Published:Updated:

பல மாதங்களாக பட்டினி; இறக்கும்போது 20 கிலோ எடை; மாந்திரீக செயல்கள்... - கேரளாவை அதிரவைத்த இளம்பெண் மரணம்!

பல மாதங்களாக பட்டினி; இறக்கும்போது 20 கிலோ எடை; மாந்திரீக செயல்கள்... - கேரளாவை அதிரவைத்த இளம்பெண் மரணம்!
பல மாதங்களாக பட்டினி; இறக்கும்போது 20 கிலோ எடை; மாந்திரீக செயல்கள்... - கேரளாவை அதிரவைத்த இளம்பெண் மரணம்!

கேரள மாநிலத்தில் பல மாதங்களாகப் பட்டினியாக போடப்பட்டதால் 27 வயது இளம் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள ஓயூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் சந்துலால் (30) மற்றும் துஷாரா (27). இந்த தம்பதியினருக்கு கடந்த 2013ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் கடந்த 21ம் தேதி துஷாராவுக்கு உடல்நிலை சரியில்லை எனக் கூறி மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் மருத்துவமனையில் அனுமதிக்கும் முன்பாகவே பரிதாபமாக உயிரிழந்தார் அவர். அவரின் பிரேதே பரிசோதனை அறிக்கையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. துஷாரா பல மாதங்களாகப் பட்டினியாக இருந்ததால் அவரது உடலில் தேவையான ஊட்டச் சத்து இல்லாமல் நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டிருந்ததும், கூடவே அவரது உடலில் ஆங்காங்கே காயங்கள் இருந்ததும், இறக்கும்போது வெறும் 20 கிலோ மட்டுமே அவரது உடல் எடை இருந்ததும் தெரியவந்தது. 

இது சந்தேகத்தை கிளப்ப டாக்டர்கள் இந்த சம்பவம் குறித்து போலீஸாருக்கு புகார் தெரிவித்தனர். அந்தப் புகாரின் பேரில் துஷாராவின் கணவர் சந்துலால் மற்றும் அவரது தாயார் கீதா லால் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் கூறிய விஷயங்கள் போலீஸாரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ``ஆறு ஆண்டுகளுக்கு முன்பு இவர்களுக்குத் திருமணம் நடந்துள்ளது. திருமணத்துக்குப் பிறகு இரண்டு லட்சம் ரூபாய் வேண்டும் என வரதட்சணை கொடுமை செய்துள்ளனர். இது தொடர்பாக இரு குடும்பத்துக்கும் பிரச்னை இருந்து வந்துள்ளது. அதனாலேயே தாயும், மகனும் சேர்ந்து துஷாராவை பட்டினி போட்டுள்ளனர். தனி அறையில் அடைத்து வைத்துப் பல மாதங்களாக அவருக்கு உணவு கொடுக்காமல் வெறும் நனைத்த அரிசி, சர்பத், தண்ணீர் மட்டுமே கொடுத்து கொடுமைப்படுத்தி வந்துள்ளனர். கூடவே அவரை அடித்துத் துன்புறுத்தியுள்ளனர். அவர்கள் மீது வரதட்சணை கேட்டு துன்புறுத்தி கொலை செய்ததாக வழக்குப் பதிவு செய்துள்ளோம்" எனக் கூறியுள்ளனர் போலீஸார். 

போலீஸார் இப்படிக் கூறுகிறார்கள் என்றால், துஷாராவின் குடும்பத்தினர் வேறு மாதிரியாகக் கூறியுள்ளனர். ``துஷாராவை திருமணம் செய்துகொடுத்து ஆறு வருடங்கள் ஆகிறது. இந்த ஆறுவருடத்தில் நான்கு முறை மட்டுமே அவள் எங்களைக் காண வந்துள்ளாள். கடந்த ஒன்றரை வருடமாக அவளை நாங்கள் பார்க்கவிடவில்லை. வரதட்சணையாக இரண்டு லட்சம் கேட்டு தொந்தரவு செய்தனர். இதனால் நாங்கள் அவளைப் பார்க்க சென்றாலும் எங்களைத் திட்டியே அனுப்பினர். அவளைக் காண செல்வதில்லை அவர்கள் விரும்பவில்லை. எங்கள் சொந்தக்காரர்கள் யார் சென்றாலும் திட்டியே அனுப்பினர். அதனால் அங்குச் செல்வதை நாங்கள் தவிர்த்து வந்தோம். இரண்டு மாதத்துக்கு முன்பு போனில் பேசும்போது கூட அவர்கள் கொடுமை செய்கிறார்கள் என ஒரு வார்த்தை கூறவில்லை. துஷாராவின் மாமியாருக்கு மாந்திரீகத்தின் மீது நம்பிக்கை அதிகம். 

அதனால் மந்திரவாத செயல்களில் துஷாராவின் கணவனும், மாமியாரும் ஈடுபட்டு வந்தனர். இதற்கு முன்பு கொல்லம் அருகே பிளாக்குளத்தில் வசித்து வந்தனர். அங்கு மந்திவாத செயல்களில் ஈடுபட்டு வந்ததால் ஊர் மக்கள் அவர்களை வெளியேற்றினர். அதன்பிறகு தான் ஓயூருக்கு வந்தனர். இங்கும் அதேபோல செய்து வந்துள்ளனர்" எனக் கூறியுள்ளார் துஷாராவின் தாய். அவர் கூறியது போலவே அவர்களது பக்கத்து வீட்டினரும் புகார் தெரிவித்துள்ளனர். ``துஷாராவை அவரது கணவர் மற்றும் மாமியார் தாக்குவதை நாங்கள் பலமுறை கண்டுள்ளோம். இதுதொடர்பாக 27 முறை போலீஸில் புகார் அளித்துள்ளோம். ஆனால் உள்ளூர் அரசியல்வாதிகள் சப்போர்ட்டில் அவர்கள் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை. 

அவர்கள் வீட்டைப் பார்ப்பதற்கே பயமாக இருக்கும். தகரத்தால் ஆன வீடு அது. ஏற்கனவே இருந்து வீட்டை இடித்து இப்படி வைத்துள்ளார்கள். அதுபோக கேட்டின் அருகே ஒரே ஒரு ரூம் இருக்கும். அதில் தான் துஷாராவை அடைத்து வைத்திருப்பார்கள். அதையும், வெளியில் இருந்து யாரும் பார்க்கக்கூடாது என்பதற்காக அதனைச் சுற்றி வேலிகளும் அமைத்துள்ளனர். சொந்தக்கார்கள், அக்கம்பக்கத்தினர் யாரையும் வீட்டுக்குள் அனுமதிக்க மாட்டார்கள். அதேநேரம் மாந்திரீகவாதிகள் நிறையபேர் வருவார்கள். அவர்கள் வந்து செல்லும்போதெல்லாம் அந்த வீட்டின் வெளியே மாந்திரிகம் செய்யப்பட்ட பூனை மற்றும் கோழிகள் இறந்து கிடக்கும்" எனக் கூறியுள்ளனர். ஆனால் ``மாந்திரிக செயல்களில் அவர்கள் ஈடுபட்டதாக எந்த புகாரும் வரவில்லை. வரதட்சணை கொடுமை என்றே புகார் அளித்துள்ளனர். இருப்பினும் அனைத்து கோணங்களிலும் விசாரித்து வருகிறோம்" எனப் போலீஸார் கூறியுள்ளனர். இந்த சம்பவம் தற்போது கொல்லம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.