விருத்தாசலத்தில் வாலிபர் அடித்துக் கொலை - மது போதையில் ஏற்பட்ட தகராறால் நடந்த சோகம் | Vridhachalam Murder News

வெளியிடப்பட்ட நேரம்: 09:20 (25/03/2019)

கடைசி தொடர்பு:09:20 (25/03/2019)

விருத்தாசலத்தில் வாலிபர் அடித்துக் கொலை - மது போதையில் ஏற்பட்ட தகராறால் நடந்த சோகம்

விருத்தாசலம் அருகே குடி போதையில் ஏற்பட்ட தகராறில் வாலிபர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் 4 பேரை போலீஸார் தேடி வருகின்றனர். 

கொலை செய்யப்பட்ட அருண்பாண்டி

விருத்தாசலம் அருகே உள்ள கீழப்பாளையூர் கிராமத்தைச் சேர்ந்த அரிதாஸ் மகன் அருண்பாண்டி(25). இவரும், இவரது நண்பர்கள் பூவரசன் மற்றுமொருவர் அதே கிராமத்தில் உள்ள மணிமுத்தாற்றின் கரையில் அமர்ந்து மது குடித்துள்ளனர். அப்பொழுது அதே கிராமத்தைச் சேர்ந்த முத்துக்குமார் மகன் ஜோதிபிரகாஷ், முருகன் மகன் ஆனந்த், குமார் மகன் மணிகண்டன், அழகுமுத்து மகன் ஆனந்தன் ஆகியோரும் அருகில் அமர்ந்து மது குடித்துள்ளனர்.

அப்போது அருண்பாண்டி நண்பர்கள் அருகில் மரத்தில் இருந்த தேன் கூட்டின் மீது கல் எறிந்துள்ளனர். இதில் இரு தரப்பினரிடையே வாய்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ஜோதிபிரகாஷ் மற்றும் நண்பர்கள் கட்டையால் தாக்கியதில் அருண்பிரகாஷ் பலத்த காயமடைந்துள்ளார். உடன் அருகில் இருந்தவர்கள் அவரை கம்மாபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்துள்ளனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரைப் பரிசோதனை செய்த டாக்டர்கள்
அருண்பாண்டி இறந்துவிட்டதாகக் கூறியுள்ளனர்.

இது குறித்து கருவேப்பிலங்குறிச்சி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அருண்பாண்டி இறப்பிற்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், ஊரில் உள்ள அரசு டாஸ்மாக்கை அகற்ற வேண்டும் எனக் கூறி விருத்தாசலம் - தேவன்குடி சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த கருவேப்பிலங்குறிச்சி போலீஸார்
உடன் நடவடிக்கை எடுப்பதாகக் கூறி அவர்களைக் கலைந்து போகச் செய்தனர். இரு தரப்பினரும் வெவ்வேறு சமுதாயத்தினர்
என்பதால் கீழப்பாலையூர் கிராமத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.