Published:Updated:

‘கன்டெய்னர் லாரியுடன் இளைஞர் எரித்துக் கொலை!’ - அரக்கோணத்தில் பயங்கரம்

‘கன்டெய்னர் லாரியுடன் இளைஞர் எரித்துக் கொலை!’ - அரக்கோணத்தில் பயங்கரம்
‘கன்டெய்னர் லாரியுடன் இளைஞர் எரித்துக் கொலை!’ - அரக்கோணத்தில் பயங்கரம்

அரக்கோணம் அருகே கன்டெய்னர் லாரியுடன் இளைஞர் எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

வேலூர் மாவட்டம், அரக்கோணம் அடுத்த தக்கோலத்தில் உள்ள பெட்ரோல் பங்க்கிலிருந்து, 500 மீட்டர் தொலைவிலான சாலையோர உட்புறப் பகுதியில் இன்று அதிகாலை கன்டெய்னர் லாரி ஒன்று தீப்பிடித்து எரிவதாகத் தக்கோலம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. போலீஸார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தனர். லாரியின் கேபின் பகுதி மட்டும் எரிந்துகொண்டிருந்தது. உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்துவந்து தண்ணீரைப் பீய்ச்சியடித்து, தீயை அணைத்தனர். அதற்குள், கேபின் முழுவதுமாக எரிந்து நாசமானது.

விடிந்தபிறகு போலீஸார், லாரியை சோதனை செய்தனர். கன்டெய்னரில் பொருட்கள் ஏதும் இல்லை. ஆனால், கேபினில் கிளீனர் இருக்கைக்கு அடியில் இளைஞர் ஒருவரின் சடலம், அடையாளம் தெரியாதபடி முழுவதுமாக எரிந்த நிலையில் கரிக்கட்டையாக கிடந்தது. அரக்கோணம் டி.எஸ்.பி விஜயகுமார் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் அமுதா, முத்துராமலிங்கம், மகாலிங்கம், வெங்கடேசன், லட்சுமிபதி மற்றும் தாசில்தார் ஜெயக்குமார் ஆகியோர் விரைந்துவந்தனர். லாரி, நாமக்கல் பதிவெண்ணாக இருந்ததால், அதனைவைத்து உரிமையாளர் யார்? என்று விசாரித்தனர்.

சேலத்தைச் சேர்ந்த மார்க் என்பவர் சென்னையில் டிரான்ஸ்போர்ட் நடத்திவருகிறார். அவரின் லாரி என்பது தெரியவந்தது. அவரின் செல்போன் எண்ணைத் தொடர்புகொண்டு போலீஸார் பேசினர். அவர், ‘‘தக்கோலம் அடுத்த இருங்காட்டு கோட்டையில் உள்ள கார் உதிரிப் பாகம் தயாரிக்கும் நிறுவனத்தில் ஒப்பந்த முறையில் லாரியை வாடகைக்குவிட்டிருந்ததாக’’ கூறினார். போலீஸார், அந்த கார் உதிரிப் பாகம் தயாரிக்கும் நிறுவனத்தில் விசாரணை நடத்தியதில், ‘‘விருதுநகர் மாவட்டம், சிவகாசியைச் சேர்ந்த வேலுச்சாமி மகன் காளிராஜ் (26) என்பவர், இந்த லாரியின் ஓட்டுநர் என்று தெரியவந்தது.

இதனால், கரிக்கட்டையாக மீட்கப்பட்ட இளைஞர், ஓட்டுநர் காளிராஜாக இருக்குமோ? என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர். காளிராஜனுடைய அண்ணன் தேவன், அதே கார் உதிரிப் பாகம் தயாரிக்கும் நிறுவனத்தில் மூன்று ஆண்டுகளுக்கும் மேல் வேலைசெய்கிறார். அண்ணனின் மூலமாகத்தான், கடந்த 7 மாதங்களுக்கு முன்பு காளிராஜ், வேலைக்குச் சேர்ந்தார். நிறுவனத்தில் தங்கி தினமும் கன்டெய்னரில் லோடு ஏற்றிச்செல்வார். நேற்றிரவு 9 மணிக்கு லோடு ஏற்றுவதற்காக, லாரி தயாராக நிறுத்தப்பட்டிருந்தது. காளிராஜை, அவரின் அண்ணன் பார்த்துவிட்டு சென்றுள்ளார்.

நள்ளிரவில், கன்டெய்னர் லாரியை மடக்கி, பொருட்களைக் கொள்ளையடிப்பதற்காக மர்ம நபர்கள், ஓட்டுநரைக் கொன்று டீசல் ஊற்றி லாரியுடன் சடலத்தை எரித்திருக்கலாம்? என்கிற கோணத்தில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இளைஞரின் சடலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக, அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இந்த கொடூர சம்பவம், அரக்கோணத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.