Published:Updated:

``அண்ணா!’’ - பொள்ளாச்சி விவகாரத்தின் இன்னொரு கண்ணீர் கதை #ArrestPollachiRapists

``அண்ணா!’’ - பொள்ளாச்சி விவகாரத்தின் இன்னொரு கண்ணீர் கதை #ArrestPollachiRapists
``அண்ணா!’’ - பொள்ளாச்சி விவகாரத்தின் இன்னொரு கண்ணீர் கதை #ArrestPollachiRapists

பொள்ளாச்சி வன்கொடுமையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதிகேட்டும், கைதானவர்களுக்கு கடும் தண்டனை வழங்கக்கோரியும் பொள்ளாச்சியில் தினந்தோறும் ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்தப்படுகிறது. பெண்கள் அமைப்புகள் தொடங்கி கட்சிகள், பொதுமக்கள் என பொள்ளாச்சி விவகாரத்தை கையில் எடுத்துப் போராடிவருகின்றனர். மாணவ, மாணவிகளும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 
    
போராட்டம் தீவிரமடைந்ததும் பொள்ளாச்சி போலீஸாரிடமிருந்த இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டுள்ளது. இதற்கிடையில் இந்த வழக்கை சி.பி.ஐ விசாரிக்க தமிழக அரசு பரிந்துரை செய்ய முடிவு செய்துள்ளது. சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவு வரும்வரை சி.பி.சி.ஐ.டி போலீஸார் விசாரணையில் இன்று களமிறங்கிவிட்டனர். லோக்கல் போலீஸாரிடமிருந்த வழக்கு விவரங்களை முதலில் ஆய்வு செய்த சி.பி.சி.ஐ.டி போலீஸார், பாதிக்கப்பட்ட பெண்களிடம் விசாரிக்கவுள்ளனர். 

இன்னொரு டீம், ஆபாச வீடியோ எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் திருநாவுக்கரசுவின் சொந்த ஊரான சின்னப்பம்பாளையத்தில் உள்ள அவரின் வீட்டுக்குச் செல்லவுள்ளனர். அந்த வீட்டை ஆய்வு செய்துவிட்டு இந்த வழக்கில் கைதான சதீஷ் என்பவரின் ரெடிமேட் கடையிலும் ஆய்வு நடத்தவுள்ளனர். சதீஷ், கைதானபிறகு இந்தக் கடை பூட்டப்பட்டுள்ளது. இந்தக் கடையில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தால் கூடுதல் தகவல்கள் கிடைக்கும் என சி.பி.சி.ஐ.டி போலீஸார் எதிர்பார்க்கின்றனர். 

தற்போது இந்த வழக்கில் கைதான திருநாவுக்கரசு, சதீஷ், சபரிராஜன், வசந்தகுமார் ஆகியோரின் நட்பு படிக்கும் காலத்திலிருந்தே இருந்துவந்துள்ளது என்கிறார் போலீஸ் உயரதிகாரி ஒருவர். மேலும் அவர் கூறுகையில், ``திருநாவுக்கரசு, வட்டிக்குப் பணம் கொடுக்கும் தொழில் செய்துவருகிறார். சதீஷ், ரெடிமேட் கடை நடத்திவருகிறார். வசந்தகுமார், கட்டட வேலை செய்துவருகிறார். ஆனால், பெரும்பாலும் அவர் வேலைக்குச் செல்வதில்லை. சபரிராஜன், இன்ஜினீயரிங் படித்துவிட்டு வேலை செய்துவருகிறார். ஃபேஸ்புக் மூலம் மாணவிகள், இளம்பெண்களிடம் பழக்கத்தை உண்டாக்கி பிறகு போனில் நட்பாக பேசி தங்கள் மேல் ஈர்ப்பை உண்டாக்கியிருக்கின்றனர்.  கைதானவர்களின் செல்போன்களிலிருந்து வீடியோக்களை பறிமுதல் செய்துள்ளோம். அவர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தியுள்ளோம். இந்த விவகாரத்தில் அரசியல் பிரமுகர்களுக்கு தொடர்பு இருக்கிறது என்பவர்கள், அதற்கான ஆதாரங்களைக் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கத் தயாராக இருக்கிறோம்!’’ என்றார். 

