Published:Updated:

பொள்ளாச்சி பாலியல் வழக்கு - பார் நாகராஜனிடம் 4 மணிநேரம் விசாரணை!

பொள்ளாச்சி பாலியல் வழக்கு - பார் நாகராஜனிடம் 4 மணிநேரம் விசாரணை!
பொள்ளாச்சி பாலியல் வழக்கு - பார் நாகராஜனிடம் 4 மணிநேரம் விசாரணை!

பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பாக கோவையில் உள்ள சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் நேரில் ஆஜரான பார் நாகராஜனிடம். சுமார்  4 மணி நேரத்திற்கும் மேலாக சி.பி.சி.ஐ.டி போலீஸார் விசாரணை நடத்தினர்.

தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் 4 பேர் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். வழக்கை சி.பி.ஐக்கு மாற்றக்கோரி தமிழக அரசே அரசாணை வெளியிட்டுவிட்ட நிலையிலும், இன்னும் சி.பி.ஐ இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவில்லை. சி.பி.சி.ஐ.டி போலீஸாரின் விசாரணை தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில், இவ்வழக்கில் புகார் தெரிவித்த பெண்ணின் அண்ணனைத் தாக்கிய வழக்கில் உள்ள பார் நாகராஜனை  விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாரு சி.பி.சி.ஐடி போலீஸார் சம்மன் அனுப்பியிருந்தனர். `பார் நாகராஜுக்கும் பெண்கள் விவகாரத்தில் தொடர்பு இருக்கிறது' என்று சர்ச்சை வெடித்த நிலையில், அவரை விசாரணைக்கு அழைத்து சம்மன் அனுப்பப்பட்ட விவகாரம் பரபரப்பானது. இன்று விசாரணைக்காக கோவை சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் ஆஜரான பார் நாகராஜிடம் சுமார் 4மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டது.

விசாரணை முடிந்ததும் பத்திரிகையாளர்களைச் சந்தித்த பார் நாகராஜ், ``பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி போலீஸ் அதிகாரிகள் என்னிடம் பல்வேறு கேள்விகளைக் கேட்டார்கள். அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு நான் முழுமையாக பதிலளித்துள்ளேன்.  குறிப்பாக, காவல்நிலையத்தில் புகார் கொடுத்திருந்த கல்லூரி மாணவியின் அண்ணனைத் தாக்கியது தொடர்பாக என்னிடம் சி.பி.சி.ஐ.டி அதிகாரிகள் எழுப்பிய கேள்விகளுக்கு நான் பதிலளித்தேன். என்னிடம் விசாரணையில் என்னென்ன கேள்விகள் கேட்டார்கள் என்பதை பொதுவெளியில் என்னால் சொல்ல முடியாது. திருநாவுக்கரசுவுடைய வாக்குமூலத்தின் அடிப்படையிலும் என்னை விசாரணை செய்தார்கள். இந்த விவகாரத்தை எதிர்க்கட்சிகள் முழுக்க முழுக்க அரசியல் ஆக்கிவிட்டார்கள்." என்றார்.

அதேபோல, குற்றவாளிகளோடு முகநூலில் நட்பு வைத்திருந்தார் என்று சமூகவலைதளங்களில் குற்றம் சாட்டப்பட்ட கோவை தெற்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ், மகன் மணிமாறனையும் விசாரணைக்கு ஆஜராகுமாறு சி.பி.சி.ஐ.டி போலீஸார் சம்மன் அனுப்பியிருந்தனர். மணிமாறன் ஆஜராவார் என்று எதிர்பார்த்த நிலையில், அவர் சார்பில் தி.மு.க வழக்கறிஞர் அணியினர் நேரில் ஆஜராகி உயர்நீதிமன்ற வழிகாட்டுதல்கள் அடங்கிய கடிதங்களை சி.பி.சி.ஐ.டி போலீஸாரிடம் வழங்கினர். 

அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தி.மு.க வழக்கறிஞர்கள் குழு, ``சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு ஆஜராகுமாறு, அதிகாலை 3  மணிக்கு மணிமாறனின்  வீட்டுக்குச் சென்று சி.பி.சி.ஐ.டி போலீஸார் சம்மன் கொடுத்துள்ளனர். அதிகாலை 3 மணிக்கு கொடுப்பதன் மூலம் மன உளைச்சலை ஏற்படுத்த நினைக்கிறார்கள்.பொள்ளாச்சி பாலியல் துன்புறுத்தல் தொடர்பான அனைத்து வழக்குகளும் சி.பி.ஐ-க்கு மாற்றப்பட்டுள்ளது என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மணிமாறனுக்கு வழங்கிய சம்மனில் எந்தத் தவல்களும் குறிப்பிடப்படவில்லை. இந்த வழக்கு சி.பி.ஐக்கு மாற்றப்பட்டுள்ளதால் அதுகுறித்த முடிவு தெளிவான பின்பே, மணிமாறன் சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் ஆஜராக முடியும்." என்றனர்.

தி.மு.க மாவட்டப் பொறுப்பாளர் தென்றல் செல்வராஜின் மகன் மணிமாறனை அதிகாலை 4 மணிக்கு சம்மன் அனுப்பி விசாரிக்கும் சி.பி.சி.ஐ.டி போலீஸார். ஆரம்பத்திலிருந்து பெருமளவு சந்தேக ரேகைகள் படர்ந்திருக்கும் அ.தி.மு.க துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனின் மகனை விசாரணைக்கு அழைக்காதது ஏன்? இதிலிருந்தே தெரிந்துகொள்ளுங்கள் சி.பி.சி.ஐ.டி போலீஸின் செயல்பாடு எப்படி இருக்கிறதென்று" என்று கொதிக்கிறார்கள் தி.மு.கவினர்.