Published:Updated:

தனியாக இருந்த தாய், மகனுக்கு நேர்ந்த கொடூரம் - வீட்டுக்குள் நுழைந்தது யார்?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
தனியாக இருந்த தாய், மகனுக்கு நேர்ந்த கொடூரம் - வீட்டுக்குள் நுழைந்தது யார்?
தனியாக இருந்த தாய், மகனுக்கு நேர்ந்த கொடூரம் - வீட்டுக்குள் நுழைந்தது யார்?

தனியாக இருந்த தாய், மகனுக்கு நேர்ந்த கொடூரம் - வீட்டுக்குள் நுழைந்தது யார்?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

திருத்தணி அருகே, வீட்டில் தனியாக இருந்த தாய் மற்றும் மகனை கொடூரமாகக் கொலைசெய்த கும்பல், பீரோவிலிருந்த நகைகளையும் அள்ளிச்சென்றது. இந்தச் சம்பவம், அங்கு பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

திருத்தணியை அடுத்த பெருமாள்தாங்கல் புதூர், பாலாஜி நகர் பகுதியைச் சேர்ந்தவர் வனபெருமாள். இவர், அந்தப் பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் காவலாளியாகப் பணியாற்றுகிறார். இவரின் மனைவி விஜி (40) இவர்களுக்கு ஒரு மகளும் மகனும் உள்ளனர். மகளுக்குத் திருமணமாகிவிட்டது. மகனின் பெயர் போத்திராஜ் (10). அந்தப் பகுதியில் உள்ள பள்ளியில் படித்துவந்தார். இந்த நிலையில், வனபெருமாள் நேற்றிரவு பணிக்குச் சென்றுவிட்டார். பணி முடிந்து இன்று காலை வீட்டுக்கு வந்தார். அப்போது, வீட்டின் கதவு திறந்துகிடந்தது. வீட்டின் ஹாலில் போத்திராஜ் ரத்த வெள்ளத்தில் இறந்துகிடந்தார். அதைப் பார்த்து வனபெருமாள் அதிர்ச்சியடைந்தார். கதறியபடி மனைவி விஜியைத் தேடினார். அவர், வீட்டின் பின்புறத்தில் கொடூரமாகக் கொலைசெய்யப்பட்டுக் கிடந்தார். 

இதையடுத்து வனபெருமாள், திருத்தணி காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தார். போலீஸார், சம்பவ இடத்துக்கு வந்து விஜி, போத்திராஜ் ஆகியோரின் சடலங்களைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். சம்பவ இடத்துக்கு மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. வீட்டிலிருந்து வெளியில் ஓடிவந்த மோப்பநாய், டயர் கம்பெனியை நோக்கி ஓடியது. அதன்பிறகு, அந்தப்பகுதியில் உள்ள திருமண மண்டபத்தின் அருகே நாய் நின்றது. இதனால், திருமண மண்டபத்திலிருந்து கொள்ளையர்கள் வாகனத்தில் தப்பிச் சென்றிருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர். எதற்காக இந்தக் கொலை நடந்தது என்று விசாரித்தபோது, திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. 

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``வீட்டில் விஜியும் போத்திராஜிம் இருந்துள்ளனர். அப்போதுதான் இருவரும் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளனர். வீட்டில் உள்ள பீரோவும் உடைக்கப்பட்டுள்ளது. அதிலிருந்த நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. நள்ளிரவில் வீட்டுக்குள் நுழைந்த கொள்ளையர்களை விஜியும் அவரின் மகன் போத்திராஜும் தடுத்தபோது, அவர்கள் இருவரையும் கொள்ளைக் கும்பல் கொலைசெய்திருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இவர்கள் குடியிருக்கும் வீட்டிலிருந்து சுமார் 3 கி.மீட்டர் தூரத்தில் தனியார் டயர் கம்பெனி உள்ளது. அங்கு, வடமாநிலங்களிலிருந்து லாரிகள் வருவதுண்டு. அந்தக் கம்பெனியில்தான் வனபெருமாள் காவலாளியாகப் பணியாற்றுகிறார். இதனால், வடமாநிலங்களிலிருந்து வந்தவர்கள் இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கிறோம். தரையில் பாய் விரித்து படுத்த நிலையில் விஜி கொலை செய்யப்பட்டுள்ளார். அவரின் சடலம் தலைகுப்புறக் கிடந்தது. இருவரின் கழுத்திலும் கத்தியால் அறுத்த காயங்கள் உள்ளன. இதனால், ரத்தம் வீடு முழுவதும் சிதறியுள்ளது. போத்திராஜின் சடலமும் விஜியின் சடலமும் தனித்தனியாகக் கிடந்தன " என்றனர்.  

போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ``சென்னை சுற்றுவட்டாரப் பகுதிகளில், சில ஆண்டுகளுக்கு முன் நடந்த கொள்ளைச் சம்பவங்களோடு கொலையும் நடந்தன. இந்த கொடூரச் செயலில் ஈடுபட்டது, வடமாநிலத்தைச் சேர்ந்த பாவரியா கொள்ளையர்கள் என்று தெரியவந்தது. லாரிகளில் வரும் இந்த கொள்ளைக் கும்பல், சாலையோரங்களில் தங்குவார்கள். ஊருக்குள் சென்று நோட்டமிடுவார்கள். பிறகு கைவரிசை காட்டுவார்கள். அதன்பிறகு, அந்த இடத்திலிருந்து அவர்கள் வேறு இடங்களுக்குத் தப்பிவிடுவார்கள். இவர்களை போலீஸ் உயரதிகாரி ஜாங்கிட் தலைமையிலான போலீஸ் டீம் வடமாநிலத்துக்குச் சென்று என்கவுன்டர் செய்தது. அதன்பிறகு, வடமாநில பாவரியா கொள்ளையர்கள், சென்னை வருவது குறைந்தது.

 அதே ஸ்டைலில், திருத்தணியில் தாயும் மகனும் கொடூரமாகக் கொலைசெய்யப்பட்டுள்ளனர். இதனால், மீண்டும் பாவரியா கொள்ளையர்கள் கைவரிசை காட்டத் தொடங்கிவிட்டார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதுதொடர்பாக விசாரணை நடந்துவருகிறது. பாவரியா கொள்ளையர்களை மையப்படுத்திய கதைதான், 'தீரன்' படம். இந்தக் கொள்ளை, கொலை சம்பவத்தில் பாவரியா கொள்ளையர்கள் என்பது  விசாரணையில் தெரியவந்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கொலை, கொள்ளை சம்பவத்தைக் கண்டறிய அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வுசெய்துவருகிறோம். குறிப்பாக, தனியார் டயர் கம்பெனிக்கு வந்த லாரிகள் குறித்தும் விசாரித்துவருகிறோம்" என்றார்.  

வனபெருமாளின் சொந்த ஊர் தேனிமாவட்டம். வேலைதேடி திருத்தணிக்கு வந்துள்ளார். இங்கேயே அவர் செட்டிலாகிவிட்டார். சொந்தமாகவும் வீடு வாங்கி அங்கு குடியிருந்துவந்தார். வனபெருமாளுக்கும் விஜிக்கும் முதலில் பெண் குழந்தை பிறந்துள்ளது. அதன்பிறகுதான் தவமிருந்து போத்திராஜ் பிறந்துள்ளார். இதனால் போத்திராஜிக்கும் அவரின் சகோதரிக்கும் வயது வித்தியாசம் அதிகம். மூத்த மகளுக்கு திருமணம் செய்துகொடுத்த இந்தத் தம்பதி, போத்திராஜை செல்லமாக வளர்த்தனர். ஆனால், ஈவு இரக்கமின்றி கொள்ளையடிக்க வந்த கும்பல் இருவரையும் கொலை செய்துள்ளது. ஒரே நேரத்தில் மனைவியையும் மகனையும் இழந்த வனபெருமாள் கதறி அழுத காட்சி அனைவரையும் கண்கலங்கவைத்தது. திருமணமான மகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, அவரும் திருத்தணி அரசு மருத்துவமனை பிரேதப் பரிசோதனை அறைக்கு வந்தார். அம்மா, தம்பியின் சடலத்தைப் பார்த்து அவரும் கதறி அழுதார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு