வெடித்தது நாட்டு வெடிகுண்டுதான் என்று தெரிவித்தனர். அருகிலுள்ள குடியிருப்புப் பகுதியில் விசாரணை நடத்தினார்கள். இந்தப் பகுதியில் அமர்ந்து வெடிகுண்டு தயாரித்தார்களா அல்லது இந்தப் பகுதியில் நாட்டு வெடிகுண்டு மூலம் நாச வேலை செய்ய வந்தார்களா? சம்பந்தப்பட்டவர்கள் ரவுடிகளா அல்லது பயங்கரவாதிகளா என்பதை அறிய தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர்.