Published:Updated:

`5 நாள்கள் வைத்திருந்தோம்; காட்டிக்கொடுப்பேன்னு சொன்னதால் கொன்றோம்!'- மாணவி கொலை வழக்கில் பகீர் வாக்குமூலம்

`5 நாள்கள் வைத்திருந்தோம்; காட்டிக்கொடுப்பேன்னு சொன்னதால் கொன்றோம்!'- மாணவி கொலை வழக்கில் பகீர் வாக்குமூலம்
`5 நாள்கள் வைத்திருந்தோம்; காட்டிக்கொடுப்பேன்னு சொன்னதால் கொன்றோம்!'- மாணவி கொலை வழக்கில் பகீர் வாக்குமூலம்
`5 நாள்கள் வைத்திருந்தோம்; காட்டிக்கொடுப்பேன்னு சொன்னதால் கொன்றோம்!'- மாணவி கொலை வழக்கில் பகீர் வாக்குமூலம்

`மாணவியை சங்கரய்யா எங்களிடம் ஒப்படைத்தபிறகு 5 நாள்களாக அவரை நிர்வாணமாகவே வீட்டில் அடைத்துவைத்திருந்தோம். 5வது நாளில் அவரை ஆட்டின் தலையை வெட்டுவதைப்போல வெட்டிக் கொலை செய்தோம்' எனக் கைதானவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர். 

திருத்தணியை அடுத்த பள்ளிப்பட்டு அருகே உள்ள புதுவெங்கடாபுரத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. கூலித் தொழிலாளி. இவரின் மகள் உஷா (பெயர் மாற்றம்). அந்தப் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்துவந்தார். கடந்த 7.9.2018-ல் பள்ளிக்குச் சென்ற உஷா, அதன்பிறகு வீடு திரும்பவில்லை. மகளை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதனால் பொதட்டூர்பேட்டை காவல் நிலையத்தில் சுப்பிரமணி புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸார் விசாரணை நடத்தினர். இந்த நிலையில், கடந்த 11.2.2019-ல் கீச்சளம் பகுதியில் உள்ள கரும்புத் தோட்டத்தின் அருகில் இருக்கும் ஓடையில் மனித எலும்புக்கூடு கிடப்பதாகவும், அதன் அருகே மாணவியின் பள்ளிச் சீருடையிருப்பதாகவும் போலீஸாருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி.பொன்னி, டி.எஸ்.பி. சேகர் மற்றும் போலீஸார் வந்தனர். எலும்புக் கூடு, மாணவியின் பள்ளிச்சீருடையைக் கொண்டு போலீஸார் விசாரணை நடத்தியதில் மாயமான மாணவி உஷா எனத் தெரியவந்தது. 

`5 நாள்கள் வைத்திருந்தோம்; காட்டிக்கொடுப்பேன்னு சொன்னதால் கொன்றோம்!'- மாணவி கொலை வழக்கில் பகீர் வாக்குமூலம்

இந்த வழக்கில் கல்லூரி மாணவர் சங்கரய்யா, பண்ணை வீட்டின் உரிமையாளர் நாதமுனி, ஜெகதீஷ்பாபு, அவரின் சகோதரர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் மோகன் ஆகிய 5 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். இவர்கள் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் கொலை வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. பள்ளிப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இவர்கள், சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சங்கரய்யா மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். 

இந்தநிலையில், திருவள்ளூர் மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற உள்ளது. இதனால் பள்ளிப்பட்டு நீதிமன்றத்திலிருந்த மாணவி கொலை வழக்கு தொடர்பான ஆவணங்கள் திருவள்ளூர் மகளிர் நீதிமன்றத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் மாணவி தரப்பினருக்கு சட்டரீதியான உதவிகளைச் செய்துவருகிறார் வழக்கறிஞர் அருள். பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைக்கவேண்டும் என தேசிய மகளிர் மற்றும் குழந்தை நல வாரிய உறுப்பினர் ஆனந்திடமும் மாணவியின் தந்தை சுப்பிரமணி மனுஅளித்துள்ளார்.  மாணவியை கொலை செய்த வழக்கில் கைதான சங்கரய்யா, நாதமுனி,ஜெகதீஷ்பாபு, அவரின் சகோதரர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் மோகன் ஆகியோர் தனித்தனியாக வாக்குமூலம் அளித்துள்ளனர். மொத்தம் 6 பக்கத்துக்கு அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். 