காவல்துறையினரின் விளக்கம் இப்படியிருக்க, பொதுமக்களும் அரசியல்கட்சியினரும் இந்த வழக்கில் சிலரைக் காப்பாற்ற, கைதான 4 பேரோடு இந்த வழக்கை முடிக்கப் பார்க்கிறார்கள் போலீஸார் என்று பகிரங்கமாக குற்றம் சாட்டுகின்றனர். இந்த வழக்கைக் கையாண்டு வரும் போலீஸ் அணியில் பலருக்கு இந்தக் கொடுமையின் வீரியம் முகத்தில் அறைந்திருக்கிறது. ‘அப்பாவிப் பெண்களை எப்படி இப்படியெல்லாம் கொடுமைப்படுத்த மனசு வந்திருக்கும்’ என்று அங்கலாய்க்கின்றனர். 

அப்படி ஆதங்கப்படும் ஒருவர் தன் அடையாளம் மறைத்துச் சொன்ன விவரம் இது.. ‘’ஒரு கல்லூரி மாணவிக்கு நேர்ந்த கொடுமை இது. நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த 19 வயது பெண் அவர். கல்லூரி தோழி ஒருவர் மூலம் வீடியோ எடுக்கும் கும்பலைச் சேர்ந்த ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. `தங்கச்சி’ என்றுதான் அன்பாக அழைத்துள்ளார் வீடியோவை எடுத்த நபர். இவரும் `அண்ணன்’ என்றே அழைத்து, அப்படியே நினைத்துப் பழகியுள்ளார். கல்லூரி மாணவி, அவரின் தோழி மற்றும் வீடியோ எடுக்கும் கும்பலைச் சேர்ந்த அந்த நபர் ஆகிய மூவரும் காரில் வால்பாறைக்குச் சென்றுள்ளனர். காரை அந்த நபர்தான் ஓட்டியுள்ளார். முதல் சில சந்திப்புகளில் நம்பிக்கை உண்டாகுமாறு பாசமாகப் பழகியிருக்கிறார். அதன் பிறகு தோழியைத் தவிர்த்துவிட்டு அந்தப் பெண்ணை மட்டும் அந்த நபர் தனியாக அழைத்துச் சென்றுள்ளார்.

’அண்ணன்’ என்று நினைத்துப் பழகிய அந்தப் பெண்ணைத்தான் துன்புறுத்தி அனுப்பியிருக்கிறான். அப்போது வீடியோவும் எடுத்திருக்கிறான். கதறிக் கொண்டே வந்த பெண்ணிடம் விவரத்தை தெரிந்துகொண்டு, அவனைப் பிடித்து விசாரித்தோம். அப்போதுதான் வீடியோவை வெளியிடுவதாக மிரட்டினான். வீடியோ வெளியாகாமல் இருக்க முக்கிய பிரமுகர் மூலம் பஞ்சாயத்து பேசினோம். அவர்தான் வீடியோவை வாங்கி எங்களிடம் கொடுத்தார்’ என்கிறார்கள். இதுபோல இன்னும் எவ்வளவு கொடுமைகளைக் கேட்க வேண்டியிருக்குமோ!’’ என்று ஆதங்கத்துடன் முடித்தார் அவர். 
     
கைதான சிலர் போக, இந்த விவகாரத்தில் அழுத்தமான தொடர்பு இருக்கும் பலர் சுதந்திரமாக வெளியில் உள்ளனர். அவர்கள் தண்டிக்கப்படவேண்டும் என்பதே பொதுமக்கள், சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. அதுதான் அடிப்படையான நியாயமும் கூட!