Published:Updated:

``பொள்ளாச்சி விவகாரத்தில் புகையும் அரசியல்!” - தேர்தலுக்காக அதிகாரிகளை மாற்றாத மர்மம்

``பொள்ளாச்சி விவகாரத்தில் புகையும் அரசியல்!” - தேர்தலுக்காக அதிகாரிகளை மாற்றாத மர்மம்
``பொள்ளாச்சி விவகாரத்தில் புகையும் அரசியல்!” - தேர்தலுக்காக அதிகாரிகளை மாற்றாத மர்மம்


பல நிச்சயதார்த்தங்கள் நின்றுவிட்டன... சில திருமணங்களும் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன... தகவல் கேட்டமாத்திரத்தில், உடலும் மனதும் ஒரு கணம் ஆடிப்போனது. பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்கொடுமைகள், அதுதொடர்பாக ஊடகங்களில் வெளியான தகவல்கள், சமூகஊடகங்களில் நடந்த விவாதங்கள் எதிரொலியாக, `பொள்ளாச்சிப் பொண்ணுகளும் வேண்டாம்; மாப்பிள்ளைகளும் வேண்டாம்’ என்ற மனநிலைக்கு வெளியூர்க்காரர்கள் சிலர் வந்துவிட்டதாகத் தெரிவிக்கிறது நமக்குக் கிடைத்த அந்தத் தகவல். 

இது வதந்தியாகத்தான் இருக்குமென்று நினைத்துப் பலரிடமும் விசாரித்தால், தங்களுக்குத் தெரியவே சில குடும்பங்களில் மங்கல வைபவங்கள் நின்று போயிருப்பதாகச் சொல்லி, அதிர்ச்சியூட்டினார்கள். வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிற காரியம் இது. ஒரு சில மனிதமிருகங்கள் செய்த பாவச்செயலுக்கு ஏற்கெனவே புண்ணாகிப் போயுள்ள பொள்ளாச்சி மக்களுக்குக் கூடுதல் தண்டனை கொடுப்பதைப் போன்றது என்று குமுறுகிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

பொள்ளாச்சியில், பாலியல் வன்கொடுமையை அரங்கேற்றிய சிலர் சிக்கியுள்ளனர்.  இன்னும் சிலருக்கும்கூட இதில் தொடர்புகள் இருந்திருக்கலாம். அதற்காக, அங்குள்ள பல்லாயிரக்கணக்கான இளைஞர்களையும் சந்தேகப்பார்வையோடு பார்ப்பது, அபத்தம். அதேபோன்று, ஆபாச வீடியோ கும்பலால் சில பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம். அதற்காக, அங்குள்ள பெண்கள் எல்லோரையும் பூதக்கண்ணாடி போட்டுப்பார்ப்பதும், புறக்கணிப்பதும் அபத்தத்தின் உச்சம்.

 இந்த விவகாரம் வெளியே கசிந்ததில் தொடங்கி, இப்போது வரையிலும் இதில் தொடர்புடைய உண்மைக் குற்றவாளிகள், பின்புலமாக இருந்த அரசியல்வாதிகள் எனப் பலரையும் காப்பாற்ற நினைப்பதால்தான், உண்மைக்குற்றவாளிகள் யார் யார், பாதிக்கப்பட்ட பெண்கள் எத்தனை பேர், எடுக்கப்பட்ட ஆபாச வீடியோக்கள் எத்தனை என்பது தெளிவாகத் தெரியாமல் இருக்கிறது. மொத்தமாக அத்தனையையும் போலீஸார் மூடி மறைக்கப்பார்த்த காரணத்தால்தான், விவகாரம் பெரிதாக வெடித்துக் கிளம்பியது.

காவல்துறையின் பாரபட்சமுள்ள விசாரணையும் இதில் பல யூகங்களைக் கிளப்பிவிட்டது. வெறும் நான்கு ஆபாச வீடியோக்கள்தாம் கிடைத்தன என்று கோவை எஸ்.பி பாண்டியராஜன் சொன்னபின்பு, மேலும் சில ஆபாச வீடியோக்கள் வெளியானதால், இன்னும் பல நூறு பேர் பாதிக்கப்பட்டிருப்பார்களோ, ஊடகங்கள் சொல்வதுபோல ஆயிரத்துக்கும் மேலே ஆபாச வீடியோக்கள் இருக்குமோ என்ற பேச்சு பரவியது. இத்தனை யூகங்களையும் பரவவிட்டு வேடிக்கை பார்த்தது, போலீஸ்தான். 

