Published:Updated:

``இது திட்டமிட்ட கொலை?” - டெல்லி மேம்பால விபத்து வழக்கில் திடுக் திருப்பம்

``இது திட்டமிட்ட கொலை?” - டெல்லி மேம்பால விபத்து வழக்கில் திடுக் திருப்பம்
``இது திட்டமிட்ட கொலை?” - டெல்லி மேம்பால விபத்து வழக்கில் திடுக் திருப்பம்

டெல்லியில் கடந்த ஞாயிற்றுக் கிழமை மாலை கோயிலுக்குச் சென்றுவிட்டுத் திரும்பிய உபேந்திர மிஷ்ரா என்பவரின் கார் தீப்பிடித்து எரிந்தது. இதையடுத்து காரை ஓட்டிவந்த உபேந்திரா உடனடியாகக் காரை சாலை ஓரமாக நிறுத்திவிட்டு முன் இருக்கையில் அமர்ந்திருந்த தன் குழந்தையுடன் வெளியேறிவிட்டார். இந்த விபத்தில் மிஷ்ராவின் மனைவி ரஞ்சனா மற்றும் ரிதி, நிக்கி என்ற இரு குழந்தைகளும் உடல் கருகி உயிரிழந்தனர். 

உபேந்திரா மற்றும் அவரது குடும்பத்தினர் கல்கஜி கோயிலுக்குச் சென்றுவிட்டு வீடுதிரும்பும் போது டெல்லி, அக்‌ஷர்தம் (Akshardham) மேம்பாலத்தின் மீது கார் தீப்பிடித்து எரிந்தது. இந்நிலையில், கடந்த 13 வருடத்தில் நேற்று முன்தினம் தான் மனைவி ரஞ்சனாவை, உபேந்திரா முதல்முறையாக வெளியில் அழைத்துச் சென்றதாக ரஞ்சனாவில் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து ப்ராஜ் கிஷோர் தீக்‌ஷித் என்பவர் பேசும் போது, `ரஞ்சனாவுக்கும், உபேந்திராவுக்கும் 2005-ம் ஆண்டு திருமணம் நடந்தது. உபேந்திரா ஒரு கார் ஷோரூமில் வேலை செய்கிறார். ரஞ்சனா இல்லத்தரசியாக உள்ளார். இருவருக்கும் திருமணம் முடிந்த பிறகு தற்போதுதான் முதல்முறையாக வெளியில் சென்றுள்ளனர். 

இவர்களுக்கு முதலில் பெண் குழந்தை பிறந்தது அப்போதிலிருந்தே உபேந்திரா, ரஞ்சனாவை ஆண் குழந்தை வேண்டும் எனக் கேட்டு அதிகமாகத் துன்புறுத்திவந்தார். இந்த விஷயத்தைப் பல முறை ரஞ்சனா எங்களிடம் கூறியுள்ளார். இதை விபத்து என எங்களால் ஏற்க முடியாது. இது திட்டமிட்ட கொலை. இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்த வேண்டும் எனக் காவல்துறையினரை நாங்கள் வலியுறுத்தியுள்ளோம். குறிப்பாகக் காரை நன்கு பரிசோதிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளோம்’ என லால்பகதூர் சாஷ்த்ரி மருத்துவமனையில், உடல் கூறாய்வு நடக்கும் அறைக்கு வெளியிலிருந்து தெரிவித்துள்ளார். 

ரஞ்சனாவின் மற்றோர் உறவினரான ஷ்யாம், விபத்து பற்றி கூறியதாவது, `உபேந்திரா பலமுறை ரஞ்சனாவை அடித்துத் துன்புறுத்தியுள்ளார். கொன்றுவிடுவேன் எனப் பல முறை மிரட்டியுள்ளார். தற்போது அவரே காரின் கேஸ் சிலிண்டரைத் திறந்துவிட்டு தீப்பிடிக்க வைத்திருக்க வேண்டும். உபேந்திரா, ரஞ்சனாவை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் அதிகம் துன்புறுத்தியுள்ளார். அவருக்கு வேறொரு பெண்ணுடன் நட்பு உள்ளது. இவை அனைத்தும் எங்களுக்குத் தெரியும். இருந்தும் உபேந்திராவை எங்களால் எதுவும் செய்யமுடியவில்லை. அவன் ரஞ்சனாவையும், குழந்தைகளையும் எதாவது செய்துவிடுவான் என்ற பயத்தில் இருந்தோம்’ எனக் கூறியுள்ளார்.

`நான் ஏன் என் மனைவி மற்றும் குழந்தைகளை கொலை செய்ய வேண்டும். அவர்கள் மீது நான் மிகுந்த அன்பு வைத்துள்ளேன். காரின் டேஸ் போர்டில் தீ பிடித்தது இது வெறும் விபத்து மட்டுமே. என் குடும்பத்தினரை மீட்க எவ்வளவோ முயன்றேன் இருந்தும் என்னால் காப்பாற்றமுடியவில்லை. இந்த விபத்தில் எனக்கும் சில காயங்கள் ஏற்பட்டுள்ளது. என் கண் முன்னே மனைவியும், குழந்தைகளும் எரிந்து சாம்பலாகியுள்ளனர். என்னால் அவர்களைக் காப்பாற்ற முடியவில்லை. 

எனக்கு விடுமுறை என்பதால் சகோதரரின் உதவியுடன் தனியார் நிறுவனத்திடமிருந்து இந்த காரை குத்தகைக்கு (lease) எடுத்தேன். வெள்ளி முதல் திங்கள் வரை நான்கு நாள்களுக்குப் பணம் கொடுத்திருந்தேன். இது டட்சன் கோ (Datsun Go) 2018 மாடல் கார். விடுமுறையில் என் குடும்பத்தினரை கல்கஜி கோயிலுக்கு அழைத்துச் சென்ற போது இப்படி நடந்துவிட்டது’ என காரை ஓட்டி வந்த உபேந்திரா தெரிவித்துள்ளார். 

டி.சி.பி ஜஸ்மீத் சிங் பேசும் போது, `இது கொலையாக இருக்கலாம் என எங்களுக்குச் சந்தேகம் உள்ளது. அந்தக் கோணத்திலும் நாங்கள் விசாரணை நடத்தவுள்ளோம். அது பற்றி தற்போது விரிவாக எதுவும் கூற முடியாது விசாரணை நடைபெற்று வருகிறது. கார் தடயவியல் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. அதன் அறிக்கை வந்த பிறகே விரிவான விசாரணை தொடங்கும்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.