Published:Updated:

`10 ஆண்டுகள்; சாந்தகுமார் கொலை; பல்டியடித்த ஜீவஜோதி!' - ஆயுள் சிறைக்குத் தயாராகும் சரவணபவன் அண்ணாச்சி

`10 ஆண்டுகள்; சாந்தகுமார் கொலை; பல்டியடித்த ஜீவஜோதி!' - ஆயுள் சிறைக்குத் தயாராகும் சரவணபவன் அண்ணாச்சி
`10 ஆண்டுகள்; சாந்தகுமார் கொலை; பல்டியடித்த ஜீவஜோதி!' - ஆயுள் சிறைக்குத் தயாராகும் சரவணபவன் அண்ணாச்சி

`10 ஆண்டுகள்; சாந்தகுமார் கொலை; பல்டியடித்த ஜீவஜோதி!' - ஆயுள் சிறைக்குத் தயாராகும் சரவணபவன் அண்ணாச்சி

ரவண பவன் ஓட்டல் உரிமையாளர் ராஜகோபால் மீதான கொலை வழக்கில் ஆயுள் தண்டனையை உறுதி செய்துவிட்டது உச்ச நீதிமன்றம். ` வரும் ஜூலை 7-ம் தேதிக்குள் அவர் சரணடைய வேண்டும்' என உத்தரவிட்டுள்ளனர் நீதியரசர்கள். 

2001 கொடுத்த சறுக்கல்! 

தமிழக மீடியாக்களுக்கு 2001-ம் ஆண்டு பரபரப்புக்குப் பஞ்சமில்லாத ஆண்டாக அமைந்தது. காரணம், சரவணபவன் ராஜகோபால் மீதான கொலை வழக்கும், ஜீவஜோதி என்ற பெண் குறித்து வெளியான தகவல்களும்தான். தொடர்ந்து பல மாதங்கள் மீடியாக்களின் தலைப்புச் செய்தியாகவே மாறிப் போனார் ராஜகோபால். 2004-ம் ஆண்டு பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் ராஜகோபாலுக்கு 10 ஆண்டு தண்டனையோடு சேர்த்து 55 லட்ச ரூபாய் அபராதத்தையும் விதித்தது. இந்தத் தண்டனையால் சில காலம் சிறையில் இருந்தார். உடல்நலக் குறைவு, குடும்ப மோதல்கள், இரண்டாம் மனைவி கிருத்திகா உடனான மோதல் எனக் கடுமையான மனஉளைச்சலுக்கும் ஆளானார் ராஜகோபால். இந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை ராஜகோபால் தரப்பினர் எதிர்பார்க்கவில்லை. 

ஜீவஜோதி மீது விருப்பம் ஏன்? 

சரவண பவன் அண்ணாச்சிக்கு 2 மனைவிகள் இருந்தபோதிலும் மூன்றாவது மனைவியாக ஜீவஜோதியைத் திருமணம் செய்துகொள்ள விரும்பினார். ஜீவஜோதியின் தந்தை சரவணபவனில் உதவி மேலாளராகப் பணிபுரிந்து வந்தார். அப்போது டியூசன் படிக்கச் சென்ற இடத்தில் உறவினர் பிரின்ஸ் சாந்தகுமார் மீது காதல்வயப்பட்டார் ஜீவஜோதி. இந்தக் காதல் திருமணத்தில் சென்று முடிந்தது. இவர்களின் இல்லற வாழ்வுக்கு வில்லனாக வந்து சேர்ந்தார் ராஜகோபால். ஜோதிடத்தில் அதிக நம்பிக்கை உடையவரான ராஜகோபால், ஜீவஜோதியைத் திருமணம் செய்துகொண்டால் இன்னும் அதிக உயரத்துக்குச் செல்லலாம் என அவரது ஆஸ்தான ஜோதிடர்கள் கூறியுள்ளனர். இந்தத் திருமணத்துக்குத் தடையாக சாந்தகுமார் இருந்ததால், அவரைக் கொலை செய்யத் திட்டமிட்டார். 

