Published:Updated:

"ஹாசினி, ராஜலட்சுமிக்குலாம் பண்ணதை பொள்ளாச்சி பெண்களுக்கு பண்ணாதீங்க!’’ - லட்சுமி ராமகிருஷ்ணன்

கடந்த சில நாள்களாக மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கும் பொள்ளாச்சி சம்பவம் குறித்துப் பல பிரபலங்களும் குரல் எழுப்பி வரும் நிலையில், லட்சுமி ராமகிருஷ்ணனும் குரல் கொடுக்கிறார்.

"ஹாசினி, ராஜலட்சுமிக்குலாம் பண்ணதை பொள்ளாச்சி பெண்களுக்கு பண்ணாதீங்க!’’ - லட்சுமி ராமகிருஷ்ணன்
"ஹாசினி, ராஜலட்சுமிக்குலாம் பண்ணதை பொள்ளாச்சி பெண்களுக்கு பண்ணாதீங்க!’’ - லட்சுமி ராமகிருஷ்ணன்

பொள்ளாச்சி சம்பவம் இது குறித்து லட்சுமி ராமகிருஷ்ணன் கருத்தைக் கேட்டோம். காட்டமாக வந்து விழுகிறது வார்த்தைகள்! 

``பெண்களுக்கான பிரச்னைகளைப் பேசிக்கிட்டேதானே இருக்கோம். ஹாசினி பற்றிப் பேசினோம், ராஜலட்சுமி பற்றிப் பேசினோம்... என்ன நடந்தது? எல்லாமே நீர்த்துதான் போயின. அதையும் தாண்டி, இப்போது ட்விட்டரில் வந்து ஏன் பேசாமல் இருக்கிறீர்கள் எனக் கேட்கிறார்கள். எப்படிப் பேச முடியும். அந்தப் பெண்ணின் கதறலைக் கேட்டால் தூக்கம் வரமாட்டேங்குது. இவ்வளவு முட்டாள்களாகவா இருக்கிறோம் நாம்? யாராக இருந்தாலும் அது உங்கள் வீட்டுப் பெண் மாதிரிதானே! காஷ்மீரில் அந்தக் குழந்தைக்கு நடந்தபோதுகூட ஒருத்தருக்கு ஒருத்தர் மாறி மாறி குற்றம்சாட்டிக்கொண்டார்களே தவிர, பிரச்னைக்கான தீர்வு என்ன என்பதை யோசிக்கத் தயாராக இல்லையே.

ராஜலட்சுமி விஷயமும் அப்படித்தான், கடைசியில் அரசியலாக்கிட்டாங்க! தலைப்புகளில் இருந்து எல்லாமே தவறாக இருந்தது. அரசியலைப் பொறுத்தவரை பொதுமக்களான நமக்கும் பகுத்தறிவு இருக்கணும். எது உண்மை, எது பொய் என உணர வேண்டும். முகத்தை வைத்தே ஒரு ஆளை எடைபோட வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன். #metoo பணக்காரர்கள் விஷயம் எனச் சொல்ற முட்டாள்தனத்தை என்னனு சொல்றது... இப்படித் தவறான புரிதலோடு பேசுகிற விஷயத்தை முளையிலேயே கிள்ளி எறியணும். எவ்வளவு புத்திசாலி என நினைத்துக்கொண்டிருந்த பலர், #metoo சமயத்தில் எப்படியெல்லாம் தங்கள் சுயத்தை வெளிக்காட்டினார்கள். 

100 ரூபாய்க்கு வேலை செய்யும் பெண்களுக்காகக் குரல் கொடுத்தபோது, `பணக்காரங்களைப் பற்றிப் பேச மாட்டீர்களா?’ என்றார்கள். அப்போ, பிரச்னை பெண்களுடைய பிரச்னை கிடையாது. அதை யார் பேசுகிறார்கள் என்பதுதானே உங்கள் தேடுதலாக இருக்கிறது’’ என்றவர்,

``பொள்ளாச்சி விஷயத்தைப் பொறுத்தவரை, பாலியல் வன்கொடுமை செய்தவர்களைக் கல்லால் அடித்துக் கொல்ல வேண்டும். இவர்களுடைய தேவை செக்ஸ்தான் என்றால், அதற்காகத் தெருவுக்குத் தெரு செக்‌ஸ் மிஷின் வைக்கச் சொல்லுங்கள். அப்போதுதான் இதெல்லாம் குறையும். பணம், பதவி, அரசியல் பின்புலம் இவையெல்லாம் தாண்டி இந்தக் காமவெறி எல்லா இடத்திலும் இருக்கிறது. இவற்றையெல்லாம் பார்க்கும்போது கோபம்தான் வருகிறது. 

