Election bannerElection banner
Published:Updated:

'அது வெறும் பில்லுதான சாமி!' கூகுள், ஃபேஸ்புக்கிடம் ₹ 800 கோடி சுருட்டிய நபர்

'அது வெறும் பில்லுதான சாமி!' கூகுள், ஃபேஸ்புக்கிடம் ₹ 800 கோடி சுருட்டிய நபர்
'அது வெறும் பில்லுதான சாமி!' கூகுள், ஃபேஸ்புக்கிடம் ₹ 800 கோடி சுருட்டிய நபர்

'எதுக்கு பாஸ் ஹேக்கிங் எல்லாம். அட, மிரட்டக்கூட வேண்டாம். பில் அனுப்பி நேரடியாவே கேட்போம்' என்று இவர் சுருட்டிய தொகையின் மதிப்பைக் கேட்டால் பலருக்குத் தலையே சுற்றிவிடும்.

தொழில்நுட்ப உலகில் டிஜிட்டல் முறை திருட்டு என்பது மிகவும் சாதாரணமான ஒரு விஷயம். ஹேக்கிங் போன்ற சில செயல்கள் மூலமாகத் தொழில்நுட்ப நிறுவனங்களிடமிருந்து பணம், டேட்டா எனப் பல விஷயங்கள் திருடப்பட்டிருக்கின்றன. சில சமயங்களில் மிரட்டியும்கூட சிலர் பணம் பறிப்பதுண்டு. ஆனால், இவை எதுவுமே இல்லாமல், பெரிதாக மெனக்கெடாமல் பல கோடி ரூபாயைச் சுருட்டியிருக்கிறார் ஒரு நபர். அவர் கை வைத்தது தொழில்நுட்ப உலகில் ஜாம்பவான்களாக இருக்கும்  கூகுள், ஃபேஸ்புக் என்ற இரண்டு நிறுவனங்களிடம் என்பதுதான் இங்கே ஆச்சர்யப்பட வைக்கும் விஷயம்.  

நோ ஹேக்கிங்...ஒன்லி பில்லிங்

லித்துவேனியா நாட்டைச் சேர்ந்த எவால்டாஸ் ரிமாசாஸ்கஸ் (Evaldas Rimasauskas) என்ற நபரின் பண மோசடிக்கதை பலருக்கு ஆச்சர்யத்தை அளிக்கக்கூடும். அதற்குக் காரணம் இவ்வளவு கோடி ரூபாயை அவர் சுருட்டப் பயன்படுத்தியது வெறும் பில்லைத்தான் என்றால் யாருமே அதை நம்ப மாட்டார்கள். இதை அவர் எப்படிச் செய்தார் என்று திகைத்துப் போயிருக்கிறார்கள் காவல்துறையினர். இவரது திட்டம் மிகவும் எளிமையானதாக இருந்திருக்கிறது. கூகுள், ஃபேஸ்புக் நிறுவனங்களிடமிருந்து அவர்கள் வாங்காத பொருளுக்கான பில்லை தயார்செய்து அனுப்பிவிடுவார். அவர்களும் பில்லில் குறிப்பிடப்பட்டிருக்கும் பொருளுக்கான பணத்தை இவருக்கு அனுப்பி வைத்துவிடுவார்கள்.  

அவ்வளவு பெரிய நிறுவனங்கள் எப்படி இந்த சிறிய பில் விஷயத்தில் கோட்டைவிட்டன என்பதற்குப் பின்னால் ஒரு விஷயம் மறைந்திருக்கிறது. தைவானைச் சேர்ந்த குவான்டா கம்ப்யூட்டர் (Quanta Computer Inc) என்ற நிறுவனம் கூகுள், ஃபேஸ்புக்குக்குத் தேவைப்படும் ஹார்டுவேர்களை அனுப்பி வந்தது. கொடுக்கும் பொருளுக்கான பில்லை தைவானிலிருந்து அவர்கள் அனுப்பி வைப்பார்கள். அதை எப்படியோ தெரிந்துகொண்ட எவால்டாஸ் அதன் மூலமாக மோசடி செய்யத் திட்டமிட்டிருக்கிறார். குவான்டா கம்ப்யூட்டர் நிறுவனத்தினர் அனுப்பும் பில்லைப் போன்றே உருவாக்கப்பட்ட போலியான பில் ஒன்றை இவரும் தயார் செய்திருக்கிறார். இந்த மோசடிக்குப் பின்னால் இவர் மட்டுமல்ல; மிகப் பெரிய ஒரு குழுவே இருந்திருக்கிறது. ஒவ்வொரு பில்லும் ஒரிஜினலைப் போலவே இருக்க வேண்டும் என்பதற்காகப் பார்த்துப் பார்த்து வேலை செய்திருக்கிறார்கள். பின்னர், அந்தப் போலியான பில்லை இமெயில் மூலமாக இரண்டு நிறுவனங்களுக்கும் அனுப்பி வைத்துவிடுவார்கள். அனைத்துமே ஒரிஜினல் பில்லைப் போன்றே இருந்ததால் யாருக்குமே சந்தேகம் வரவில்லை. மேலும், கூடுதலாகக் குவான்டா கம்ப்யூட்டர்  என்ற பெயரில் லாட்வியா நாட்டில் போலியான நிறுவனம் ஒன்றையும் பதிவு செய்திருக்கிறார் எவால்டாஸ். அவருடைய கூட்டாளிகளும் உண்மையான நிறுவனத்தின் பிரதிநிதிகள் போன்றே நடித்திருக்கிறார்கள்.

