Published:Updated:

``கஞ்சா போதையில் கைதிகள்; பார்வையாளர்கள் போர்வையில் வியாபாரம்!’’- சர்ச்சையில் வேலூர் சிறை 

``கஞ்சா போதையில் கைதிகள்; பார்வையாளர்கள் போர்வையில் வியாபாரம்!’’- சர்ச்சையில் வேலூர் சிறை 
``கஞ்சா போதையில் கைதிகள்; பார்வையாளர்கள் போர்வையில் வியாபாரம்!’’- சர்ச்சையில் வேலூர் சிறை 

வேலூர் சிறையில் கைதியைப் பார்க்கவந்த சிலர் கஞ்சாவை மறைத்துக் கொடுத்தனர். சிறை அதிகாரிகள், அதைக் கண்டுபிடித்து விசாரணை நடத்திவருகின்றனர். இதுபோன்ற தொடரும் விதிமீறல்களால், வேலூர் சிறை சர்ச்சையில் சிக்கியிருக்கிறது. 

வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள தண்டனைக் கைதிகளை வாரத்தில் செவ்வாய் மற்றும் வியாழன் ஆகிய இரண்டு நாள்கள் பார்வையாளர்கள் சந்திக்கிறார்கள். விசாரணைக் கைதிகளை திங்கள், புதன், வெள்ளி ஆகிய மூன்று நாள்கள் சந்தித்துப் பேசுகிறார்கள். வேலூர் சிறையில் ஏற்கெனவே கஞ்சா, சிகரெட் போன்ற சிறை விதிகளுக்குப் புறம்பான போதைப் பொருள்களை கைதிகள் பயன்படுத்துவதாகவும், சிறைத் துறையினர் சிலரே பணம் பெற்றுக்கொண்டு போதைப் பொருள்களை வாங்கிக் கொடுப்பதாகவும் புகார் கூறப்பட்டுவருகிறது.

இந்த நிலையில், வேலூர் அடுத்த ரத்தினகிரியைச் சேர்ந்த சதீஷ் என்பவர், கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டு, வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். விசாரணைக் கைதியான அவரைப் பார்க்க சிறைக்கு அவரின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அடிக்கடி வந்து செல்கின்றனர். நேற்றும் கைதி சதீஷைப் பார்ப்பதற்காகச் சிலர் வந்தனர். சுமார் ஒரு மணி நேரம் சதீஷிடம் பேசிவிட்டு, உணவுப் பொருள்கள், துணிகளைக் கொடுத்துவிட்டு அவர்கள் சென்றனர். சிறை அதிகாரிகள், அந்தப் பொருள்களை சோதனை செய்தனர். 

சட்டைப் பையில் கஞ்சா பொட்டலம் மறைத்துவைத்திருந்ததைக் கண்டுபிடித்தனர். கஞ்சாவைப் பறிமுதல் செய்த சிறைத்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். பார்வையாளர்கள் போர்வையில், கைதிகளுக்குக் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களை விநியோகம் செய்வது, இது முதல்முறை கிடையாது. கைதிகளுக்கு வேண்டப்பட்ட சிறை அலுவலர்கள், கஞ்சாவைப் பார்த்திருந்தால் கண்டுகொள்ளாமல் இருந்திருப்பார்கள். நேர்மையான ஒரு சில அலுவலர்களிடம் சிக்கியதால், விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளதாகச் சிறை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தொடரும் இதுபோன்ற விதிமீறல்களால், வேலூர் சிறை சர்ச்சையில் சிக்கியிருக்கிறது. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினி, முருகனைத் துன்புறுத்துவதாக, சிறை அதிகாரிகள் மீது புகார் எழுந்தன. இது சம்பந்தமாக, ``முன் விடுதலையைத் தடுக்க ஆளுநர் மாளிகை சூழ்ச்சி! வேலூர் சிறையில் கதறும் முருகன்’’ என்ற தலைப்பில் ஜூனியர் விகடனில் விரிவான கட்டுரை வெளியிட்டிருந்தோம். நளினி, முருகன் விவகாரத்தில் முழு மூச்சுடன் செயல்படும், சிறைத் துறை நிர்வாகம், சிறைக்குள் போதைப் பொருள்களை தடுக்க நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.