இந்த விவகாரத்தில், ஆளும்கட்சியின் மீதும், காவல்துறையின் மீதும் மக்களுக்கு இருக்கும் கோபத்தை, சமீபத்தில் நடந்த முழுமையான கடையடைப்பு உணர்த்தியது. பொள்ளாச்சியைச் சேர்ந்த சமூகஆர்வலர்கள் சிலரிடம் பேசினோம்...‘‘நல்ல அமைதியான, அழகான ஊர் என்று பெயர்பெற்றது பொள்ளாச்சி. அதனால்தான், இங்கே சினிமாப் படப்பிடிப்புகள் அதிகமாக நடந்தன. ஆனால், அந்த சினிமாக் கலாசாரம், இங்குள்ள இளைய தலைமுறையை இப்படிப் பாதிக்குமென்று யாருமே நினைக்கவில்லை. இந்த ஊருக்கென்று சில மாண்புகள் இருக்கின்றன. இப்போது சில ஆபாசப் பொறுக்கிகள் செய்த காரியத்தால், ஊருக்கே அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. இதனால், இந்த ஊர் மக்கள் மனதளவில் மிகவும் நொந்துபோயிருக்கின்றனர். சமூக ஊடகங்களில் `ArrestPolllachiRapist# என்று ஹேஷ்டேக் போட்டபோதே, பொள்ளாச்சி மக்கள் எல்லோரும் கூனிக்குறுகிவிட்டார்கள்.

டெல்லி, நொய்டா போன்ற பெருநகரங்களில் இதேபோன்ற சம்பவங்கள் நிகழ்ந்தபோது, டெல்லி, நொய்டா போன்ற ஊர்ப்பெயர்களைச் சேர்த்தே, `ஹேஷ்டேக்’குகள் போடப்பட்டன. அவை பெருநகரங்களாக இருப்பதால், அந்த ஊருக்குப் பெரும் பாதிப்பு ஏற்படவில்லை. ஆனால், பொள்ளாச்சி, ஒன்றரை லட்சம் மக்கள் மட்டுமே குடியிருக்கும் ஒரு சிறு நகரம். இங்கு `ஆயிரக்கணக்கான பெண்கள் பாலியல் வன்கொடுமைக் கும்பலால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்’ என்று தகவல் பரவும்போது, `அந்தப் பெண்களில் இந்தப் பெண்ணும் ஒன்றாய் இருக்கலாமோ?’ என்று கேள்வி எழுவது இயல்பான விஷயம்தான்.

இந்த `ஹேஷ்டேக்’குகள், பொள்ளாச்சி குறித்து உலகம் முழுவதும் அவதூறைப் பரப்பிவிட்டன. இப்போது பல திருமணங்கள், நிச்சயதார்த்தங்கள் நின்று போனதற்கும் இவை முக்கிய பங்காற்றியிருப்பதையும் மறுக்க முடியாது. ஆனால், பொள்ளாச்சி பாலியல் விவகாரம், இத்தனை பெரிதாக விஸ்வரூபமெடுப்பதற்கு, காவல்துறையின் கள்ளமெளனமே முழுமுதற்காரணம். சி.பி.ஐ–க்கு இந்த வழக்கை ஒப்படைக்க தமிழகஅரசு முடிவெடுத்தபின்னும் சி.பி.சி.ஐ.டி போலீஸார், வழக்கு விசாரணையைக் கொண்டு செல்வதைப் பார்த்தால், உண்மைக்குற்றவாளிகளைத் தப்புவிக்கவே முயற்சி நடப்பதாக சந்தேகம் எழுகிறது’’ என்றனர்.

