Published:Updated:

``100 சதவிகிதம் அரசியல் வாரிசுகளுக்குத் தொடர்பில்லை" - பொள்ளாச்சி வழக்கில் கோவை எஸ்.பி பேட்டி!

``100 சதவிகிதம் அரசியல் வாரிசுகளுக்குத் தொடர்பில்லை" - பொள்ளாச்சி வழக்கில் கோவை எஸ்.பி பேட்டி!
``100 சதவிகிதம் அரசியல் வாரிசுகளுக்குத் தொடர்பில்லை" - பொள்ளாச்சி வழக்கில் கோவை எஸ்.பி பேட்டி!

பொள்ளாச்சி வழக்கில், 100 சதவிகிதம் அரசியல் வாரிசுகளுக்குத் தொடர்பில்லை என்று கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் கூறியுள்ளார்.

பொள்ளாச்சியில் பெண்களை பாலியல் துன்புறுத்தல் செய்து, பணம் பறித்த கும்பல் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளைக் கிளப்பியுள்ளது. தேர்தல் களத்தில் அனலைக் கிளப்பியுள்ள இந்த வழக்கு தொடர்பாக எதிர்க்கட்சிகள் கண்டன குரலைப் பதிவு செய்து வருகின்றன.

கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் செய்தியாளர்களிடம், ``பொள்ளாச்சியில், பெண்ணைத் துன்புறுத்தல் செய்த வழக்கில், வழக்குப் பதிவு செய்யப்பட்டு சபரீஷ், சதீஸ், வசந்த குமார் ஆகிய 3 பேர் பிப்ரவரி 24-ம் தேதி கைது செய்யப்பட்டார். வழக்கின் முக்கியக் குற்றவாளியான திருநாவுக்கரசு கடந்த வாரம் கைது செய்யப்பட்டார். புகார்தாரரின் சகோதரரை மிரட்டியதற்காக, நாகராஜ், செந்தில், வசந்தகுமார் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெண்ணைத் துன்புறுத்தியது தொடர்பாக கைது செய்யப்பட்ட 4 பேர் மீதும், குண்டர் தடுப்புச் சட்டப் பிரிவில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் வேறு யாருக்கும் தொடர்பில்லை. அரசியல் தொடர்பும் இல்லை. இது தொடர்பாக தவறான செய்தி பரப்புவது தவறு. அப்படிச் செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

இதில், அரசியல் வாதிகள் சம்பந்தப்பட்டிருப்பதாக உள்நோக்கத்துடன் செய்திகள் பரப்பப்படுகின்றன. அது தவறான செய்திகள். இதில், அ.தி.மு.க-வைச் சேர்ந்தவர்கள் கைகலப்பு வழக்கில்தான் சம்பந்தப்பட்டுள்ளார். பெண்ணைத் துன்புறுத்திய வழக்கில் அவர் ஈடுபடவில்லை. இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை ஜாமீனில் வெளியிடக் காவல்துறை தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக சட்ட வல்லுநர்களிடம் ஆலோசனை நடத்தி வருகிறோம்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 4 கைப்பேசிகளை பறிமுதல் செய்தோம். அதில் நான்கு வீடியோக்கள்தான் இருந்தன. இதில், பாதிக்கப்பட்ட பெண்கள் நேரிடையாக வந்து புகார் தரலாம். அவர்களின் விவரங்கள் வெளியிடாமல் ரகசியம் காக்கப்படும். புகார் தரும் பெண்களுக்குக் காவல்துறை முறையான பாதுகாப்பு வழங்கும். ஏற்கெனவே, இதுதொடர்பாக காவல்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தவறுதலாக பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் வந்துவிட்டது. அதற்கு வருந்துகிறோம்.

இந்தக் கும்பல் பணம் பறித்துள்ளது தொடர்பாக யாரேனும் புகார் கொடுத்தால், கூடுதல் பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்படும். 100 சதவிகிதம் இதில் அரசியல் வாரிசுகளுக்குத் தொடர்பு இல்லை. கைது செய்யப்பட்டுள்ள 4 பேருக்குத்தான் இதில் தொடர்பிருக்கிறது. திருநாவுக்கரசு கல்லூரிப் பருவத்திலிருந்தே, இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். அவருக்கு, சேலத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் உதவி செய்துள்ளார். அவரிடமும் விசாரணை நடத்தி வருகிறோம். ஆனால், எத்தனை பெண்கள் என்பது குறித்து விவரங்கள் இல்லை.  சமூகவலைதளங்களில் பரவி வரும் வீடியோவை, நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

வீடியோவில் பாதிக்கப்பட்டுள்ள பெண்களிடம் வாக்கு மூலம் பெறவுள்ளோம். பாதிக்கப்பட்ட பெண் பலாத்காரம் செய்யப்படவில்லை. அவர் உடல்ரீதியாகத் துன்புறுத்தப்பட்டுள்ளதாகத்தான் புகார் பெறப்பட்டுள்ளது. அதனால், பாலியல் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யவில்லை. இந்த வழக்கில் காவல்துறை சரியான கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறது. செய்தியாளர்கள் சந்திப்பு நடத்துவதில் எந்த உள்நோக்கமும் இல்லை. சமூக வலைளதங்களில் இது குறித்து தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன. அதுகுறித்து விளக்கம் கொடுப்பதற்குத்தான் செய்தியாளர்களைச் சந்திக்கிறேன். அரசியல் அழுத்தம் காரணமாக செய்தியாளர்களைச் சந்திக்கவில்லை.

இந்த விஷயம் தொடர்பாக, பொள்ளாச்சியில் நாளை தி.மு.க நடத்த உள்ள போராட்டத்துக்கு நாங்கள் அனுமதி வழங்க மாட்டோம்” என்றார்.