Published:Updated:

``ஆளும்கட்சியே துணை நிற்கிறது” -பொள்ளாச்சி விவகாரத்தில் சீறிய ஸ்டாலின்

``ஆளும்கட்சியே துணை நிற்கிறது” -பொள்ளாச்சி விவகாரத்தில் சீறிய ஸ்டாலின்
``ஆளும்கட்சியே துணை நிற்கிறது” -பொள்ளாச்சி விவகாரத்தில் சீறிய ஸ்டாலின்

``தமிழ்நாடே குலைநடுங்கும் வகையில் பொள்ளாச்சியில் நடைபெற்றுள்ள பாலியல் கொடுமையில் ஈடுபட்டுள்ள குற்றவாளிகளை காப்பாற்றிட ஆளுங்கட்சியே போராடுவது கடும் கண்டனத்துக்குரியது” எனத் தி.மு.க தலைவர் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். 

பொள்ளாச்சியில் அழகான மற்றும் பணக்கார பெண்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட பாலியல் கொடுமைகள் வெளிச்சத்துக்கு வந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவத்தில் ஆளும் கட்சியினருக்கும் தொடர்பிருப்பதாக வெளியான தகவல்கள், மேலும் அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளன. ஆனால், ஆளுங்கட்சியினர் இந்தத் தகவலை மறுத்து வருகின்றனர்.   

இந்நிலையில் தி.மு.க தலைவர் ஸ்டாலின், ``பொள்ளாச்சியில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவிகளைக் காமுகர்கள் கூட்டம் ஒன்று கொடூரமான பாலியல் வன்முறைக்குட்படுத்தியிருக்கும் அதிர்ச்சி தரும் செய்தியும் அது தொடர்பான வீடியோ காட்சிகளும் வெளியாகியுள்ளன. சில நிமிடங்களே நீடிக்கும் அந்த வீடியோவைப் பார்க்க முடியாத அளவுக்கு அபலை மாணவிகள் அலறித் துடிக்கும் காட்சிகள் உள்ளன. இந்தக் கொடூர சம்பவத்தின் பின்னணியில் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள் துணையாக இருப்பதும், நக்கீரன், ஜூனியர் விகடன் போன்ற பத்திரிகைகளில் வெட்ட வெளிச்சமாக்கப்பட்டுள்ளன. பொள்ளாச்சிப் பகுதியில் பொதுமக்களும் திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்களும் போராட்டங்களை நடத்தியும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
நீண்டநாள்களாக நடைபெறும் இந்த மிகப் பெரிய அளவிலான பாலியல் வன்முறையில் ஒரு துளி மட்டுமே வெளிவந்துள்ளது.

காவல்துறை தரப்பிலும் போதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை. சிக்கியவர்களைத் தப்பவிடுவதற்காக ஆளுந்தரப்பு பகீரத முயற்சி எடுத்து வருகிறது. தமிழ்நாடே குலை நடுங்கும் வகையில் இளம்பெண்களைச் சீரழிக்கும் மிக மோசமான ஒரு கலாசாரத்துக்கு ஆளுங்கட்சியான அ.தி.மு.க துணைபோவது கடும் கண்டனத்துக்குரியது. தவறு செய்தவர்கள் தண்டனையிலிருந்து தப்ப முடியாது. பாதிக்கப்பட்ட மாணவிகளின் எதிர்கால நலன் பாதுகாக்கப்படும் வகையில் விசாரணை நடைபெற வேண்டும். 

குற்றவாளிகள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும். அ.தி.மு.க ஆட்சியின் 8 ஆண்டுக் காலத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பில்லை என்பதற்குச் சென்னை தொடங்கி பொள்ளாச்சி வரை ஏராளமான கொடூர நிகழ்வுகள் நடந்துள்ளன. பொள்ளாச்சியில் நடந்திருப்பது பேரதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இதை வலியுறுத்தி, தி.மு.கழகம் சட்டரீதியாகவும் மக்கள் மன்றத்திலும் தனது போராட்டத்தை மேற்கொள்ளும்” என்றார்.