Published:Updated:

`கல்யாண கோலத்தில் பார்க்க வேண்டிய பிள்ளையை இப்படி கொன்னுட்டான்களே!' - பொள்ளாச்சியில் மீண்டும் ஒரு கொடூரம்

`கல்யாண கோலத்தில் பார்க்க வேண்டிய பிள்ளையை இப்படி கொன்னுட்டான்களே!' - பொள்ளாச்சியில் மீண்டும் ஒரு கொடூரம்
`கல்யாண கோலத்தில் பார்க்க வேண்டிய பிள்ளையை இப்படி கொன்னுட்டான்களே!' - பொள்ளாச்சியில் மீண்டும் ஒரு கொடூரம்

பொள்ளாச்சி அருகே கல்லூரி மாணவி ஒருவர் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு  சாலையோரம் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண்  கோவை தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பட்டப்படிப்பை ஹாஸ்டலில் தங்கிப் படித்து வந்தார்.  இந்தப் பெண்ணும் அவரது உறவினர் ஒருவரும் கடந்த  4 ஆண்டுகளாகக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இவர்களின் காதலுக்கு இருவரின் பெற்றோர்களும் சம்மதம் தெரிவித்து இரண்டு மாதங்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.

வைகாசி மாதம் திருமண தேதி குறிக்கப்பட்டு திருமண அழைப்பிதழ்களும் அச்சடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. காதலித்தவரையே திருமணம் செய்துகொள்ளப் போகிற சந்தோஷத்தில் திருமணத்தை எதிர்நோக்கி இருந்துள்ளார். திருமணத்திற்கான ஆடைகள் வாங்குவதற்கான பேச்சுவார்த்தை மும்முரமாக இருந்திருக்கிறது. மணப்பெண்ணும் ஆடைகள் வாங்குவது தொடர்பான தன்னுடைய ஆசைகளையும் ஆலோசனைகளையும் சென்னையில் ஃபைனான்சியராக உள்ள காதலனிடம் ஃபோன் மூலம்  பகிர்ந்துகொண்டிருந்திருக்கிறார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் கல்லூரி விடுதியிலிருந்து வீட்டுக்குப் புறப்பட்ட அவர், நீண்ட நேரமாகியும் வீட்டிற்குச் செல்லவில்லை. அவரது செல்போனும் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. பதறிப்போன அவரின் பெற்றோர்கள் கோவை, காட்டூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து, காணாமல் போனதாக மாணவியை போலீஸார் தேடி வந்தனர்., நேற்று மாலை பொள்ளாச்சியை அடுத்த பூசாரிபட்டி அருகே சாலையோரம் உள்ள முட்புதரில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இளம்பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு சாலையோரம் வீசப்பட்டுள்ளார் என்று  அந்த சாலை வழியாகச் சென்ற பொதுமக்கள் சிலர்  போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். 

சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்த கோமங்கலம் போலீஸார், அதுகுறித்து விசாரணை நடத்திக்கொண்டிருக்கும்போது, ஒட்டன்சத்திரத்தில் மாணவி வீட்டுக்குப் பக்கத்து வீட்டில் வசிக்கும் ஒரு பெண் அந்த வழியாக கேரளாவிற்கு சென்றுள்ளார். கூட்டத்தைப் பார்த்ததும் எதேச்சையாகக் காரை நிறுத்தி என்னவென்று பார்த்த அந்த பெண், சடலமாகக் கிடந்த கல்லூரி மாணவின் உடலைப் பார்த்ததும் அதிர்ந்துபோனார். இது என் பக்கத்து வீட்டுப் பெண் என்று போலீஸாரிடம் கூறிய அந்தப் பெண் மாணவியின் பெற்றோருக்கும் தகவல் தெரிவித்தார். இதை அறிந்த அவரது பெற்றோர் அலறியபடி சம்பவ இடத்திற்கு வந்தனர். இதற்கிடையில் பெண்ணின் உடலைக் கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்குப் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் போலீஸார். 

பொள்ளாச்சி பாலியல் வழக்கு சர்ச்சை அடங்குவதற்குள்ளாகப் பொள்ளாச்சிக்கு அருகில் ஒரு கல்லூரி மாணவி கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு  சாலையோரம் வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான விசாரணைக்குத் 5 தனிப்படைகள் அமைத்து விசாரணையை முடுக்கிவிட்டுள்ளது போலீஸ்.

இதுகுறித்து மாணவியின் உறவினர் ஒருவரிடம் பேசினோம், "கடந்த வெள்ளிக்கிழமை மதியம் 1.55 மணிக்கு பஸ் ஏறிட்டேன்னு அவங்க அம்மாவிக்கு போன் செஞ்சிருக்கு. பஸ் ஏறின பொண்ணு நீண்ட நேரமாகியும் வீட்டுக்கு வரலை போனும் ஸ்விட்ச் ஆஃப் ஆகிருச்சு. எங்களுக்கு பயமாகிருச்சு! உடனே கோவை காட்டூர் போலீஸில் புகார் கொடுத்தோம். போலீஸார்  காலேஜுக்குப் பக்கத்தில் உள்ள பெட்ரோல் பங்க் சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்தார்கள். அதில் மாணவியிடம் ஒருவர் ஆவேசமாகப் பேசிக்கொண்டே செல்வது போல் காட்சிகள் பதிவாகியுள்ளது. அது யாரு என்ன நடந்துச்சுன்னு தெரியலை. கல்யாண கோலத்தில் பாக்க வேண்டிய எங்க பிள்ளையை இப்படி கழுத்தறுத்து கொன்னுட்டான்களே" என்று கதறியவர்.  ``இதைச் சும்மா விடக்கூடாது யார் இப்படி செஞ்சதுன்னு கண்டுபிடிச்சு தக்க தண்டனை வாங்கித் தரணும். என்ன இருந்தாலும் எங்க புள்ள போச்சே" என்று அலறுகிறார்.

இதுதொடர்பாக போலீஸாரிடம் பேசினோம், "தீவிரமாக விசாரித்து வருகிறோம் விரைவில் குற்றவாளியைப் பிடித்துவிடுவோம். அந்த பெண்ணின் ஆடைகளெல்லாம் கிழித்து, கொலை செய்திருக்கிறார்கள். அந்த பெண்ணை யாரேனும் ஒரு தலையாகக் காதலித்து திருமணத் தகவல் தெரிந்து இப்படிச் செய்திருக்கிறானா? என்ற கோணத்தில் விசாரணை நடத்திவருகிறோம். பிரேத பரிசோதனை முடிவு வந்தால்தான் பாலியல் ரீதியான துன்புறுத்தல் நடந்துள்ளதா என்பதைச் சொல்ல முடியும் என்றனர்.

பொள்ளாச்சி மீண்டும் துயரத்தில் ஆழ்ந்திருக்கிறது.