Published:Updated:

‘சிறையில் பாதுகாப்பு இல்லை உளவியல் ரீதியாக தொந்தரவு கொடுக்கிறார்கள்’ - சயான் தரப்பு வழக்கறிஞர் வாதம்!

‘சிறையில் பாதுகாப்பு இல்லை உளவியல் ரீதியாக  தொந்தரவு கொடுக்கிறார்கள்’ - சயான் தரப்பு வழக்கறிஞர் வாதம்!
‘சிறையில் பாதுகாப்பு இல்லை உளவியல் ரீதியாக தொந்தரவு கொடுக்கிறார்கள்’ - சயான் தரப்பு வழக்கறிஞர் வாதம்!

நீலகிரி மாவட்டம் காேத்தகிரியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கொடநாடு எஸ்டேட் உள்ளது. கடந்த 2017ம் ஆண்டு கொடநாடு எஸ்டேட் பங்களாவில் காெள்ளை முயற்சி நடந்தது. அதில் எஸ்டேட் காவலாளி ஓம் பகதுர் காெலை செய்யப்பட்டார். இந்தக் குற்றச்சம்பவத்தில் கனகராஜ், சயான், வாளையார் மனாேஜ், பிஜின் குட்டி, திபு, சந்தாேஷ் சாமி, மனாேஜ், ஜம்சிர் அலி, சதீஸன், உதயகுமார், ஜிதின் ஜாய் உள்ளிட்ட 11 பேரை பாேலீஸார் குற்றவாளிகள் எனக் கண்டறிந்து கைது செய்தனர். குற்றவாளிகள் ஜாமீனில் இருந்த பாேது, சாலை விபத்து ஒன்றில் முதல் குற்றவாளியாகக் கருதப்பட்ட கனகராஜ் உயிரிழந்தார். 

இந்த வழக்கு விசாரணை ஊட்டி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு வழக்கின் முதல் இரண்டு குற்றவாளிகளான சயான், வாளையார் மனோஜ் ஆகிய இருவரும் பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேலுடன் இணைந்து டெல்லியில் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது கொலைப் பழி சுமத்தினர். இந்த விவகாரத்தில் தாெடர்ந்து காெடநாடு வழக்கு மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியது. 
 

பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தியதன் காரணமாக இருவரது ஜாமீனையும் ரத்து செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். வழக்கு விசாரணைக்கு மட்டும் காேவையிலிருந்து ஊட்டி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ஆஜராகி செல்கின்றனர். கடந்த மார்ச் 4ம் தேதி நடந்த வழக்கு விசாரணையில், முதல் முறையாக குற்றம் சுமத்தப்பட்ட 10 பேரும் ஒரே சமையத்தில் நீதிபதி முன்னிலையில் நேரில் ஆஜராகினர், விசாரணை இன்று (18ம் தேதிக்கு) நீதிபதி வடமலை ஒத்தி வைத்து உத்தரவிட்டார். 

இன்று காலை 10 மணியளவில் ஜாமீனில் உள்ள குற்றவாளிகள் 5 பேர் ஆஜராகினர். சிறையில் உள்ள ஐவர் ஆஜராக தாமதமானதால் வழக்கு விசாரணை 3 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதற்கிடையே, சிறையிலிருந்து அழைத்து வரப்பட்ட சயான், தனது தரப்பு வழக்கறிஞர் ஆனந்தனிடம் சிறையில் தான் அனுபவிக்கும் காெடுமைகள் குறித்து காவலர்கள் முன்னிலையில் பேச முற்பட்டபாேது, அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் மற்றும் பாேலீஸார் இணைந்து சயானை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றனர். 

சரியாக 3 மணிக்கு நீதிபதி வடமலை முன்னிலையில் குற்றம்சாட்டப்பட்ட 10 பேரும் ஆஜராகினர். அப்பாேது சயான் தரப்பு வழக்கறிஞர் ஆனந்தன் நீதிபதியிடம், சிறையில் சயானுக்கு என்ன நடக்குமோ என பயமாக உள்ளது. ஏனெனில், சயான் மற்றும் வாளையார் மனாேஜ் மீது சிறைக்குள் கடுமையான உரிமை மீறல்கள் நடைபெறுவதாக தெரிகிறது. எனவே, நீதிமன்றத்திற்கு வரும் சமையங்களில் குற்றம்சாட்டப்பட்ட சயானுடன் பேச அனுமதி வழங்க வேண்டும் எனக் கேட்டுக் காெண்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வடமலை, பாேலீஸ் காவலில் உள்ள 5 பேரின் காவலை நீட்டித்தும் , வழக்கு விசாரணையை வரும் மார்ச் 27ம் தேதிக்கு ஒத்திவைத்து  உத்தரவிட்டார். 

பின்னர் நிருபர்களுக்குப் பேட்டியளித்த சயான் தரப்பு வழக்கறிஞர் கூறியதாவது, காேவை மத்தியச் சிறையில் சயானை பனிஷ்மென்ட் பிளாக்கிலும், வாளையார் மனாேஜை மென்டல் பிளாக்கிலும் அடைத்து வைத்து உளவியல் ரீதியாக துன்புறுத்தி வருகின்றனர். மேலும், சயான் சிறையில் உள்ள சக கைதிகளுடன் கூட பேச முடியாதவாரு தனிமைபடுத்தப்பட்டுள்ளார். குறிப்பாக கோவை மத்தியச் சிறையிலிருந்து அழைத்து வரும் பாேது கூட சக கைதிகளுடன் அழைத்து வராமல், தனி வாகனத்தில் சயான் அழைத்து வரப்படுகிறார். இது தாெடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிட உள்ளோம் என்றார்.