Published:Updated:

``பாதிக்கப்பட்டவர்களின் பெயர்களைப் பகிராதீர்கள்... ப்ளீஸ்!" ஶ்ரீபிரியா

``தமிழ்நாடு என்பது தாய்மைக்கு மரியாதை கொடுக்கிற இடம். இப்படிப்பட்ட நாட்டில், அடிக்கடி பெண்களுக்கு எதிரான சம்பவங்கள் நடப்பது வருந்தத்தக்க விஷயம்.'' எனப் பொள்ளாச்சி சம்பவம் குறித்துப் பேச ஆரம்பிக்கிறார், நடிகை ஶ்ரீபிரியா.

``பாதிக்கப்பட்டவர்களின் பெயர்களைப் பகிராதீர்கள்... ப்ளீஸ்!" ஶ்ரீபிரியா
``பாதிக்கப்பட்டவர்களின் பெயர்களைப் பகிராதீர்கள்... ப்ளீஸ்!" ஶ்ரீபிரியா

பாலியல் வன்கொடுமை செய்து அவற்றை வீடியோ எடுத்து, சம்பந்தப்பட்ட பெண்களை மிரட்டி பணம் பறித்த பொள்ளாச்சி சம்பவம் நாட்டையே உலுக்கி வருகிறது. இதுகுறித்து பொள்ளாச்சி போலீஸார் வழக்கு பதிந்து திருநாவுக்கரசு உள்ளிட்ட சில இளைஞர்களைக் கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பியுள்ளனர். இதற்கிடையில் இந்த விவகாரத்தில் ஆளும் அ.தி.மு.க அரசைச் சார்ந்த சிலருக்குத் தொடர்பு இருப்பதாக செய்திகள் பரவியுள்ள சூழலில், `குற்றம் சாட்டப்பட்டவர்களை விசாரிக்க தனி விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும்’ என `மக்கள் நீதி மய்யம்' கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். `பாதிக்கப்பட்டவர்களின் பெயரை கோவை மாவட்ட போலீஸ் எஸ்.பி வெளியிட்டது மன்னிக்க முடியாத தவறு’ என்றும் அவர் கூறியுள்ளார். இது குறித்து விரிவாகப் பேச, `மக்கள் நீதி மய்யம்' கட்சியின் உயர்மட்டக்குழு உறுப்பினராக இருக்கும் நடிகை ஶ்ரீபிரியாவைத் தொடர்பு கொண்டோம். 

``பாதிக்கப்பட்டவர்களின் பெயர்களைப் பகிராதீர்கள்... ப்ளீஸ்!" ஶ்ரீபிரியா

``மக்கள் நீதி மய்யம் கட்சியின் அலுவலகம் பொள்ளாச்சியிலும் உண்டு. அந்த விஷயம் வெளியானதும் முதலில் குரல் கொடுத்தவர் எங்கள் தலைவர் கமல்தான். அவருடன் நேற்று ஊர்வலமாகச் சென்று தமிழக காவல்துறை இயக்குநரிடம் விண்ணப்பம் கொடுத்தபோது, எங்களுடன் வந்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் ஆண்கள்தான். தற்போது ஆண்களுக்கு நிகராகப் பெண்களும் இந்த விஷயத்தைக் கையில் எடுத்துள்ளனர். 

பொள்ளாச்சி விவகாரத்தில் ஒரே ஒரு பெண் தாமாக முன்வந்து புகார் கொடுத்துள்ளார். அந்தப் பெண்ணை பொதுவெளியில் அடையாளப்படுத்தாதீர்கள் என்ற ஒரே ஒரு விஷயத்தை மட்டுமே உங்கள்முன் வேண்டுகோளாக வைக்கிறேன். காவல்துறை, சொந்தங்கள் என யார் மூலமாக வேண்டுமானாலும் அந்தப் பெண்ணைப் பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். அதற்காக அதைப் பொதுவெளியில் பகிராமல் இருங்கள். அவர்களுக்கும் எதிர்காலம் உண்டு என்பதை மனதில் வையுங்கள்.

குற்றம் செய்தவர்கள், அவர்களுக்கு துணைபோனவர்கள் யார்யார் என்பதைக் கண்டறிய தனி விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என வேண்டுகோள் வைத்திருக்கிறோம். ஏழு வருடமாகப் பெண்களை மிரட்டி இந்த பாவத்தை செய்திருக்கிறார்கள். கேட்கும்போதே உடல் நடுங்குகிறது. அவர்களை முழுமையாகக் கண்டறிந்து தண்டனை கொடுத்தால் மட்டுமே இதுபோன்ற குற்றங்கள் நடக்காமல் இருக்கும். 

குற்றம் சாட்டப்பட்ட ஒருவனுடைய அம்மா கோர்ட்டில் எல்லோரிடமும் கோபமாகப் பேசுவதைப் நேற்று பார்த்தேன். `அவன் ஒரு தப்பும் பண்ணல' என்று அவர் சொல்கிறார். தன் மகன் எந்தத் தவறும் செய்திருக்கமாட்டான் என நம்புகிறார். அது அவருடைய நம்பிக்கை. அவன் நல்லவனா கெட்டவனா என்பதை முடிவு செய்யவேண்டியது நீதிமன்றம். 

ஆனால், பெற்றோர்களுக்குச் சொல்ல என்னிடம் ஒரு செய்தி உண்டு. பொள்ளாச்சி பிரச்னைக்கான ஆணிவேர் பெற்றோர்களிடமிருந்துதான் தொடங்குகிறது. ஒரு குறிப்பிட்ட வயதுக்குமேல் தன்னைச் சுற்றி நடக்கும் தவறான விஷயங்களின் மீது பிள்ளைகளுக்கு பயம் வரும். அது தவறு என்று தெரிந்தால்கூட அதுபற்றிய பயம் இருக்கும். வீட்டில் சொன்னால் எதிர்வினை எப்படி இருக்குமோ என எதையும் பெற்றோரிடம் பகிர தயங்குவார்கள்.

அப்படியான சமயத்தில் பெற்றோர்தான் பிள்ளைகளுக்கு ஒரே அரண். நான் தயாரித்த `பாபநாசம்' படத்தில் குடும்பமே பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உறுதுணையாக நிற்கும். உங்கள் பெண் குழந்தைகளைக் காக்க இந்த உறுதுணையாக நிற்கும் ஒற்றுமைதான் ஒரே தீர்வு. பாதிக்கப்பட்ட பெண்கள் தைரியமாக புகார் கொடுக்க வெளியே வரவேண்டும். இந்தப் பிரச்னைக்கான தீர்வை நோக்கி பெற்றோர் அவர்களை கைப்பிடித்து அழைத்துச்செல்லவேண்டும்.”