Published:Updated:

`எவ்வித பாரபட்சமும் காட்டப்படமாட்டாது' - பொள்ளாச்சி வழக்கில் விசாரணையைத் தொடங்கியது சி.பி.சி.ஐ.டி

`எவ்வித பாரபட்சமும் காட்டப்படமாட்டாது' - பொள்ளாச்சி வழக்கில் விசாரணையைத் தொடங்கியது சி.பி.சி.ஐ.டி
`எவ்வித பாரபட்சமும் காட்டப்படமாட்டாது' - பொள்ளாச்சி வழக்கில் விசாரணையைத் தொடங்கியது சி.பி.சி.ஐ.டி

``பொள்ளாச்சி பாலியல் துன்புறுத்தல் வழக்கு தொடர்பாக வீடியோக்களோ தகவல்களோ யார் கொடுத்தாலும் அதை ஆராய்ந்து நடவடிக்கை எடுப்போம் என்று சி.பி.சி.ஐ.டி ஐ.ஜி ஸ்ரீதர் கோவையில் தெரிவித்துள்ளார்."

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டுள்ளதையடுத்து சி.பி.சி.ஐ.டி ஐ.ஜி ஸ்ரீதர் மற்றும் விசாரணை அதிகாரி எஸ்.பி நிஷா பார்த்திபன் தலைமையிலான குழு கோவை எஸ்.பி பாண்டியராஜன் மற்றும் டி.எஸ்.பி ஜெயராமன் ஆகியோரிடமிருந்து வழக்கு தொடர்பான ஆவணங்களைப் பெற்றனர்.

இதையடுத்து பத்திரிகையாளர்களைச் சந்தித்த ஐ.ஜி ஸ்ரீதர், ``பொள்ளாச்சி வழக்கு சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டுள்ளதையடுத்து எஸ்.பி. நிஷா பார்த்திபன் தலைமையில் புலன் விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அவருக்கு உதவியாகக் கோவை டி.எஸ்.பி முத்துசாமி, கோவை ஆய்வாளர் சுமதி அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. போலீஸிடமிருந்து வழக்கின் ஆவணங்களைப் பெற்றுள்ளோம். அனைத்து கோணங்களிலும் விசாரணை நடைபெறும். இதில் யார் யார் சம்பந்தப்பட்டுள்ளனர் என்பது குறித்து விசாரணையில்தான் தெரியவரும். 

போலீஸ் எங்களிடம் அளித்திருக்கும் ஆவணங்களை தனிக்குழு மூலம் பரிசீலனை செய்து வருகிறோம். இந்த வழக்கில் சம்பந்தப்பட்டுள்ளவர்கள் குறித்துப் போகப்போகத்தான் சொல்ல முடியும். சி.பி.சி.ஐ.டி குற்றவாளிகளைக் காவலில் எடுத்து விசாரிக்கும். இன்று விசாரணை தொடங்கப்பட்டுவிட்டது. கூடிய விரைவில் இந்த வழக்கில் விசாரணையை முடிப்போம். சி.பி.ஐ-க்கு இந்த வழக்கு மாற்றப்பட்டால் அவர்களிடம் இந்த வழக்கை ஒப்படைப்போம். இதில் எவ்வித குழப்பம் இல்லை.

குற்றவாளிகளிடம் பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்கள் நீதிமன்றம் மூலம் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆய்வு குறித்த அறிக்கை வந்தவுடன் அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். எவ்வித பாரபட்சமும் இல்லாமல் நேர்மையாக விசாரணை செய்வோம். அதற்காகத்தான் ஐ.ஜி மேற்பார்வையில் விசாரணை நடைபெறுகிறது" என்றவர், ``இந்த வழக்கு தொடர்பான வீடியோவோ தகவலோ கொடுத்தாலும் அதை ஆராய்ந்து நடவடிக்கை எடுப்போம். விசாரணை செய்யும்போது, எல்லாவிதமான பொதுக் கருத்துகளுக்கு விளக்கம் கொடுக்க முடியாது" என்றார்.