Published:Updated:

`உனக்கு ஏன்தான் இந்தக் கேவலமான சிந்தனை வந்தது?'- மகனைக் கொன்ற கணவனை காட்டிக் கொடுத்த மனைவி 

`உனக்கு ஏன்தான் இந்தக் கேவலமான சிந்தனை வந்தது?'- மகனைக் கொன்ற கணவனை காட்டிக் கொடுத்த மனைவி 
`உனக்கு ஏன்தான் இந்தக் கேவலமான சிந்தனை வந்தது?'- மகனைக் கொன்ற கணவனை காட்டிக் கொடுத்த மனைவி 

``உனக்கு ஏன்தான் இந்தக் கேவலமான சிந்தனை வந்தது?'' என்று கதறியபடி கூறிய மனைவி, மகனைக் கொலை செய்த கணவனைப் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். சென்னையில் நடந்த இந்தச் சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

சென்னை வளசரவாக்கத்தை அடுத்த ராமாபுரம், செந்தமிழ்நகரைச் சேர்ந்தவர் சக்திவேல் (50). பெயின்டராக வேலை பார்த்துவருகிறார். இவரின் மனைவி வேதவள்ளி. இவர்களுக்கு சதீஷ் (22) என்ற மகனும் 18 வயதில் ஒரு மகளும் உள்ளனர். சதீஷ், தச்சுத்தொழிலாளியாக வேலை பார்த்துவந்தார். இந்த நிலையில் நேற்றிரவு அனைவரும் வீட்டில் தூங்கினர். அதிகாலை 3 மணியளவில் சதீஷின் அலறல் சத்தம் கேட்டு வேதவள்ளி கண்விழித்தார். அப்போது கையில் ரத்தக்கறை படிந்த கத்தியுடன் சக்திவேல் நின்றுகொண்டிருந்தார். அதைப்பார்த்த வேதவள்ளி அதிர்ச்சியடைந்து சத்தம் போட்டார். அவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் கண்விழித்தனர். 

வேதவள்ளியை கத்தியைக் காட்டி மிரட்டிய சக்திவேல் வீட்டின் கதவைத் திறந்து தப்பி ஓட முயன்றார். அதற்குள் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களின் உதவியோடு சக்திவேல் பிடிக்கப்பட்டு ராயலாநகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார் வேதவள்ளி. இன்ஸ்பெக்டர் கௌதமன் சக்திவேலிடம் விசாரித்தார். அப்போது அவர் கூறிய தகவல் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தது. 

இதுகுறித்து போலீஸார் கூறுகையில் ``சில மாதங்களாக வேதவள்ளியின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த சக்திவேல் அவரை தவறாக பேசி வந்துள்ளார். இதனால் வீட்டில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. குறிப்பாக கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு இருவரும் பேசாமல் இருந்தனர். அதன்பிறகும் வீட்டில் அடிக்கடி சண்டை சச்சரவாகவே இருந்துள்ளது. 

வேதவள்ளி, சென்னையின் அருகே உள்ள பிரபலமான தனியார் கல்லூரி ஒன்றில் வேலை பார்த்துவருகிறார். சக்திவேலின் அவதூறான பேச்சால் அவமானத்தைச் சந்தித்துவந்த வேதவள்ளி, குடும்ப நலன்கருதி அமைதியாக இருந்துவந்துள்ளார். இந்த நிலையில்தான் வேதவள்ளியும் அவரின் மகன் சதீஷூம் பேசுவதை தவறாகக் கருதியுள்ளார் சக்திவேல். இதனால் குடும்பத்தில் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அதை உறவினர்கள் தட்டியும் கேட்டுள்ளனர். சக்திவேலுக்கு புத்திமதியும் கூறியுள்ளனர். இருப்பினும் சக்திவேல் மாறவில்லை. 

சம்பவத்தன்று இரவு சதீஷ் விவகாரம் தொடர்பாக வேதவள்ளியிடம் சக்திவேல் தகராறு செய்துள்ளார். அம்மாவுக்கு ஆதரவாக சதீஷ் பேசியுள்ளார். அதன்பிறகு அனைவரும் தூங்கச் சென்றுவிட்டனர். ஆனால், சக்திவேல் தூங்கவில்லை. வேதவள்ளியின் மீதுள்ள ஆத்திரத்தில் பெற்ற மகன் என்றுகூட பார்க்காமல் தூங்கிக்கொண்டிருந்த சக்திவேலை கத்தியால் சரமாரியாகக் குத்தியுள்ளார். கத்திக் குத்து விழுந்த சதீஷ், அலறியுள்ளார். அப்போது சக்திவேல், சதீஷின் மேல் அமர்ந்து கொண்டிருந்தார். அவரின் கையில் ரத்தக்கறை படிந்த கத்தியிருந்தது. அப்பா, வேண்டாம் விட்டுவிடுங்கள் என்று சதீஷ் கெஞ்சியபோதும் அந்தவார்த்தைகள் சக்திவேலின் காதில் விழவில்லை. ஆத்திரம் தீரும்வரை சதீஷை கத்தியால் குத்தினார் சக்திவேல். 

சதீஷின் அலறல் குரல் கேட்டுதான் வேதவள்ளி திடுக்கிட்டு கண்விழித்துள்ளார். ஆனால், அதற்குள் சதீஷ் உடலிலிருந்து அதிகளவில் ரத்தம் வெளியேறியது. சக்திவேலைப் பிடித்து எங்களிடம் ஒப்படைத்தனர். சதீஷை, மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அங்கு அவர் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். மகனைக் கொலை செய்த வழக்கில் சக்திவேலை கைதுசெய்துள்ளோம் "என்றனர். 

மகனைக் கொலை செய்ததை கண்ணால் பார்த்த வேதவள்ளி,  அவனை விடுடா என்று சதீஷைக் காப்பாற்ற முயன்றார். ஆனால், அதற்குள் எல்லாம் முடிந்துவிட்டது. இதனால் ஆத்திரமடைந்த வேதவள்ளி,  `உனக்கு ஏன்தான் இந்தக் கேவலமான சிந்தனை வந்தது. இப்படி பண்ணீட்டீயே. நாங்கள் என்ன பாவம் செய்தோம்' என்று கதறி அழுதார். அவருக்கு ஆறுதல் கூற முடியாமல் உறவினர்களும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களும் தவித்தனர். 

காவல் நிலையத்திலிருந்த சக்திவேல், எதுவும் பேசாமல் அமைதியாக இருந்துள்ளார். போலீஸார் விசாரித்தபோதுகூட வேதவள்ளி என்னை ஏமாற்றிவிட்டாள் என்று கூறியுள்ளார். நீண்ட நேரத்துக்குப்பிறகு சக்திவேல், மனமுடைந்து கதறி அழுதுள்ளார். எல்லாம் முடிந்தபிறகு கதறி அழுவதால் என்ன பயன் என்று காவலர்கள் சக்திவேலிடம் கூறியுள்ளனர். 

தற்போது சென்னை அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக சதீஷின் சடலம் வைக்கப்பட்டுள்ளது. சந்தேகத்தால் சக்திவேலின் குடும்பம் நிம்மதி இழந்துள்ளது. குடும்பத்தலைவனான சக்திவேல், சிறையில் அடைக்கப்பட, பெற்ற மகன் சதீஷை பறிகொடுத்த வேதவள்ளிக்கும் அவரின் மகளுக்கும் ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை. 

ராமாபுரத்தில் பெற்ற மகனை சந்தேகத்தால் தந்தையே கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.