Published:Updated:

தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்குக் கடத்த முயன்ற 1,500 கிலோ பதப்படுத்தபட்ட கடல் அட்டைகள் பறிமுதல்

தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்குக் கடத்த முயன்ற 1,500 கிலோ பதப்படுத்தபட்ட கடல் அட்டைகள் பறிமுதல்
தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்குக் கடத்த முயன்ற 1,500 கிலோ பதப்படுத்தபட்ட கடல் அட்டைகள் பறிமுதல்

தூத்துக்குடியிலிருந்து ராமேஸ்வரம் கடல் வழியாக இலங்கைக்கு கடத்த இருந்த ரூ.17 லட்சம் மதிப்புள்ள 1,500 கிலோ கடல் அட்டைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஒருவர் கைது செய்து செய்யப்பட்டுள்ளார்.  

வங்காள விரிகுடா கடல் பகுதியில் உள்ள மன்னார் வளைகுடா கடல்பகுதி பாதுகாக்கப்பட்ட உயிரிக் கோளப்பகுதியாகும். உலகில் உள்ள பவளப்பாறைகளில் 17 சதவிகிதம் மன்னார் வளைகுடா பகுதியாக உள்ளது. இதில், பல்வேறு அரிய வகையான கடல்வாழ் உயிரினங்கள் காணப்படுகின்றன. இந்திய கடல்வளத்தைப் பாதுகாக்கும் வகையில், இப்பகுதி பாதுகாக்கப்பட்ட கடல்பூங்காவாக மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு கடற்பசு, கடல்குதிரை, பால்சுறா, கடல் அட்டை உள்ளிட்ட 53 வகையான அரிய கடல்வாழ் உயிரினங்களைப் பிடிக்கவும் வைத்திருக்கவும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தடை விதித்துள்ளது.

இருந்தபோதிலும், இந்தத் தடையை மீறி பலவித மருந்துகள் தயாரிப்பதற்காகக் கடல் அட்டைகளை சட்டவிரோதமாகப் பிடித்து உயிருடனும் பதப்படுத்தியும்  இலங்கைக்குக் கடத்தப்படுவது தொடர்கதையாக நடந்து வருகிறது. இதைத் தடுக்கும் பணியிலும் வன உயிரினப் பாதுகாப்புத்துறை, கடலோர பாதுகாப்புக் குழுமம் உள்ளிட்ட பலரும் தீவிரக் கண்காணிப்பிலும் ஈடுபட்டு வந்தாலும் கடல் அட்டைக் கடத்தல் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன.

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகில் உள்ள முடிவைத்தானேந்தல் கிராமத்தில் ராமா் என்பவருக்குச் சொந்தமான நிலத்தில், சட்ட விரோதமாகக் கடல் அட்டைகள் பதப்படுத்தப்பட்டு வருவதாக தூத்துக்குடி காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில், மாவட்ட எஸ்.பி முரளி ரம்பா உத்தரவின் பேரில், புதுக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் (பொ) ஜெயலெட்சுமி,  உதவி ஆய்வாளர் அந்தோணிராஜ் மற்றும் போலீஸார் அடங்கிய குழு  அந்த இடத்துக்கு விரைந்து சென்றனர்.  

அங்கு, டிரம்களில் கடல் அட்டை பதப்படுத்தும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த லூர்தம்மாள்புரத்தைச் சேர்ந்த மன்சூல் அலி என்பவரை கைது செய்தனர். அத்துடன், டிரம்களிலும் சாக்குகளிலும் பதப்படுத்தி வைக்கப்பட்டிருந்த 1,500 கிலோ கடல் அட்டைகளைப் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட மன்சூர் அலியிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பதப்படுத்தப்பட்ட இந்தக் கடல் அட்டைகள், ராமேஸ்வரத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து இலங்கைக்குக் கடத்தப்பட இருந்தது தெரியவந்தது. மேலும், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட இருந்த பைக் மற்றும் ஆம்னி வேன் ஆகியவற்றைப் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

இந்தக் கடல் அட்டைகளின் இந்திய மதிப்பு, ரூ.17 லட்சம் எனவும், சர்வதேச சந்தையில் சுமார் ரூ.1 கோடி வரையில் விற்கப்படலாம் என போலீஸார் தெரிவித்தனர். பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகளை எஸ்.பி முரளி ரம்பா பார்வையிட்டார். பின்னர், போலீஸார் பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகள் மற்றும் கைது செய்யப்பட்ட மன்சூர் அலியை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். கடந்த 7-ம் தேதி ரூ.4 லட்சம் மதிப்புள்ள 210 கிலோ பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், இன்று மீண்டும் 1,500 கிலோ கடல் அட்டை பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.