சாந்தகுமார் படுகொலை! 

26.10.2001 அன்று பிரின்ஸ் சாந்தகுமார் கடத்தப்படுகிறார். இதுதொடர்பாக, வேளச்சேரி காவல்நிலையத்தில் ஜீவஜோதி புகார் அளிக்கிறார். அந்தப் புகாரில் ராஜகோபாலின் ஆட்கள், தன்னுடைய கணவரைக் கடத்திவிட்டதாகக் குறிப்பிடுகிறார். 5 நாள்கள் தேடுதலுக்குப் பிறகு கொடைக்கானல் மலை ரோட்டில் சடலமாக மீட்கப்பட்டார் பிரின்ஸ். இதையடுத்து, ராஜகோபாலுக்கு எதிராக சட்டப்போராட்டத்தை கையில் எடுத்தார் ஜீவஜோதி. ` தொழில் போட்டி காரணமாக யாரோ செய்கின்ற சதி' என்று ராஜகோபால் தரப்பினர் கூறிவந்தனர். இந்த வழக்கு பூந்தமல்லி நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்தவழக்கில் ராஜகோபால், அவரது மேலாளர் டே‌னிய‌ல், கா‌‌ர்மேக‌ம், ஹூசை‌ன், கா‌சி ‌வி‌ஸ்வநாத‌ன், த‌மி‌ழ்செ‌ல்வ‌ன், முருகான‌ந்த‌ம், சேது, ப‌ட்டுர‌ங்க‌ம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 

டேனியல் கொடுத்த வாக்குமூலம்! 

போலீஸாரிடம் டேனியல் கொடுத்த வாக்குமூலமே இந்த வழக்கின் விசாரணையைத் துரிதப்படுத்தியது. சாந்தகுமாரை காரில் கடத்தியது. அவரை வாகனத்தில் வைத்து தாக்கியதாகவும் அதன்பின்னர் வேட்டியால் அவரது கழுத்தை இறுக்கி கொலை செய்ததாகவும் போலீஸாரிடம் வாக்குமூலம் கொடுத்தார். இந்த வாக்குமூலம்தான் வழக்கை அடுத்தகட்டத்துக்கு நகர்த்திச் சென்றது. வழக்கு விசாரணையின் முடிவில், 2004-ம் ஆண்டு ராஜகோபாலுக்கு 10 ஆண்டுகள் தண்டனையும் 55 ல‌ட்ச‌ம் ரூபா‌ய் அபராதமு‌ம் ‌வி‌தி‌த்தது. கொலைக்கு உடந்தையாக இருந்த டே‌னிய‌ல், கா‌‌ர்மேக‌ம், ஹூசை‌ன், கா‌சி ‌வி‌ஸ்வநாத‌ன், த‌மி‌ழ்செ‌ல்வ‌ன், முருகான‌ந்த‌ம், சேது, ப‌ட்டுர‌ங்க‌ம் ஆ‌கியோரு‌க்கு 7 முத‌ல் 9 ஆ‌ண்டுக‌ள் வரை த‌ண்டனை ‌வி‌தி‌க்க‌ப்ப‌ட்டது. 

ஜீவஜோதி கடத்தல்? 

நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு நாகை மாவட்டம், வேதாரண்யம் தேத்தாகுடியில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு ஜீவஜோதி சென்றுவிட்டார். அங்கும் ராஜகோபால் தரப்பினர் ஜீவஜோதியிடம் சமாதானம் பேசியுள்ளனர். ` வழக்கை வாபஸ் பெற வேண்டும்' அல்லது `தங்கள் தரப்புக்கு ஆதரவாக சாட்சி சொல்ல வேண்டும்' என வற்புறுத்தியுள்ளனர். இதற்கு அவர் உடன்பட மறுக்கவே, கடத்தல் முயற்சியை நடத்தியுள்ளனர். கிராம மக்களின் உதவியால் அந்தக் கடத்தல் சம்பவம் தடுக்கப்பட்டது. இதுகுறித்து  வேதாரண்யம் காவல் நிலையத்தில் ஜீவஜோதி புகார் அளித்தார். அவரது புகாரின் அடிப்படையில் கொலைமுயற்சி உட்பட 7 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

` திடீர்' பல்டி! 

