Published:Updated:

சிறுமி பாலியல் கொலை: கோவையில் வலுக்கும் போராட்டங்கள்

சிறுமி பாலியல் கொலை: கோவையில் வலுக்கும் போராட்டங்கள்
சிறுமி பாலியல் கொலை: கோவையில் வலுக்கும் போராட்டங்கள்

கோவையில் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சிறுமியின் மரணத்துக்கு நீதி கேட்டு போராட்டங்கள் வலுத்துள்ளன.

கோவை துடியலூர் அருகே வசிக்கும் தம்பதிக்கு 5 மற்றும் 7 வயதில் இரண்டு பெண் குழந்தைகள். இதில் ஏழு வயது பெண்குழந்தை அருகில் அரசுப் பள்ளியில் படித்து ஒன்றாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை பள்ளி முடிந்து வீடு திரும்பிய குழந்தை, வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்துள்ளது. மாலை 6 மணியாகியும் அந்தக் குழந்தை வீடு திரும்பவில்லை. இதனால்,  அதிர்ச்சியடைந்த பெற்றோர் அக்கம் பக்கம் தேடியுள்ளனர். ஆனால், குழந்தைக் கிடைக்காததைத் தொடர்ந்து தடாகம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த போலீஸார் இரவு 2 மணி வரை தேடியுள்ளனர்.

இந்நிலையில், நேற்று காலை 7.30 மணியளவில், அந்தப் பகுதியில் ஓர் சிறிய சந்தில் டிசர்ட் சுற்றப்பட்டு, கைகள் கட்டப்பட்ட நிலையில் கிடப்பதைப் பார்த்த அப்பகுதி மக்கள் போலீஸார் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இந்நிலையில், அந்தச் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து கொலை வழக்குடன் சேர்த்து, போக்ஸோ சட்டத்திலும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, துடியலூர் பகுதியில் பொது மக்களும், அந்தச் சிறுமியின் உறவினர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
 

இரண்டு மணி நேரமாக சாலை மறியல் நடைபெற்றதால் கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது. அதேபோல, குற்றவாளிகளைப் பிடித்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை சிறுமியின் சடலத்தை வாங்க மாட்டோம் என்று சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இதனால், சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் போலீஸார் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

சந்தேகத்தின் பெயரில் கைது செய்த 4 பேரை காவல்துறையினர் பெற்றோர்களிடம் காணொளி காட்சிகளின் மூலம் காண்பித்ததால் பெற்றோர்கள் சிறுமியின் உடலை வாங்க சம்மதித்தனர்

நாளை மாலை 3 மணிக்குள், இந்த வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள அனைத்து குற்றவாளிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் தரப்பில் உறுதியளித்தனர். இதனால், துடியலூரில் 4 மணி நேரமாக நடைபெற்ற சாலை மறியல் கைவிடப்பட்டது.

நாளைக்குள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் நடத்துவோம் என்று பொதுமக்கள் கூறியுள்ளனர். சந்தோஷ், துரை, சதிஷ், விஜயகுமார் ஆகிய நான்கு பேரிடம் விசாரணை நடத்தி வருவதாக போலீஸார் கூறியுள்ளனர்.