Published:Updated:

மிரட்டப்பட்டார்களா பாதிக்கப்பட்டவர்கள்? - பொள்ளாச்சி வழக்கு ஆடியோ வெளியான பின்னணி

மிரட்டப்பட்டார்களா பாதிக்கப்பட்டவர்கள்? - பொள்ளாச்சி வழக்கு ஆடியோ வெளியான பின்னணி
மிரட்டப்பட்டார்களா பாதிக்கப்பட்டவர்கள்? - பொள்ளாச்சி வழக்கு ஆடியோ வெளியான பின்னணி

பொள்ளாச்சி வழக்கில், பாதிக்கப்பட்டவர்கள் மிரட்டப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகம் முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள பொள்ளாச்சி பாலியல் வழக்கில், ஆளுங்கட்சி பிரமுகர்களுக்கு தொடர்பு இருப்பதாகக் கூறப்பட்டு வருகிறது. மேலும், தி.மு.க பிரமுகர்கள் சிலரும் குற்றவாளிகளுக்கு நெருங்கிய நண்பர்கள் என்று கூறப்படுகிறது. குறிப்பாக, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனின் மகன் பெயரும் இதில் அடிபட்டு வந்தது. இதையடுத்து, அ.தி.மு.க சார்பில், அவதூறு பரப்புவதாக போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சி ஜெயராமனும் தன் மீதான குற்றச்சாட்டுகளை திட்டமிட்டு மறுத்து வருகிறார். மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நான்தான் உதவி செய்தேன் என்றும் அவர் கூறி வருகிறார். இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண் பேசியதாக நேற்று ஒரு ஆடியோ வெளியானது. அதில் பேசும் அந்தப் பெண், ``இதில் ஆளுங்கட்சி பிரமுகர்களுக்கு, அவர்களது வாரிசுகளுக்குத் தொடர்பு இல்லை. பொள்ளாச்சி ஜெயராமன்தான் எங்களுக்கு உதவினார்” என்று கூறியுள்ளார்.

மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரர் கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணியைச் சந்தித்து, ``பொள்ளாச்சி ஜெயராமன்தான் எங்களுக்கு உதவி செய்தார். குற்றவாளிகள் கைது செய்யப்பட்ட பிறகும், எதற்காகப் போராட்டம் நடத்துகிறார்கள். ஒரு சிலர் அரசியல் ஆதாயத்துக்காக தவறான தகவல்களைப் பரப்பி, எங்களது குடும்பத்தின் மீது களங்கம் ஏற்படுத்துகின்றனர். அப்படித் தவறான தகவல் பரப்புவோர் மீதும், வழக்கைத் திசை திருப்புவோர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று புகார் அளித்துள்ளார்.

இதில், பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. நேற்றைய முந்தைய தினம் கோவை எஸ்.பி.பாண்டியராஜன் சொல்லியதைப் போலவே, பாதிக்கப்பட்ட பெண்ணும், அவரது அண்ணனும் கூறுகிறார்கள். மேலும், குற்றவாளிகள் கைது செய்வதற்கு முன்பு, கலெக்டரை சந்திக்காதவர்கள், இப்போது மட்டும் எப்படிச் சந்திக்கிறார்கள்?

``பாதிக்கப்பட்டவர்களே செய்தியாளர்களைச் சந்தித்து பொது வெளியில் உண்மை நிலவரத்தைச் சொல்ல தயாராக இருக்கிறார்கள்” என்று பொள்ளாச்சி ஜெயராமன் ஊடகங்களில் கூறிவந்தார். அவர் சொன்னது போலவே, நேற்றைய தினம் அடுத்தடுத்து அதுவும், குற்றவாளிகளைப் பற்றி வாய் திறக்காமல், ``அரசியல் ஆதாயம்” என்ற வார்த்தையைச் சொல்லி புகார் கொடுப்பது என்பது, ஆளுங்கட்சி மீதான புகாரை மறக்கடிக்க, திட்டமிட்டு நடத்தப்பட்டதாகவே தெரிகிறது.

அந்தப் பெண்ணின் ஆடியோவிலேயே அனைத்து விஷயங்களும் கூறப்பட்டுள்ளன. பிறகு எதற்காக, அவரது அண்ணன் அதே விஷயத்தைப் பேசியதாக ஒரு வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அதே விஷயம் கலெக்டரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகள் மீதே இரண்டு முறைதான் அவர்கள் புகாரளித்துள்ளனர். அப்படி இருக்கும்போது, தொடர்ந்து ஆளுங்கட்சி தலையீடு இல்லை என்று சொல்வதுதான் சந்தேகத்தை அதிகரித்துள்ளது.

இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்களின் நண்பர்கள் சிலரிடம் பேசினோம், ``அவர்கள் மிரட்டப்பட்டது உண்மைதான். பல்வேறு தரப்புகளிலிருந்து மிரட்டல்களும், அழுத்தங்களும் வந்துள்ளன. மிகவும் பயந்து போயுள்ளனர். அதனால்தான், கடந்த இரண்டு நாள்களாக பல்வேறு தளங்களில் ஆளுங்கட்சி பிரமுகர்களுக்கு தொடர்பில்லை என்று கூறி வருகின்றனர். யாரிடமும் அவர்கள் பேசுவதில்லை. தொடர்பு கொள்ளவும் முடியவில்லை” என்றனர்.