அண்ணாச்சியால் ஏற்பட்ட கசப்பான சம்பவங்களை மறந்து புதிய வாழ்க்கையை தொடங்கினார் ஜீவஜோதி. தனது நீண்டநாள் நண்பரான தண்டாயுதபாணி என்பவரை மறுமணம் செய்துகொண்டார். கொலை முயற்சி வழக்கு விசாரணைக்காக 9 மாத கர்ப்பிணியாக இருந்த சமயத்தில் நீதிமன்றத்திலும் ஆஜரானார். அப்போது நடந்த விசாரணையில், ``அண்ணாச்சி என்னைக் கடத்தியதாகவோ மிரட்டியதாகவோ நாகப்பட்டினம் மாவட்டத்தில் எந்த போலீஸ் ஸ்டேஷனிலும் நான் புகார் செய்யவில்லை. அப்படியொரு சம்பவம் நடந்ததாக நினைவும் இல்லை" என திடீரென பல்டி அடித்தார். இதன் தொடர்ச்சியாக, ராஜகோபால் தரப்பினர் ஜீவஜோதியின் இரண்டாவது கணவர் தண்டாயுதபாணியை சமரசம் செய்துவிட்டதாகவும் செய்தி வெளியானது. ஆனால், இதை ஜீவஜோதி மறுத்தார். ` எல்லாம் என் தலைவிதி என எடுத்துக்கொண்டு, எல்லா பிரச்னைகளிலிருந்தும் ஒதுங்கிவிட முடிவெடுத்து விட்டேன்' எனப் பேட்டி கொடுத்தார். 

10 ஆண்டு காத்திருப்பு! 

ஜீவஜோதி கடத்தல் முயற்சி வழக்கில் இருந்து ராஜகோபால் உள்ளிட்ட 6 பேரையும் விடுவிப்பதாக கீழமை நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தீர்ப்பில் நீதிபதி சேதுமாதவன், ``ஜீவஜோதி பிறழ் சாட்சியமளித்ததால் ராஜகோபால் உள்ளிட்ட 6 பேரையும் வழக்கிலிருந்து விடுவிக்கிறேன்' எனக் குறிப்பிட்டார். பின்னர், சாந்தகுமார் கொலை வழக்கில் பூந்தமல்லி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து ராஜகோபால் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. 2009-ம் ஆண்டு இந்த வழக்கை விசாரித்த உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ ‌‌நீ‌திபதிகள் பி.கே.மிஸ்ரா, பானுமதி ஆகியோ‌ர் அடங்கிய அ‌ம‌ர்வு, ‌கீ‌ழ் ‌நீ‌திம‌ன்ற‌ம் அ‌ளி‌த்த 10 ஆ‌ண்டு ‌சிறைத்த‌ண்டனையை ஆ‌யு‌ள் த‌ண்டனையாக அ‌திக‌ரிப்பதாக அறிவித்தது. ஜாமீனில் வெளிவந்த ராஜகோபால், இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். `தனக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல வேண்டும்' என நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தார். அவர் வெளிநாடு செல்லவும் அனுமதி மறுக்கப்பட்டது. 

10 ஆண்டுகளுக்குப் பிறகு ராஜகோபால் மீதான ஆயுள் தண்டனையை உறுதி செய்துள்ளது உச்சநீதிமன்றம். தற்போது பிணையில் இருக்கும் ராஜகோபால், ` ஜூலை 7-ம் தேதிக்குள் சரணடைய வேண்டும்' என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அடுத்த கட்டுரைக்கு