"ஹாசினி, ராஜலட்சுமிக்குலாம் பண்ணதை பொள்ளாச்சி பெண்களுக்கு பண்ணாதீங்க!’’ - லட்சுமி ராமகிருஷ்ணன்

`சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியில் ஒருமுறை, ஒரு பையன் 19 பெண்களை ஏமாற்றியிருந்தான். அதில், பாதிக்கப்பட்ட ஒரு பெண் நிகழ்ச்சியில் வந்து சொன்ன பிறகு, அவனைப் பிடித்தோம். #metoo வேலை செய்யும் இடம், படிக்கும் இடங்களில் அதிகாரத்தை, செல்வாக்கைப் பயன்படுத்தி தவறாக நடந்துகொண்டவர்களைப் பதிவு செய்யும் இடமாக இருந்தது. அப்படிச் செய்ததற்காக, அந்தப் பெண்களைப் படிக்கப் போகாதீர்கள், வேலைக்குப் போகாதீர்கள் எனச் சொல்ல முடியாது. சின்மயியைப் பாட வேண்டாம்னு சொல்ல முடியாது. ராஜலட்சுமி என்ற குழந்தையை, ஹாசினி என்ற குழந்தையை விளையாடப் போகாதே எனச் சொல்ல முடியாது. 

பெண்கள் ஆண்களை நம்பி ரிலேஷன்ஷிப்பில் இருப்பதுகூட ஓகே. ஆனால், தனியாக ஹோட்டல் ரூமில் தங்கும் அளவுக்கு நமது நாடு பாதுகாப்போடு இருக்கா, மெச்சூரிட்டியா இருக்கா... இல்லை. அவசரப்பட்டு ஒருவரை நம்பி அவருடன் இருந்து ஏமாந்த பிறகு, கதறி அழுது, போராட்டம் பண்ணி என்ன பயன்? தன்னைப் பாதுகாத்துக்கொள்வதுதானே பெண் விடுதலை. 12 வயதிலேயே எதிர்பாலின ஈர்ப்பு வந்துவிடும். அதைத்தாண்டி, அந்த மாயைக்குப் பின்னால் ஓடாமல், படிக்க வேண்டும். குடும்பத்தைப் பார்க்கணும், வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அதுதான் உண்மையான பெண் விடுதலை. யார் என்றே தெரியாத ஒருவனுடன் ஃபேஸ்புக்கில் பழகி, அவனுடன் வெளியில் சுற்றுவதெல்லாம் எந்த நம்பிக்கையில் என்பதுதான் புரியவில்லை. மீறிப் போனால், மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் அவனை எதிர்கொள்ளும் ஆளாக இருக்க வேண்டும்’’ என்றவர், தொடர்ந்தார்.

"ஹாசினி, ராஜலட்சுமிக்குலாம் பண்ணதை பொள்ளாச்சி பெண்களுக்கு பண்ணாதீங்க!’’ - லட்சுமி ராமகிருஷ்ணன்

``பொள்ளாச்சி சம்பவத்துக்குக் காரணமானவர்களை நடுத்தெருவில் தூக்கில் போடுங்கள். ஒரு பெண்ணுக்கு ஆபத்து வந்தால், அவள் என்ன சாதி, என்ன மதம், என்ன மொழி, எந்த ஊர், அவளுடைய பின்புலம் இவற்றையெல்லாம் ஆராய்ச்சி பண்ணாதீங்க. இவற்றையெல்லாம் தாண்டி, பெண்களுக்கு, பெண் குழந்தைகளுக்குப் பாதுகாப்போடு வாழ்வதற்கு அதிகாரம் துணை இருக்கணும். அப்படி ஒரு சூழல் உருவாகணும்’’ என்கிறார் லட்சுமி ராமகிருஷ்ணன்.