Published:Updated:

நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை: பெண் துணை வட்டாட்சியர் கைது!

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நடத்திய சோதனையில், 5,000 ரூபாய் லஞ்சம் பெற்ற பாளையங்கோட்டை துணை வட்டாட்சியர் விஜி என்பவர் கைது செய்யப்பட்டார்.

நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை:  பெண் துணை வட்டாட்சியர் கைது!
நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை: பெண் துணை வட்டாட்சியர் கைது!

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நடத்திய சோதனையில், 5,000 ரூபாய் லஞ்சம் பெற்ற பாளையங்கோட்டை துணை வட்டாட்சியர் விஜி என்பவர் கைது செய்யப்பட்டார். 

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பாளையங்கோட்டை வட்டாட்சியர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் சாதிச் சான்றுகள், வருமானச் சான்றுகள், பட்டா மாறுதல் உள்ளிட்ட சான்றிதழ்களைப் பெறுவதற்கும் பல்வேறு ஒப்பந்தங்கள் அனுமதி பெறுவதற்கும் லஞ்சம் கேட்பதாகத் தொடர்ந்து  புகார்கள் தெரிவிக்கப்பட்டு வந்தன. 

இந்த நிலையில், தாமிரபரணி ஆற்றில் சட்டவிரோதமாக  மணல் கடத்துவதற்கு துணை வட்டாட்சியர் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. சீவலப்பேரியைச் சேர்ந்த ரவி என்பவர் துணை வட்டாட்சியர் விஜி என்பவரிடம் பணம் கொடுக்கச் சம்மதித்துள்ளார். ஆனால், துணை வட்டாட்சியர் தொடர்ந்து பணம் கேட்டு நச்சரித்ததால் அவர் மீது லஞ்ச ஒழிப்புப் போலீஸாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, ரவி என்பவர் ரூ.5,000 லஞ்சப் பணத்தை துணை வட்டாட்சியரிடம் கொடுத்தபோது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புப் போலீஸார் அவரை கையும் களவுமாகப் பிடித்தனர்  பின்னர் அவரிடம், லஞ்ச ஒழிப்புத் துறை துணைக் கண்காணிப்பாளர் சுப்பையா தலைமையில்  தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அலுவலகத்தில் மட்டும் அல்லாமல் அவரின் வீட்டிலும் போலீஸார் சோதனை நடத்தினார்கள். அதைத் தொடர்ந்து அவரிடம் சுமார் 4 மணி நேரம் விசாரணை நடைபெற்றது 

அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் சோதனை நடத்தியபோது, அலுவலகத்துக்குள் வெளியாட்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை. அதேபோல், அலுவலகப் பணியாளர்கள் யாரையும் வெளியே செல்லவும் அனுமதிக்கப்படவில்லை. விசாரணைக்குப் பின்னர் துணை வட்டாட்சியர் விஜியை போலீஸார் கைது செய்தனர். பின்னர், அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கொக்கிரகுளம் மகளிர் சிறைச்சாலையில் அடைத்தனர்

ஆட்சியர் அலுவலக வளாகத்தில்  லஞ்சம் தலைவிரித்தாடும் விவகாரம் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, ஆட்சியர் அலுவலக வளாகத்தில், நம்பர் பிளேட்டுகள் உடைக்கப்பட்ட நிலையில், ஒரு மர்ம கார் நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து பொதுமக்கள் போலீஸாருக்கு தகவல் அளித்தும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காத சம்பவம் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.