Published:Updated:

மனைவிக்குத் தெரியாமல் பள்ளி மாணவியுடன் திருமணம் - போக்ஸோ சட்டத்தில் திருப்பூர் இளைஞர் கைது!

மனைவிக்குத் தெரியாமல் பள்ளி மாணவியுடன் திருமணம் - போக்ஸோ சட்டத்தில் திருப்பூர் இளைஞர் கைது!
மனைவிக்குத் தெரியாமல் பள்ளி மாணவியுடன் திருமணம் - போக்ஸோ சட்டத்தில் திருப்பூர் இளைஞர் கைது!

திருப்பூர் அருகே தன்னுடைய மனைவிக்குத் தெரியாமல் பள்ளி மாணவியைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்ட இளைஞரைக் காவல்துறையினர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்திருக்கிறார்கள்.

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயது இளைஞர் தினேஷ். இவருக்கு திருமணமாகி மனைவியும் இருக்கிறார். இத்தம்பதியர் இருவரும் திருப்பூர் காலேஜ் ரோடு பகுதியில் குடும்பத்துடன் தங்கியிருந்து அருகில் உள்ள தனியார் பின்னலாடை நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர். இந்நிலையில் அதே பகுதியில் இயங்கி வரும் மாநகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருடன் தினேஷுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஒரு வருட காலமாக தன் மனைவிக்குத் தெரியாமல் அப்பள்ளி மாணவியைக் காதலித்து வந்த தினேஷ் கடந்த வாரம் அந்த மாணவியைத் திருமணமும் செய்துள்ளார். தினேஷின் வீட்டுக்கும், அப்பள்ளி மாணவியின் வீட்டுக்கும் அதுபற்றி துளியளவும் தகவல் தெரியவில்லை. அதன் பிறகும் வழக்கம்போல அந்த மாணவி பள்ளிக்கூடத்துக்குச் சென்று வந்துள்ளார்.

பகல் நேரங்களில் இருவரும் தனிமையில் சந்தித்துப் பேசி வந்துள்ளனர். இந்நிலையில் நேற்றைய தினம் பள்ளி மாணவியின் புத்தகப் பையினுள் அவரது தாயார் எதேச்சையாகப் பார்த்தபோது,  தாலியும், காலில் அணியக்கூடிய மெட்டி உள்ளிட்ட பொருள்களும் இருந்துள்ளன. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியின் தாயார் அதுகுறித்து மாணவியிடம் கேள்வி எழுப்பியிருக்கிறார். அப்போதுதான் தன் திருமண விவகாரம் பற்றிய தகவலை தன் தாயாரிடம் மாணவி தெரிவித்திருக்கிறார். அதைத்தொடர்ந்து திருப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சம்பவம் தொடர்பாக புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய காவல்துறையினர், குழந்தைகள் மீதான பாலியல் குற்ற பாதுகாப்புச் சட்டப் பிரிவான போக்ஸோவின் கீழ் தினேஷ் மீது வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்திருக்கிறார்கள்.