Published:Updated:

கொடநாடு கொலை வழக்கு: மனோஜ்சாமிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கிய நீதிமன்றம்!

கொடநாடு கொலை வழக்கு: மனோஜ்சாமிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கிய நீதிமன்றம்!
கொடநாடு கொலை வழக்கு: மனோஜ்சாமிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கிய நீதிமன்றம்!

கொடநாடு கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மனோஜ்சாமிக்கு, நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது ஊட்டி மாவட்ட அமர்வு நீதிமன்றம். 

கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு, ஊட்டி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்துவருகிறது. இந்த வழக்கில் தொடர்புடைய 10 பேரும் ஜாமீ்ன் பெற்று, மாதம் தோறும் நீதிமன்றத்தில் ஆஜராகிவந்தனர். இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் முக்கிய குற்றவாளிகளான சயான் மற்றும் வாளையார் மனோஜ் ஆகியோர் டெல்லியில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர். அவர்கள், கோடநாடு கொலை மற்றும் கொள்ளைக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியே காரணம் எனத் தெரிவித்தனர். இவர்கள் இருவரின் ஜாமீனை ரத்துசெய்ய ஊட்டி நீதிமன்றத்தில் அரசு தரப்பு வழக்கறிஞர் பால நந்தகுமார் மனு செய்தார். இந்த மனுவை ஏற்ற நீதிபதி வடமலை, இவர்கள் இருவரது ஜாமீனையும் ரத்துசெய்து உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து, கடந்த 1-ம் தேதி சயான், வாளையார் மனோஜ் ஆகியோரைக் கைதுசெய்தனர். இதேபோல, விசாரணையின்போது ஆஜராகாத பிஜின்குட்டி மற்றும் திபு ஆகியோரும் கைதுசெய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், கடந்த மாதம் 18 -ம் தேதி, வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஊட்டி கோர்ட்டில் ஆஜராகாத மனோஜ்சாமிக்கும் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது. இதை அறிந்த மனோஜ்சாமி, கடந்த மாதம் 20 -ம் தேதி  ஊட்டியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி வடமலை முன் சரண் அடைந்தார். அவரைக் கைதுசெய்த போலீஸார் கோவை சிறைக்குக் கொண்டுசென்றனர். இந்நிலையில், ஜாமின் கோரி மனோஜ்சாமி மனு தாக்கல் செய்திருந்தார். இம்மனு, நேற்று மாலை விசாரணைக்கு வந்தது. மானோஜ்சாமிக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி, மாவட்ட நீதிபதி வடமலை உத்தரவிட்டார். மேலும், சோலூர்மட்டம் காவல் நிலையத்தில் தினமும் மாலை 5 மணிக்கு கையெழுத்து போட வேண்டும். ஒவ்வொரு முறையும் வழக்கு விசாரணையின்போது தவறாமல் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார்.