`90 பெண்கள் பாதிக்கப்படல, ஒரு சில சம்பவங்களே நடந்திருக்கு!'- சேலம் போலீஸ் கமிஷனர் விளக்கம்


``பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது பாலியல் சீண்டல்களில் ஈடுபடும் நபர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று சேலம் போலீஸ் கமிஷனர் சங்கர் விளக்கமளித்துள்ளார்.
சேலம் கொண்டலாம்பட்டி பட்டர்ஃப்ளை பாலத்தின் வழியாக தனியாகச் செல்லும் பெண்களிடமும், கணவர், காதலரோடு செல்லும் பெண்களையும் குறி வைத்து ஒரு சமூக விரோதக் கும்பல் தொடர்ந்து வழிப்பறி, பாலியல் சீண்டல், நகை, பணம் பறித்து புகைப்படம், வீடியோ எடுத்தல் போன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்திருக்கிறார்கள். இதனால் பல பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற தகவல் காட்டுத் தீ போலப் பரவி சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் சேலம் மாநகரக் காவல்துறை ஆணையர் சங்கர் அதற்கான விளக்கத்தையும் காவல்துறை எடுத்திருக்கும் நடவடிக்கைகளையும் நம்மிடம் தெரிவித்தார்.
``கொண்டலாம்பட்டி பட்டர்ஃப்ளை பாலத்தில் நடந்த சம்பவத்தை பொறுத்தவரை எங்களுக்குப் புகார் வந்ததும் உடனே துணை ஆணையர் தலைமையில் விசாரணைக் குழு அமைத்து நடவடிக்கை எடுத்திருக்கிறோம். இதில் 90 பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது தவறான தகவல். ஒரு சில சம்பவங்கள் நடந்திருக்கிறது. குறிப்பாக 4 சம்பவங்களில் அவர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள். இதற்கு யாரும் புகார் கொடுக்கவில்லை. குற்றவாளிகளைப் பிடித்து விசாரிக்கும் போது தெரியவந்துள்ளது. இதில் 5 பேர் மீது வழக்கு போட்டு நீதிமன்றத்தில் ஒப்படைத்திருக்கிறோம். மீண்டும் அந்தக் குற்றவாளிகளை கஸ்டடி எடுத்து தீவிர விசாரணையை மேற்கொள்ள இருக்கிறோம்.
நாங்கள் குற்றச் செயலில் ஈடுபடும் குற்றவாளிகள் மீதும், சமூக விரோத நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறோம். குறிப்பாக ரவுடிஸம், லாட்டரி விற்பனை, பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது பாலியல் சீண்டல்களில் ஈடுபடும் நபர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதைத் தடுப்பதற்காக இரவு நேரங்களில் 15 ரோந்து வாகனங்களில் வெவ்வேறு இடங்களில் வாகன சோதனை செய்யப்படுகிறது. 45 இரு சக்கர வாகனங்களில் பேருந்து நிலையம், ரயில் நிலையம், பூங்கா, விளையாட்டு மைதானம் எனப் பொதுமக்கள் கூடும் இடங்களில் அதிக பாதுகாப்பு கொடுத்திருப்பதோடு பல்வேறு இடங்களில் சி.சி.டி.வி-க்களும் பொருத்தப்பட்டு தீவிரமாக கண்காணித்து வருகிறோம்.
பொதுமக்கள் அச்சமில்லாமலும், பாதுகாப்போடும் இருக்க அனைத்து விதமான நடவடிக்கையும் எடுத்திருக்கிறோம். லாட்டரி விற்பனையாளர்கள் அலுவலகங்கள், சமூக விரோதிகளின் கூடாரங்களை சுற்று வளைத்து சீல் வைக்கப்பட்டு அவர்களிடமிருந்து கணிசமான தொகையைப் பிடித்து வருமானவரித் துறையினரை வரவழைத்து ஒப்படைத்திருக்கிறோம்'' என்று கூறினார்.