Published:Updated:

`அக்காவை நினைத்து தங்கை விசும்பி விசும்பி அழுகிறாள்!'- துடியலூர் சிறுமி வீட்டில் கண்கலங்கிய ஆசிரியை சபரிமாலா

`அக்காவை நினைத்து தங்கை விசும்பி விசும்பி அழுகிறாள்!'- துடியலூர் சிறுமி வீட்டில் கண்கலங்கிய ஆசிரியை சபரிமாலா
`அக்காவை நினைத்து தங்கை விசும்பி விசும்பி அழுகிறாள்!'- துடியலூர் சிறுமி வீட்டில் கண்கலங்கிய ஆசிரியை சபரிமாலா

துடியலூரில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமியின் வீட்டுக்குச் சென்ற நீட் தேர்வை எதிர்த்த ஆசிரியை சபரிமாலா, வேதனையுடன் தன்னுடைய முகநூலில் ஒரு வீடியோ ஒன்றைப் பதிவு செய்துள்ளார். 

கோவை துடியலூரில் சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தை கேள்விப்பட்டதும் துடியலூருக்குச் சென்று சிறுமியின் குடும்பத்தினரைச் சந்தித்தார் நீட் தேர்வை எதிர்த்து அரசு ஆசிரியைப் பணியை உதறிய ஆசிரியை சபரிமாலா. அவர் தன்னுடைய முகநூலில் ஒரு வீடியோ ஒன்றைப் பதிவு செய்துள்ளார். அதில் வேதனையுடன் பேசியுள்ளார். 

ஆசிரியை சபரிமாலா பதிவு செய்த வீடியோவில், ``மீண்டும் சகிக்க முடியாத ஒரு கொடுமையான சோகம் நடந்துள்ளது. துடியலூரில் நடந்த சம்பவத்தை வார்த்தைகளால் சொல்ல முடியவில்லை. வீட்டின் வெளியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி கடத்தப்பட்டுள்ளார். அவரைத் தேடிய சமயத்தில் சிறுமியின் சடலம் ரத்த வெள்ளத்தில் வீட்டின் அருகில் கிடந்துள்ளது. சிறுமியின் அம்மாவைச் சந்தித்து அவர்களின் கண்ணீரை உள்வாங்கினேன். சர்ட்டை எடுத்துவிட்டு பார்த்தபோது சிறுமியின் சடலம் நாய்கள் குதறிப் போட்டது போல கிடந்துள்ளது. சிறுமியின் சடலத்தைப் பார்த்த அவரின் அம்மாவுக்கும் குடும்பத்தினருக்கும் எப்படி இருந்திருக்கும். சிறுமியின் வீட்டில் எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை. கழிவறை இல்லை. குளியலறை இல்லை. சிறிய அறை. தகரத்தில்தான் சுவர். அரசுப் பள்ளி மாணவி, அரசிடம் சமூக அமைப்புகளிடம் கேட்கிற கேள்வி இதுதான். குழந்தையை இழந்துவிட்டு சிறுமியின் அம்மா இருக்கிறார். யார் இந்தக் கொடுமைக்கு குரல் கொடுப்பது. 

போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டைப் பார்த்துவிட்டுதான் வேதனையுடன் பேசுகிறேன். அரசுப் பள்ளி மாணவியான அந்தச் சிறுமியின் குடும்பம் அடுத்த வேளை சோறுக்காக சிறுமியின் அம்மா போராடிக் கொண்டிருக்கிறார். கஷ்டத்திலும் குழந்தைகளைப் படிக்க வைக்க கஷ்டப்பட்டுக் கொண்டிருந்துள்ளார். சிறுமியின் அம்மாவின் வாழ்க்கையே போராட்டமாக இருந்துள்ளது. அந்தத் தாயை பார்க்கும்போது எப்படி மனம் பதறுகிறது. மிகவும் ஏழ்மையான குடும்பம். போராளியான சிறுமியின் அம்மாவைச் சந்தித்தேன். 

யார் இந்தக் கொடூரத்துக்கு குரல் கொடுப்பது. செய்தி பார்த்துவிட்டுதான் இந்தப் பதிவை போடுகிறேன். நானும் ஒரு பிள்ளையை பெற்றெடுத்து இருக்கிறேன். வயிறு பற்றி எரிகிறது என்று சொல்வார்கள் என்பார்களே அந்த உணர்வு எனக்கு இந்த நொடியில் தெரிகிறது. ஒவ்வொரு பெண் குழந்தைகளை பெற்றெடுத்த தாய், தகப்பனும் பதற வேண்டாமா, என்ன செய்யப்போகிறோம்.  உச்சி கொட்டிவிட்டு கடந்துபோகப் போகிறோமா. தொடர்ந்து சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டுள்ளதாக ரிப்போர்ட்டில் சொல்லப்பட்டுள்ளது. 

காவல்துறை 10 எண்கள் கொடுத்து துப்புக் கொடுங்கள் ரகசியமாக விவரங்கள் பாதுகாக்கப்படும் என்று சொல்கிறார்கள். இன்னமும் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை. குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். எத்தனை வழக்குகள் கண்டுபிடிக்க முடியாமல் கடந்து போகியிருக்கிறோம். எதை இழந்து பெண்களுக்கான நீதியைப் பெற வேண்டியது தெரியவில்லை. நேரில் சந்தித்து சிறுமியின் தாயிடம் என் கையிலிருந்த பணத்தை கொடுத்துவிட்டு வந்துள்ளேன். சிறுமியின் குடும்பத்துக்கு ஏதாவது செய்ய வேண்டும். ஒவ்வொரு பெண் பிள்ளைகளைப் பெற்றவர்கள் சிறுமியின் குடும்பத்துக்கு ஏதாவது ஒரு நிதி உதவியை செய்ய வேண்டும் என்று இந்த வீடியோ மூலம் சொல்லிக் கொள்கிறேன். 

சிறுமியின் தங்கையிடம் பேசினேன். அக்காள் இறந்தது அவருக்குத் தெரியவில்லை. அவருக்கு என்ன நடந்தது என்ற புரிதல் இல்லை. அந்தக் குழந்தைகக்கு இரண்டரை வயதுதான் இருக்கும். சிறுமியின் தங்கை தூங்கும்போது கண்ணீர் வடிக்கிறாள். விசும்பி விசும்பி அழுவதாக சிறுமியின் குடும்பத்தினர் கூறினர். இந்தச் செய்தியைக் கேட்கும்போது நிம்மதியாக இருக்க முடியவில்லை. இந்த நாட்டில் நாமும் வாழ்கிறோம். பதற்றத்துக்கும் வயிற்றெரிச்சலுக்கு என்ன பதில் சொல்லப் போகிறோம். தயவு செய்து பெண் பிள்ளைகளை வெளியில் விளையாட விட்டு உங்கள் வேலையைப் பார்த்துக்கொண்டு இருக்காதீர்கள். புரட்சி ஓங்கட்டும்'' என்பதோடு வீடியோ முடிவடைகிறது.

ஆசிரியை சபரிமாலாவிடம் பேசினோம்.``துடியலூர் சிறுமி சம்பவத்தைக் கேள்விப்பட்டவுடன் மனம் பதறியது. இதனால் அவரின் வீட்டுக்குச் சென்று சிறுமியின் அம்மாவைச் சந்தித்துப் பேசினேன். அப்போது சிறுமியின் வீட்டின் அருகில் உள்ள 4 பேர் மீது சந்தேகம் இருப்பதாக அவர் தெரிவித்தார். அவர்களிடம் போலீஸார் விசாரித்துவருகின்றனர். சிறுமியின் அப்பா குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர். இதனால் இரண்டு பெண் குழந்தைகளையும் வளர்க்க சிறுமியின் அம்மா கடுமையாகப் போராடி வந்துள்ளார். அவர் குடியிருக்கும் வீட்டில் கதவுகூட இல்லாமல் இருந்துள்ளது. சில மாதங்களுக்கு முன்புதான் தகரத்தில் கதவு போடப்பட்டுள்ளது. சிறுமியின் பாடப் புத்தகங்களைப் பார்த்தேன். அவரின் கையெழுத்து அழகாக உள்ளது.

தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்றுள்ளார். சிறுமியின் கொலைக்கு நீதி கிடைக்க வேண்டும். அவரின் குடும்பம் மிகவும் பொருளாதார ரீதியில் பின்தங்கி உள்ளது. இதனால் நிதி வழங்கப்பட வேண்டும். ஏற்கெனவே பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமிகளின் வழக்கில் நீதி கிடைக்காத சூழல் உள்ளது. பெண்கள் பாதுகாப்பு, பாலியல் வன்கொடுமைக்கு எதிராக பிரசாரம் செய்துவருகிறேன். கடந்த மூன்றரை மாதங்களில் ஒன்றரை லட்சத்து 70 ஆயிரம் மாணவர்களைச் சந்தித்துப் பேசியுள்ளேன். மூன்றரை மாதங்களாக வீட்டுக்கே நான் செல்லவில்லை. பெண்களுக்கும் சிறுமிகளுக்கும் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்பதே என்னுடைய நோக்கம் என்றார்.