மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை - கடலூரை சேர்ந்த முதியவர் உள்பட 5 பேர் கைது | arrested for raping mentally ill girl

வெளியிடப்பட்ட நேரம்: 08:30 (17/03/2019)

கடைசி தொடர்பு:08:30 (17/03/2019)

மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை - கடலூரை சேர்ந்த முதியவர் உள்பட 5 பேர் கைது

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே  மனநலம் பாதிக்கப்பட்ட  சிறுமியைப்  பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய 5 பேரை சேத்தியாத்தோப்பு மகளிர் காவல் நிலைய  போலீஸார் கைது செய்தனர்.

கைது

காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள  கீழக்கடம்பூர் கிராமத்தைச் சேர்ந்த 78 வயதான விவசாயி ஒருவர் காது கேட்காமலும், கண் தெரியாமலும் உள்ளார். இவருக்கு 3 மகள்கள் உள்ளனர். 3- வது மகளுக்கு 17 வயதாகிறது. இவர் பிறந்ததில் இருந்து மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்ததால் பள்ளி செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். விவசாயி தனது ஒரு ஏக்கர் கரும்பு தோட்டத்தை  வேறு நபரிடம் குத்தகைக்கு விட்டுள்ளார். அந்த கரும்பு தோட்டத்தை அதே பகுதியை சேர்ந்த பாலு (53), விநாயகம் (55),  ராமலிங்கம் (60),  வேல்முருகன்(25)  வீராசாமி (36) ஆகிய 5 பேரும் பராமரித்து வந்துள்ளனர். இவர்கள் 5 பேரும் அந்த  மனநலம்பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பிஸ்கெட், சாக்லேட்  வாங்கிக் கொடுப்பது வழக்கம். பின்னர்  கடந்த 4  மாதங்களாக  அந்த சிறுமியை 5 பேரும் ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

ஒவ்வொரு நபரும்  மற்றவருக்குத் தெரியாமல் அந்த  சிறுமியை சீரழித்துள்ளனர். கரும்பு தோட்டமும் வீடும் அருகே  இருந்ததால் ஊர்க்காரர்களுக்குச்  சந்தேகம் வரவில்லை.  இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுமிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. அவரது உறவினர்கள் அவரை சிதம்பரம்  அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுமி 4 மாதம் கர்ப்பமாக  இருப்பதாகக் கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் இது குறித்து அவரின் தந்தையிடம் தகவல்  தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து  சிறுமியின் சகோதரி  இது குறித்து சேத்தியாத்தோப்பு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் செய்துள்ளார்.

இதனையடுத்து சேத்தியாத்தோப்பு டி.எஸ்.பி ஜவஹர்லால், அனைத்து மகளிர் காவல்நிலைய இஸ்பெக்டர் ஆக்னேஸ்மேரி, சப்-இன்ஸ்பெக்டர் திரிபுரசுந்தரி மற்றும் போலீஸார் சிறுமியின் வீட்டுக்குச் சென்று அவரிடம் விசாரணை நடத்தினர். அதில்  5 பேரும் தன்னை பாலியல் வன்கொடுமை செய்தனர் என்றும், வெளியே  சொன்னால் உன்னைக்  கொலை செய்துவிடுவோம் என்று  மிரட்டினார்கள் என்று அழுது கொண்டே கூறியுள்ளார். இதனையடுத்து  டி.எஸ்.பி ஜவஹர்லால் தலைமையிலான அனைத்து மகளிர் நிலைய போலீஸார் பாலு உள்ளிட்ட 5 பேரையும்  கைது செய்தனர். இந்த சம்பவம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


[X] Close

[X] Close