Published:Updated:

காரில் சென்றபோது..! - நடந்த விபரீதத்தைச் சொல்லும் சாதிக் பாட்சாவின் மனைவி 

காரில் சென்றபோது..! - நடந்த விபரீதத்தைச் சொல்லும்  சாதிக் பாட்சாவின் மனைவி 
காரில் சென்றபோது..! - நடந்த விபரீதத்தைச் சொல்லும் சாதிக் பாட்சாவின் மனைவி 

``குடும்ப நண்பரைச் சந்தித்துவிட்டு வீட்டுக்கு காரில் திரும்பிய சமயத்தில் கற்கள், கத்தியைக் கொண்டு காரைத் தாக்கினர். இதனால் எனக்கும் என் குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும்'' என்று சாதிக் பாட்சாவின் மனைவி புகார் கொடுத்துள்ளார். 

சென்னை துரைப்பாக்கத்தைச் சேர்ந்த சாதிக் பாட்சாவின் மனைவி ரேகாபானு இன்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தார். அவர், பரபரப்பான புகார் மனு ஒன்றைக் கொடுத்தார். அதில், ``நான் மேற்கண்ட முகவரியில் என் குழந்தைகள், அம்மா, தம்பி மற்றும் அவரின் குடும்பத்தினருடன் ஒரே வீட்டில் குடியிருந்துவருகிறேன். என் கணவர் சாதிக் பாட்சா, க்ரீன் புரோமோட்டர்ஸ் என்ற நிறுவனத்தில் நிர்வாக இயக்குநராக இருந்தார். கடந்த 2011-ம் ஆண்டு 2 ஜி வழக்கு சிக்கலின்போது என் கணவர் தற்கொலை செய்துகொண்டார். அதன்பிறகு என்னையும் என் குடும்பத்தினரையும் சிலர் மிரட்டிவந்தனர். என் கணவரின் பெயரிலிருந்த சொத்துகளை மீட்பதற்காக சட்டரீதியாக போராடினேன். அதிலும் சிக்கல்கள் வந்ததால் நுங்கம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் வழக்கறிஞர்கள் மீது புகார் கொடுத்தேன். சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டபிறகு நிம்மதியாக இருந்தோம். இந்த நிலையில், என் கணவரின் நினைவு தினத்தையொட்டி பத்திரிகைகளில் விளம்பரம் செய்தேன். அந்த விளம்பரத்தில் `கூடா நட்பு கேடாய் விளையும்' என்ற வாசகம் இருந்தது. 

இந்த நிலையில், அசோக்நகரில் உள்ள எங்கள் குடும்ப நண்பரைச் சந்திக்க காரில் சென்றேன். காரை என் தம்பி ஓட்டினார். பிறகு அங்கிருந்து வீட்டுக்குப் புறப்பட்டோம். பல்லாவரம், துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனை அருகே கார் வந்தபோது முகம் தெரியாத சிலர் கத்தி, கற்களைக் கொண்டு காரைத் தாக்கினர். இதனால் காரின் கண்ணாடி உடைந்தது. உயிர்பயத்தில் என் தம்பி காரை வேகமாக ஓட்டினார். கணவரின் நினைவு தின விளம்பரத்துக்குப்பிறகு இந்தச் சம்பவம் நடந்துள்ளது எங்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி எனக்கும் என் குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  

இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவரிடம் கேட்டதற்கு, ``சம்பவம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளோம். மேலும், சம்பவம் நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபிறகே அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது காரின் கண்ணாடி உடைந்ததற்கான புகைப்படங்களை கொடுத்துள்ளனர். அந்த ஆதாரம் அடிப்படையில் விசாரணை நடத்தப்படும்" என்றார். 

தேர்தல் சமயத்தில் சாதிக் பாட்சாவின் மனைவி ரேகாபானு, பாதுகாப்பு கேட்டு மனு கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.