`5 நாள்கள் வைத்திருந்தோம்; காட்டிக்கொடுப்பேன்னு சொன்னதால் கொன்றோம்!'- மாணவி கொலை வழக்கில் பகீர் வாக்குமூலம்

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``சம்பவத்தன்று சங்கரய்யா, மாணவியை அழைத்துக்கொண்டு நாதமுனியின் பண்ணை வீட்டுக்கு வந்தார். அங்கு நாதமுனியும் மோகனும் இருந்துள்ளனர். அவர்களிடம் மாணவியை ஒப்படைத்த சங்கரய்யா, 5,000 ரூபாயை வாங்கிக் கொண்டு சென்றுவிட்டார். அப்போது மாணவி, சங்கரய்யாவிடம் தகராறு செய்துள்ளார். உடனடியாக மாணவியின் வாயை துணியால் பொத்தியதோடு கை, கால்களை கட்டி வீட்டுக்குள் அடைத்துவைத்தனர். முதல் முதலில் நாதமுனிதான் மாணவியிடம் தவறாக நடந்துள்ளார். அதன்பிறகு ஜெகதீஷ் மாணவியிடம் அத்துமீறியுள்ளார். 

இதையடுத்து நாதமுனி, ஜெகதீஷ் ஆகியோரின் நண்பர்களான கிருஷ்ணமூர்த்தி, மோகனுக்கு போனில் தகவல் தெரிவித்துள்ளனர். அவர்களும் பண்ணை வீட்டுக்கு வந்து மாணவியிடம் தவறாக நடந்துள்ளனர். 5,000 ரூபாய் பணத்தை வாங்கிய சங்கரய்யா, பேன்ட், சட்டை வாங்கியுள்ளார். மீதமுள்ள பணத்துக்கு மதுவாங்கி குடித்துள்ளார். மறுநாள் மாணவியைப் பார்க்க சங்கரய்யா பண்ணை வீட்டுக்கு வந்துள்ளார். அங்கு நிர்வாணமாக மயங்கிய நிலையில் மாணவி படுத்திருந்தார். இவ்வாறு 5 நாள்கள் மாணவி அப்படியே இருந்துள்ளார். மயக்கம் தெளிந்தபோது மாணவிக்கு சாப்பிட உணவு கொடுத்துள்ளனர். ஆனால் அவர் அதைச் சாப்பிடவில்லை. அதோடு என்னை விட்டுவிடுங்கள் என்று அவர்களிடம் கெஞ்சியுள்ளார். அந்த மனித அரக்கன்கள் மாணவியை 5 நாள்கள் வீட்டிலேயே அடைத்துவைத்துள்ளனர். 

`5 நாள்கள் வைத்திருந்தோம்; காட்டிக்கொடுப்பேன்னு சொன்னதால் கொன்றோம்!'- மாணவி கொலை வழக்கில் பகீர் வாக்குமூலம்

5வது நாள், மயக்கம் தெளிந்த மாணவியிடம் நாதமுனி பேசியுள்ளார். அப்போது, `அவர் உன்னை உயிரோடு விட்டுவிடுகிறோம். ஆனால் நீ இங்கு நடந்ததை அப்பா, அம்மா என யாரிடமும் சொல்லக்கூடாது' என்று கூறியுள்ளார். அதற்கு மாணவி, `நான் கண்டிப்பாக உங்களை காட்டிக் கொடுப்பேன்' என்று தைரியமாகக் கூறியுள்ளார். அதன்பிறகே கரும்பு வெட்டப் பயன்படுத்தும் அரிவாளைக் கொண்டு மாணவியின் பின்கழுத்து அறுக்கப்பட்டுள்ளது. அதாவது ஆடு வெட்டுவதைப் போல மாணவியின் கழுத்தை அறுத்துள்ளனர். இதனால் ரத்தம் முழுவதும் வெளியேறி மாணவி சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார். தொடர்ந்து நிர்வாணமாக இருந்த மாணவிக்கு அவர் அணிந்து வந்த பள்ளிச் சீருடையை சங்கரய்யா அணிவித்துள்ளார். அதன்பிறகு மாணவியின் சடலத்தை ஓடையில் புதைத்துள்ளனர்" என்றனர். 

போலீஸ்  உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ``மாணவி கொலை வழக்கில் கைதானவர்களிடம் விசாரித்தபோது கடந்த 11.9.2018 தேதி மாணவியைக் கொலை செய்ததாகத் தெரிவித்தனர். அன்றைய தினம் மாணவியின் கைகளை இரண்டு பேரும் கால்களை இரண்டு பேரும் பிடித்துள்ளனர். ஒருவர் கழுத்தை அறுத்துள்ளார். 5 நாள்களாக மாணவியை நிர்வாணமாக வைத்திருந்ததாக அவர்கள் வாக்குமூலத்தில் கூறியுள்ளனர். மாணவி மாயமான வழக்கு, கொலை வழக்கு ஆகியவை தொடர்பாக விசாரித்தபோது 5 பேரும் போனில் தொடர்பு கொண்டு பேசி விவரங்களை அறிந்துள்ளனர். சங்கரய்யா கொடுத்த வாக்குமூலத்தில் மாணவியை தன்னுடைய மாமன் மகள் என்று கூறினார். மேலும் மாணவிக்கும் தனக்கும் நீண்ட நாள்களாக பழக்கம் இருந்ததாகத் தெரிவித்தார். சங்கரய்யாவை நம்பிச் சென்ற மாணவிக்கு நம்பிக்கை துரோகம் நடந்துள்ளது. 5 நாள்களாக மாணவிக்கு ஏற்பட்ட கொடுமைகள் குறித்து தெரிந்தும் சங்கரய்யா அவரைக் காப்பாற்ற மனமில்லாமல் இருந்துள்ளார்" என்றார். 

`5 நாள்கள் வைத்திருந்தோம்; காட்டிக்கொடுப்பேன்னு சொன்னதால் கொன்றோம்!'- மாணவி கொலை வழக்கில் பகீர் வாக்குமூலம்

 வழக்கறிஞர் அருள் கூறுகையில், ``மாணவி கொலை வழக்கில் கைதான கல்லூரி மாணவர் சங்கரய்யா மீது மட்டும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மற்ற 4 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அவர்கள் மீதும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளேன். மேலும், மாணவி கொலை செய்யப்பட்ட பண்ணை வீடு, புதைக்கப்பட்ட இடம் ஆகிய இடங்களுக்கு நேரில் சென்றேன். பண்ணை வீடு அமைந்துள்ள இடம் ஆள்அரவமற்ற பகுதியாகும். இதனால் மாணவி சத்தம் போட்டால்கூட அது யாருக்கும் கேட்காது. நாதமுனிக்கு கல்லூரி படிக்கும் வயதில் குழந்தைகள் உள்ளனர். அப்படியிருந்தும் மாணவியிடம் தவறாக நடக்க அவருக்கு எப்படி மனம் வந்தது எனத் தெரியவில்லை. மாணவியைக் கூட்டாக  சித்ரவதை செய்து பாலியல் வன்கொடுமை செய்த இவர்களுக்கு நீதிமன்றம் கடும் தண்டனை வழங்கவேண்டும். கைதானவர்களை ஜாமீனில் எடுக்க பிரபல கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் டீம் முயற்சி செய்துவருகிறது. பொள்ளாச்சி சம்பவத்தில் கைதானவர்களுக்கு சட்ட உதவிகளைச் செய்ய வழக்கறிஞர்கள் முன்வரவில்லை. அதுபோல திருத்தணி மாணவி விவகாரத்திலும் வழக்கறிஞர்கள் முடிவெடுக்க வேண்டும்" என்றார். 

பெண்களுக்கு எதிரான பொள்ளாச்சி சம்பவங்கள் ஒவ்வொரு பகுதியிலும் சத்தமில்லாமல் நடந்து வருகின்றன. இந்தக் கொடுமைகள் தடுக்கப்பட வேண்டும். அதற்கு இந்தச் சமுதாயத்தில் மாற்றம் ஏற்படவேண்டும்