Published:Updated:

பெங்களூரு பணக்கார தாதா கொலை! பின்னணியில் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழக மாணவி... காரணம் என்ன?

பெங்களூரு பணக்கார தாதா கொலை! பின்னணியில் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழக மாணவி... காரணம் என்ன?
பெங்களூரு பணக்கார தாதா கொலை! பின்னணியில் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழக மாணவி... காரணம் என்ன?

மீபத்தில் பெங்களூரு நகரில் பிரபல தாதா லக்ஷ்மணப்பா (வயது 45) பட்டப்பகலில் மர்மக் கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். அவரின் சொத்து மதிப்பு கிட்டத்தட்ட ரூ.600 கோடி. அத்தனையும் ரவுடித்தனத்தால் சம்பாதித்தது. இவரின் சகோதரர் ராமர் மீதும் பல்வேறு வழக்குகள் உள்ளன. பெங்களூரு நகரத்தில் லக்ஷ்மணப்பாதான் பணக்கார தாதா. வழக்கு ஒன்றில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர் ஜாமீனில் வெளிவந்த நிலையில், மர்மக் கும்பல் அவரைக் கொலை செய்தது. லக் ஷ்மணப்பாவின் தொழில்ரீதியான எதிரிகள் அவரைக் கொலை செய்திருக்கலாம் என்கிற கோணத்தில் போலீஸார் முதலில் விசாரித்து வந்தனர். ஆனால், தற்போது இந்த வழக்கில், மாலி (பெயர் மாற்றம்) என்ற 21 வயது இளம்பெண் கைது செய்யப்பட்டுள்ளார். இங்கிலாந்தில் உள்ள கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இவர் படித்து வந்தார் . தாதா லக்ஷ்மணப்பா கொலைக்குப் பின்னணியில் முறை தவறிய காதலே காரணம் என்பது இப்போது தெரியவந்துள்ளது. 

பெங்களூரில் லக்ஷ்மணப்பா வசித்து வந்த வீட்டருகே வசித்தவர் மாலி. சிறுவயது முதலே லக்ஷ்மணப்பாவுக்கு மாலியைத் தெரியும். லக்ஷ்மணப்பா திருமணத்தில் கூடச் சிறுமியாக இருந்த மாலி கலந்துகொண்டுள்ளார். ஒரே கூல்ட்ரிங்ஸ் பாட்டிலில் இருவரும் குளிர்பானம் அருந்தும் அளவுக்குச் சிறுமி மாலி லக்ஷ்மணப்பா மீது பாசமாக இருந்துள்ளார். வளர்ந்து இளம் பெண்ணான மாலி பெங்களுரு ஆர்.ஆர். நகரில் நடனப்பள்ளி நடத்தி வந்த ருபேஷ் கௌடா (வயது 25) என்பவரிடத்தில் நடனம் கற்றுக்கொள்ள சென்றுள்ளார். அப்போது, மாலிக்கும் ருபேசுக்கும் காதல் மலர்ந்துள்ளது. இருவரும் தனியாக சந்தித்து காதலை வளர்த்துள்ளனர். மகளின் காதல் விவகாரம் தந்தைக்குத் தெரிய வந்ததும், தாதா லக்ஷ்மணப்பாவிடம் விஷயத்தைக் கூறி ருபேஷை கண்டிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

ருபேஷையும் மாலியை கண்டித்தும் பலன் இல்லை. மாலியின் தந்தையிடத்தில் இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் மாலியை படிக்கச் சேர்த்து விடலாம் என்று லக்ஷ்மணப்பா ஐடியா கொடுத்துள்ளார். தொடர்ந்து கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்ஸி சைகாலஜி பட்டப்படிப்பில் மாலி சேர்க்கப்பட்டார். இதற்கு லட்சக்கணக்கில் லக்ஷ்மணப்பா பணம் செலவழித்துள்ளார். ஒரு கட்டத்தில் இளம்பெண் மாலி மீது லக்ஷ்மணப்பா காதல் வயப்பட்டார். மாலி தன் காதலர் ருபேஷ்வுடனனா காதலைக் கைவிட மறுத்தார். அதேவேளையில், லக்ஷ்மணா அனுப்பும் பணத்தையும் பெற்று வந்துள்ளார்.. 

லக்ஷ்மணப்பா உயிருடன் இருக்கும் வரையில் தங்களை சேரவிட மாட்டார் என்று கருதிய மாலி, அவரைக் கொலை செய்து விடுமாறு காதலர் ருபேஷிடத்தில் கூறியுள்ளார்  கூலிப் படையினர் அமர்த்த மாலி 1 லட்ச ரூபாய் ருபேஷூக்கு  அனுப்பியுள்ளார். இந்தப் பணம் தாதா லக்ஷ்மணப்பா மாலிக்கு அனுப்பியது என்று போலீஸார் கூறுகின்றனர். பின்னர், ருபேஷ்  லக்ஷ்மணப்பாவின் எதிரிகள் குறித்த தகவல்களைச் சேகரித்தார். பெங்களூரின் மற்றொரு தாதாவான பூனை ராஜா என்பவர் தன் நண்பர் கிருஷ்ணமூர்த்தியைக் கொலை செய்ததற்காக லக்ஷ்மணப்பாவை பழிவாங்கும் நோக்கத்தில் இருப்பதை அறிந்த ருபேஷ் அவர்களிடத்தில் சென்று உதவி கேட்டார். மேலும், தாதா லக்ஷ்மணப்பாவை கொலை செய்யும் திட்டத்தையும் வகுத்துக் கொடுத்தார்.

திட்டத்தின்படி, இங்கிலாந்தில் இருந்து மார்ச் 7-ம் தேதி மாலி பெங்களுரு வருவதாக லக்ஷ்மணப்பாவிடத்தில் கூறியுள்ளார். தனக்கு ஹோட்டல் அறை புக் செய்யுமாறு அவரிடத்தில் மாலி கேட்டுக்கொண்டுள்ளார். லக்ஷ்மணாப்பாவும் ஹோட்டலில் அறை புக் செய்துள்ளார். பெங்களுரு வந்த மாலி, லக்ஷ்மணாப்பாவிடத்தில்  `எந்த சாலை வழியாக  ஹோட்டலுக்கு வருகிறீர்கள் ' என்கிற விவரம் அனைத்தையும்  கேட்டுள்ளார்.  விஷயம் தெரியாமல் விவரம் அனைத்தையும் மாலியிடம் கூறியிருக்கிறார் லக்ஷ்மணப்பா. தகவல் அனைத்தையும் ருபேஷுக்கு மாலி தெரிவித்துவிட, தொடர்ந்து, மார்ச் 7-ம் தேதி மதியம் 12.30 மணியளவில் பெங்களுரு மகாலக்ஷ்மி லேவுட் அருகேயுள்ள பெல் அடுக்குமாடி குடியிருப்பு அருகே காரில் சென்றுகொண்டிருந்த தாதா லக்ஷ்மணப்பா கொலை செய்யப்பட்டார். 

தாதா லக்ஷ்மணப்பா கொலை சம்பவமும் பின்னணியில் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழக மாணவி இருப்பதும் கர்நாடகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.