Published:Updated:

 ரூ.50,000 முதல் 80,000 வரை கடன் - தஞ்சாவூரில் கொத்தடிமையாக வேலைபார்த்த 23 பேர் மீட்பு!

கே.குணசீலன்
 ரூ.50,000 முதல் 80,000 வரை கடன் - தஞ்சாவூரில் கொத்தடிமையாக வேலைபார்த்த 23 பேர் மீட்பு!
 ரூ.50,000 முதல் 80,000 வரை கடன் - தஞ்சாவூரில் கொத்தடிமையாக வேலைபார்த்த 23 பேர் மீட்பு!

தஞ்சாவூரில், கரும்புத் தோட்டத்தில் கொத்தடிமைகளாக வேலைபார்த்த 23 பேரை மீட்ட அதிகாரிகள், சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தவர்கோட்டை அருகே உள்ள நாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் புண்ணியமூர்த்தி. இவர், தஞ்சாவூரை அடுத்த குருங்குளத்தில் கரும்பு சாகுபடி செய்துள்ளார். இவரது கரும்புத் தோட்டத்தில், கரும்பு வெட்டும் வேலைக்காக, கடலுார் மாவட்டம் திருவிதிகையைச் சேர்ந்த ஏஜென்ட் சேகர் மூலமாக, கடந்த 3 மாதங்களுக்கு முன்பு 23 பேரை அழைத்துவந்துள்ளார். அவர்கள், கரும்புத் தோட்டத்திலேயே தங்கி வேலைசெய்து வந்துள்ளனர். இவர்கள், கொத்தடிமைகளாக வேலை செய்துவருவதாக புதுக்கோட்டை ஆர்.டி.ஓ தாண்டாயுதபாணிக்குத் தகவல் கிடைக்கவே, அவர் தஞ்சாவூர் ஆர்.டி.ஓ சுரேஷுக்கு தகவல் கொடுத்தார். இந்த தகவலின் பேரில், மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு நல அலகு ஒருங்கிணைப்பாளர் நடராஜன், தேசிய ஆதிவாசி தோழமைக் கழக ஒருங்கிணைப்பாளர் ராணி, ஆய்வாளர் முத்துக்கண்ணன் ஆகியோர் விசாரணை செய்தனர்.

இதில், அவர்கள் கொத்தடிமைகளாக வேலைசெய்வது தெரியவந்தது. உடனே, அந்த 23 பேரையும் மீட்டு, ஆர்.டி.ஓ அலுவலகத்தில் ஒப்படைத்தனர். இதில் 10 ஆண்கள், 5 பெண்கள், 8 குழந்தைகள் இருந்துள்ளனர். இவர்கள் அனைவரும் 11 வெவ்வேறு குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என்பதும், மேலும் ஏஜென்ட் சேகர் இவர்களிடம் 50,000 முதல் 80,000 வரை கடன் வாங்கிக்கொண்டு கொத்தடிமைகளாக வேலைக்கு அனுப்பி வைத்ததும் விசாரணையில் தெரியவந்தது. இவர்கள் அனைவரும், விழுப்புரம் மற்றும் கடலுார் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். மீட்கப்பட்டவர்கள் அனைவரும் சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். மேலும், ஏஜென்ட் சேகர் மீது ஆந்திரா மற்றும் திண்டிவனம் போலீஸ் ஸ்டேஷனில் இரண்டு வழக்குகள் உள்ள நிலையில், போலீஸார் அவரைத் தேடிவருகின்றனர்.