Published:Updated:

10 வயதுச் சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு - தூக்குத்தண்டனை கைதிகள் மூவரை விடுவித்த நீதிமன்றம்!

10 வயதுச் சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு - தூக்குத்தண்டனை கைதிகள் மூவரை விடுவித்த நீதிமன்றம்!
10 வயதுச் சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு - தூக்குத்தண்டனை கைதிகள் மூவரை விடுவித்த நீதிமன்றம்!

தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பத்து வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட தூக்குத் தண்டனையை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ரத்து செய்து, குற்றவாளிகளை விடுதலை செய்தது.

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ளது காமாட்சிபுரம் என்ற கிராமம். கடந்த 2014 டிசம்பர் 1-ம் தேதி காமாட்சிபுரம் கிராமத்தைச் சேர்ந்த பத்துவயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டார். இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய சுந்தரராஜ், ரோபின் என்ற ரவி மற்றும் குமரேசன் ஆகிய மூவரை ஓடைப்பட்டி காவல்துறையினர் கைது செய்தனர். அதைத்தொடர்ந்து மூவரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேற்கண்ட மூவர் மீதான வழக்கு, தேனி மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்துவந்தது. கடந்த 2018 அக்டோபர் 4-ம் தேதி மூவருக்கும் தூக்குத் தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கியது. இந்தத் தீர்ப்பை அடுத்து, மூவரும், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீடு செய்தனர்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும் புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, ``வழக்கில் அரசுத் தரப்பு விசாரணையில் பல்வேறு குளறுபடிகள் உள்ளன. முக்கிய சாட்சிகளின் வாக்குமூலங்கள் தாமதமாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. முக்கிய சாட்சிகள் பலர் குறுக்கு விசாரணை செய்யப்படவில்லை. இதனால், தேனி மகளிர் நீதிமன்றம் வழங்கிய தூக்குத் தண்டனையை ரத்து செய்கிறோம். மூவரையும் உடனடியாக விடுதலை செய்கிறோம்” எனத் தீர்ப்பளித்தனர்.

மேலும், ``ஒரு வழக்கில், அரசு தரப்பின் விசாரணை குறைபாடு காரணமாகக் குற்றவாளிகள் விடுதலையானால், அதற்கு விசாரணை அதிகாரிதான் பொறுப்பேற்க வேண்டும். இந்த வழக்கின் விசாரணை அதிகாரியான காவல் ஆய்வாளர் ராஜாராமன் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இறந்த அச்சிறுமியின் குடும்பத்துக்கு 3 மாதத்தில் 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கத் தமிழக அரசுக்கு உத்தரவிடப்படுகிறது” எனத் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.