இந்த விவகாரத்தில், காவல்துறையின் நடவடிக்கைகள் குறித்து, அந்தத் துறையிலேயே இருக்கும் நேர்மையான அதிகாரிகள் பலரும் குமுறித் தீர்க்கின்றனர். அத்தகைய அதிகாரிகள் சிலரிடம் பேசினோம்...``பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில், எப்.ஐ.ஆர் போட்ட கீழ்நிலை போலீஸார் தொடங்கி, சி.பி.ஐ விசாரணைக்குப் பரிந்துரைக்கும் அரசாணையில் கையொப்பமிட்டுள்ள உள்துறைச் செயலர் வரை எல்லோரும் தவறு செய்துள்ளனர். இந்த அரசின் நிர்வாகச் சீர்கேடுக்கு இதுவும் ஓர் உதாரணம். புகார் கொடுத்த பெண்ணின் பெயரை மறைக்காமல் வெளியிட்டுவிட்டு, பாலியல் வன்கொடுமையில் தொடர்புடைய பலரது பெயரையும் திட்டமிட்டு மறைத்துள்ளனர். 

பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக புகார் கொடுத்த பெண்ணின் பெயரை முதலில் வெளியிட்ட எஸ்.பி பாண்டியராஜன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறு நீதிமன்றம் கூறிய பின்னும், அதில் எங்களுக்கு எவ்வித ஆட்சேபமும் இல்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்த பின்னும் அவர் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அவரை மாற்றவே கூடாது என்பதில், கோவையிலுள்ள ஆளும்கட்சி முக்கிய பிரமுகர் பிடிவாதமாக இருக்கிறார். ஏனெனில், அவரால் இந்தத் தேர்தலில் ஆளும்கட்சிக்குச் சாதகமாக பல விஷயங்கள் நடக்கவேண்டியிருக்கிறது. அதனால்தான், அவரையும் மாற்றவில்லை. அவருடன் சேர்ந்து, இந்த விவகாரத்தில் பல விஷயங்களை மூடி மறைத்துள்ள பொள்ளாச்சி டி.எஸ்.பி ஜெயராம், இன்ஸ்பெக்டர் நடேசன், எஸ்.ஐ ராஜேந்திரபிரசாத் ஆகியோர் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட கும்பலில் இன்னும் பலருக்குத் தொடர்பு இருப்பது நிச்சயம். பொள்ளாச்சி நகராட்சியில் முக்கியப் பொறுப்பிலிருந்த முன்னாள் மக்கள் பிரதிநிதி ஒருவர், சிறுபான்மைப் பிரிவைச் சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் ஒருவர் உட்பட மேலும் பலருக்குத் தொடர்பு இருப்பதாக, சமூகஊடகங்களிலும், பொள்ளாச்சி போலீஸ் வட்டாரங்களிலும் தகவல்கள் பரவி வருகின்றன. ஆனால், இவர்கள் யாரையும் விசாரிக்காத சி.பி.சி.ஐ.டி போலீஸார், பாலியல் துன்புறுத்தலில் தொடர்புடைய திருநாவுக்கரசு கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் தமிழக காங்கிரஸ் செயல்தலைவர் மயூரா ஜெயக்குமாருக்கு சம்மன் அனுப்பி விசாரித்துள்ளனர். இதிலிருந்தே இந்த வழக்கில், நேர்மையான விசாரணை நடக்கவில்லை என்பதும், பிரச்னையை திசை திருப்ப போலீஸார் முயற்சி செய்வதும் தெளிவாகிறது’’ என்றனர்.

பொள்ளாச்சி பாலியல் விவகாரம் எதிரொலியாக, பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதியில் மட்டுமன்றி, கொங்கு மண்டலத்திலுள்ள பல்வேறு தொகுதிகளிலும் ஆளும்கட்சிக்குப் பாதிப்பு ஏற்படுமென்று எதிர்பார்க்கப்படுகிறது. பொள்ளாச்சித் தொகுதியில் மீண்டும் போட்டியிடும் எம்.பி மகேந்திரன், கடந்த ஐந்தாண்டுகளாக நன்கு பணியாற்றியுள்ளார் என்பதோடு, எளிமையான அணுகுமுறை உள்ளவர் என்பதால், தொகுதிக்குள் நல்லபெயர் இருக்கிறது. ஆனால், அவரால் முழுவீச்சில் பிரசாரம் மேற்கொள்ள முடியாத சூழ்நிலை இருப்பதாக அ.தி.மு.க நிர்வாகிகளே வருத்தப்படுகின்றனர்.

அ.தி.மு.க நிர்வாகிகள் சிலர் கூறுகையில், ``கொங்கு மண்டலம், அ.தி.மு.க–வின் கோட்டை என்பார்கள். ஆனால், மற்ற தொகுதிகளைவிட, பொள்ளாச்சி தொகுதிதான், எங்களது கட்சிக்கு மிகவும் சாதகமான தொகுதியாகும். வழக்கமாக, வேட்பாளரை அறிவித்துவிட்டால், இங்கேதான் அமர்க்களமான வரவேற்பு வழங்கப்படும். ஆனால், இந்த முறை அத்தகைய நிகழ்ச்சி எதுவும் நடக்கவில்லை. பொள்ளாச்சிக்குள் வாக்குச் சேகரிக்கவே அ.தி.மு.க–வினர்  அஞ்சுகிற சூழ்நிலைதான் இருக்கிறது. ஆனால், இங்கே இவ்வளவு பெரிய பிரச்னை நடந்தபோதும், இதைச் சரி செய்யவேண்டிய முக்கியப் பொறுப்பிலுள்ள ஆளும்கட்சி வி.ஐ.பி சுத்தமாகக் கண்டுகொள்ளவே இல்லை. பிரச்னை பெரிதாக பற்றி எரிந்துகொண்டிருந்தபோது, ஜி.கே.வாசனுடன் தொகுதி உடன்படிக்கை செய்து கொண்டிருந்ததை கட்சிக்காரர்கள் எல்லோரும் பார்த்துவிட்டுக் கொந்தளித்துப் போயுள்ளனர். 

இந்த விவகாரத்தை வைத்தே, பொள்ளாச்சி ஜெயராமனை அரசியலிலிருந்து காலி செய்ய வேண்டுமென்பதே, சிலரது நோக்கமாகத் தெரிகிறது. எம்.பி மகேந்திரனும், பொள்ளாச்சி ஜெயராமனின் ஆதரவாளராக இருப்பதால், அவரைத் தோற்கடிப்பதற்கான மறைமுக முயற்சியாகவும் இதைக் கருத வேண்டியிருக்கிறது. இன்று வரையிலும், பொள்ளாச்சி ஜெயராமன் பிரசாரத்துக்கு வர இயலாத சூழ்நிலையை ஏற்படுத்தியதே, அவரது உட்கட்சி எதிரிகளின் முதல் வெற்றி. தேர்தல் முடிவைப் பொறுத்து, இந்த விவகாரம் பெரிதாக வெடிக்க வாய்ப்புள்ளது’’ என்றனர்.

பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தை மூடி மறைப்பதில், பா.ஜ.க-வுக்கும் பெரும்பங்கு இருப்பதாக, அந்தக் கட்சியினர் மீதும் அதிருப்தி கிளம்பியுள்ளது. ஆனால், இந்த விவகாரத்தில் தொடர்புடைய ஆளும்கட்சியினரையும் விட்டு வைக்கக்கூடாது என்பதில், பா.ஜ.க–வின் முக்கியத் தலைவர்கள் பலரும் தீவிரமாக இருப்பதாகவும் ஒரு தகவல் பரவி வருகிறது. அதனால், தேர்தலுக்காக இந்த வழக்கைக் கையில் எடுப்பதை சி.பி.ஐ தள்ளிப் போட்டாலும், தேர்தலுக்குப் பின் வழக்கை சி.பி.ஐ எடுக்கும்போது, அதிர்ச்சிகரமான அதிரடிகள் பல அரங்கேறும் என்று பா.ஜ.க நிர்வாகிகள் சிலர் பேசிக்கொள்கின்றனர்.

தேர்தல் நேரத்தில் வெடித்துக் கிளம்பிய இந்த விவகாரத்தை, சி.பி.சி.ஐ.டி விசாரணை, சி.பி.ஐ–க்குப் பரிந்துரை எனக் கொஞ்சம் ஆறப்போட்டிருக்கிறது ஆளும்கட்சி. ஆனால், இது அணையாத எரிமலை என்பது விரைவில் தெரியவரும் என்கின்றனர் நேர்மையான போலீஸ் அதிகாரிகள். பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.