இவர்கள் அனுப்பி வைத்த பில்லை இரண்டு நிறுவனங்களும் பெரிதாகச் சோதிக்கவே இல்லை என்பதுதான் இங்கே முக்கியமான விஷயம். அது இவர்களுக்குச் சாதகமாக அமைந்துவிட்டது. பில் உண்மையானதுதான் என்று நினைத்து அவரது வங்கிக் கணக்குக்குப் பணத்தை அனுப்பிவைத்திருக்கிறார்கள். இப்படி பில்களை அனுப்பிக்கொண்டே இருக்க இருக்க பணமும் வந்துகொண்டே இருந்திருக்கிறது. அதை உடனடியாக சைப்ரஸ், லித்துவேனியா, ஹங்கேரி, ஸ்லோவாகியா மற்றும் லாட்வியா எனப் பல்வேறு நாடுகளிலிருந்த வங்கிக் கணக்குகளுக்கு மாற்றி அனுப்பி வைத்திருக்கிறார். 2013 - 2015-ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் இரண்டு நிறுவனங்களிடமிருந்து அவர் பெற்ற மொத்த தொகை மட்டும் சுமார்  $121 மில்லியன் அமெரிக்க டாலர்கள். இது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 800 கோடிக்குச் சமம். 

இறுதியாகக் கண்டறிந்த கூகுள்

கோப்புப் படம்

எவால்டாஸ் அனுப்பும் பில்லில் ஏதோ ஒரு சிக்கல் இருக்கிறது என்பதை எப்படியோ மோப்பம் பிடித்துவிட்டது கூகுள். பணமோசடி உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து 2016-ம் ஆண்டில் அமெரிக்காவில் எவால்டாஸ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதன் பின்னர் 2017-ம் ஆண்டில் அவர் அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்பட்டார். அடையாளத் திருட்டு, பண மோசடி உட்பட ஐந்து குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டன. தனது நடவடிக்கைகள் அனைத்தும் மோசடியானவை என்பதைக் கடந்த வாரம் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டிருக்கிறார் எவால்டாஸ். இவர் சுருட்டிய பணத்தில் அதிகம் இழந்தது ஃபேஸ்புக் நிறுவனம்தான். ஒட்டு மொத்தப் பணத்தில் 2013-ம் ஆண்டில் கூகுள் நிறுவனத்திடமிருந்து $23 மில்லியன் அமெரிக்க டாலர்களும், 2015-ல் ஃபேஸ்புக்கிடமிருந்து $98 மில்லியன் அமெரிக்க டாலர்களும் இவரால் பெறப்பட்டுள்ளன. மோசடி நடவடிக்கைகள் தெரியவந்த சில நாள்களில் பணத்தை மீட்க முடிந்ததாக ஃபேஸ்புக், நாளிதழ் ஒன்றுக்கு அளித்த செய்தியில் தெரிவித்துள்ளது. அதே நேரம் கூகுள் இதைப் பற்றி முதலில் அறிந்திருந்தாலும் பணத்தை மீட்டதா என்ற விவரங்கள் தெரியவில்லை. இந்தக் குற்றங்களுக்காக வரும் ஜூலை 24-ம் தேதியன்று இறுதித்தீர்ப்பு வழங்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அன்றைக்கு அவருக்கான தண்டனை விவரங்களும் தெரிவிக்கப்படும், இந்த குற்றங்களுக்காக அவருக்கு அதிகபட்சம் 30 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. இப்படி வெறும் பில்லை மட்டும் வைத்துக்கொண்டே இரண்டு டெக் ஜாம்பவான்களை தெறிக்கவிட்டிருக்கிறார் மனுஷன்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு