Published:Updated:

`மற்றவங்கள கடனாளியாக்குவோம்; நாங்க ஹேப்பியா இருப்போம் - ஆன் லைன் மோசடியில் சிக்கிய இன்ஜினீயர்ஸ்

`மற்றவங்கள கடனாளியாக்குவோம்; நாங்க ஹேப்பியா இருப்போம் - ஆன் லைன் மோசடியில் சிக்கிய இன்ஜினீயர்ஸ்
`மற்றவங்கள கடனாளியாக்குவோம்; நாங்க ஹேப்பியா இருப்போம் - ஆன் லைன் மோசடியில் சிக்கிய இன்ஜினீயர்ஸ்

கிரெடிட் கார்டுகளுக்கு ஆன் லைன் மூலம் பணம் தருகிறோம் என்று விளம்பரம் செய்து மற்றவர்களை கடன்காரர்களாக்கிவிட்டு அந்தப்பணத்தில் ஜாலியாக வாழ்ந்துள்ளனர். அவர்களை சி.சி.பி போலீஸார் பிடித்துள்ளனர். 

சென்னையில் சூளைமேடு, நுங்கம்பாக்கம், தேனாம்பேட்டை, ஆவடி, ஆலந்தூர், வடபழனி, வேளச்சேரி என 10 இடங்களில் கால் சென்டர் என்ற பெயரில் மோசடிக் கும்பல் அலுவலகங்களை நடத்தியது. இந்தக் கும்பலைச் சேர்ந்தவர்கள் லோன் வாங்கித் தருவதாகக் கூறி பலரிடம் பல கோடி ரூபாயைச் சுருட்டினர். இதுதொடர்பான புகார்கள் போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தன. அதன்பேரில் விசாரணை நடத்த சி.சி.பி என்றழைக்கப்படும் சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு (வங்கி மோசடி) கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார். இதையடுத்து, இணை கமிஷனர் அன்பு, துணை கமிஷனர் செந்தில்குமார், உதவி கமிஷனர் பாண்டியன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் மீனா பிரியா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் குணசேகரன், அசோக் தாமஸ்துரை, வீராசாமி, ஜான்ரோஸ், வின்சென்ட் மோகன், பாலசுப்பிரமணியன், வனிதா, எஸ்.எஸ்.ஐ மோகன் மற்றும் காவலர் சாந்தி, சரண்மணி ஆகியோர் கொண்ட  டீம் களமிறங்கியது. 

போலி கால் சென்டர்களை நடத்தி லோன் வாங்கித் தருவதாகக் கூறி அப்பாவி பொதுமக்களிடம் பணம் மோசடி செய்த வழக்கில் கால் சென்டர்களை நடத்தியவர் கோபி கிருஷ்ணன், அவரின் அம்மா மீனாட்சி, அப்பா வாசு என்கிற விஜயகிருஷ்ணன் மற்றும் தங்கை நளினி, அலுவலக உதவியாளர் மாதவரம் பால்பண்ணையைச் சேர்ந்த மோகனகிருஷ்ணன், கொண்டிந்தோப்பைச் சேர்ந்த இன்ஜினீயர் வெங்கடேஷ், மனித வள மேம்பாட்டு அதிகாரியாக (ஹெச்.ஆர்) நாமக்கலைச் சேர்ந்த பூபதி, போரூரைச் சேர்ந்த விக்னேஷ், சோளிங்கநல்லூரைச் சேர்ந்த சதீஷ், கோடம்பாக்கத்தைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் மற்றும் சார்லஸ், திராவிட அரசன் உட்பட 17 பேரை போலீஸார் கைது செய்தனர். 

கால் சென்டர்களின் வங்கி அக்கவுண்ட்களுக்கு பண பரிவர்த்தனை செய்யும் ஆப்ஸ்கள் மூலம் பணம் வந்தது விசாரணையில் தெரியவந்தது. இதனால் அந்த ஆப்ஸ்களின் நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் யார் என்று போலீஸார் விசாரித்தனர். விசாரணையில் புதுச்சேரியைச் சேர்ந்த சிவா என்கிற சிவக்குமார், சந்திரன் என்கிற ரவிசந்திரன் மற்றும் கிருஷ்ணராஜு என்பது தெரியவந்தது. அவர்களைப் பிடிக்க போலீஸ் டீம் புதுச்சேரிக்குச் சென்றது. இதில் சிவக்குமாரும் ரவிசந்திரனும் போலீஸாரிடம் சிக்கிக்கொண்டனர். கிருஷ்ணராஜு தப்பி விட்டார். சிவக்குமார், ரவிசந்திரனிடம் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. 

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``சிவக்குமார் எலெக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன் இன்ஜினீயரிங் படித்துள்ளார். ரவிசந்திரன் ப்ளஸ் ஒன் படித்துள்ளார். இவர்களுக்கு மூளையாக இருந்து செயல்பட்டவர் கிருஷ்ணராஜு. பணப் பரிவர்த்தனை செய்யும் ஆப்ஸ்களின் நிறுவனங்களிடம் கமிஷன் அடிப்படையில் இவர்கள் சில ஆப்ஸ்களை வைத்துள்ளனர். இந்த ஆப்ஸ்கள் மூலம்தான் போலி கால்சென்டர்களை நடத்திய கோபிகிருஷ்ணனின் வங்கிக் கணக்குகளுக்கு பணம் வந்துள்ளது. அந்த வழக்கில் இருவரையும் கைது செய்து விசாரித்தபோது சிவக்குமார், ரவிசந்திரனின் செல்போன்களுக்கு தொடர்ச்சியாக அழைப்புகள் வந்தன. அதில் பேசியவர்கள், சார் எப்போது என்னுடைய கிரெடிட் கார்டுக்கு  பணம் வரும் என்ற கேள்வியைக் கேட்டனர். அதுதொடர்பாக இருவரிடமும் விசாரணை நடத்தினோம். அப்போதுதான் கிரெடிட் கார்களுக்கு பணம் கொடுப்பதாக ஆன் லைனில் விளம்பரம் செய்து இவர்கள் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. 

அதாவது, கிரெடிட் கார்டுகளின் லிமிட் அடிப்படையில் பணத்தை தருவதாகக் கூறி ஆன் லைனில் ஆப்ஸ்களை உருவாக்கி மோசடியில்  இந்தக் கும்பல் ஈடுபட்டுள்ளது. அதை நம்பி கிரெடிட் கார்டுகளின் நம்பர்,  சிவிவி நம்பர் உள்ளிட்ட விவரங்களை ரவிசந்திரன், சிவக்குமார், கிருஷ்ணராஜு உருவாக்கிய ஆப்ஸில் பதிவு செய்தால் சம்பந்தப்பட்டவர்களின் செல்போனுக்கு ஓடிபி எண் வரும். அந்த எண்ணையும் ஆன்லைனிலேயே ஆப்ஸில் பதிவு செய்தால் கிரெடிட் கார்டுக்கு பணம் விரைவில் வரும் என்ற மெசேஜ் வரும். அதன்பிறகுதான் இந்தக் கும்பல் தங்களின் கைவரிசையை காட்டத் தொடங்குவார்கள். கிரெடிட் கார்டு மூலம் பணம் வந்தவுடன் அதை சம்பந்தப்பட்டவர்களின் வங்கி கணக்குகளுக்கு அனுப்பபாமல் தங்களின் வங்கி கணக்குகளுக்கு அனுப்பிவிடுவார்கள். 

முகமே தெரியாமல் ஆன் லைனில் பணத்தை இழந்தவர்கள் தேள்கொட்டிய திருடர்கள் போல புகாரும் கொடுக்க முடியாமல் தவித்துவருகின்றனர். வேறுவழியில்லாமல் ரவிசந்திரன் சிவக்குமார், கிருஷ்ணராஜு செல்போன்களைத் தொடர்புகொண்டு பணத்தைக் கேட்டு நச்சரித்து வருகின்றனர். இந்த மோசடி மூலம் பல கோடி ரூபாய் இவர்களின் வங்கிக் கணக்குகளுக்கு வந்துள்ளன. அதுகுறித்து விசாரித்துவருகிறோம் " என்றனர். 

ரவிசந்திரனும் சிவக்குமாரும் போலீஸாரிடம் அளித்த வாக்குமூலத்தில் மற்றவர்களை கடன்காரர்களாக்கிவிட்டு அந்தப்பணத்தில் ஹேப்பியாக இருந்தோம் என்று கூறியுள்ளனர்.  அதோடு பணத்தை ஆன் லைனில் எப்படியெல்லாம் டெக்னிக்காக சுருட்டிய விவரங்களையும் செய்முறை விளக்கமாக போலீஸாரிடம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து சிவக்குமார், ரவிசந்திரன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 

தமிழகம் முழுவதும் இவர்களால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளனர். மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகங்களுக்குப் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தாலும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆனால், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் சிறப்பாக செயல்பட்டு ஆன் லைன் மோசடிக் கும்பலை கைது செய்துள்ளனர். இதனால் சென்னையில் செயல்பட்ட மோசடி கால் சென்டர் வழக்கில் கைதானவர்களின் எண்ணிக்கை 19ஆக உயர்ந்துள்ளது. எனவே, ஆன் லைன் பணப் பரிவர்த்தனை ஆப்ஸ்களைக் கவனமாக பொதுமக்கள் கையாள வேண்டும் என போலீஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

 நடிகர் வடிவேல் சொன்னது போல மோசடி செய்ய இந்தக் கும்பலைச் சேர்ந்தவர்கள் ரூம் போட்டு யோசிப்பார்களோ....