Published:Updated:

கோவை கல்லூரி மாணவியைக் கொன்றது ஏன்? - கைதான உறவினர் அதிர்ச்சி வாக்குமூலம்

கோவை கல்லூரி மாணவியைக் கொன்றது ஏன்? - கைதான உறவினர் அதிர்ச்சி வாக்குமூலம்
கோவை கல்லூரி மாணவியைக் கொன்றது ஏன்? - கைதான உறவினர் அதிர்ச்சி வாக்குமூலம்

பொள்ளாச்சி அருகே,  கல்லூரி மாணவி கழுத்தறுத்து  கொலை செய்யப்பட்ட  வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மாணவியின் உறவினரான சதீஷ்குமார் கொடுத்துள்ள வாக்குமூலம், போலீஸாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர், மஹதி (பெயர் மாற்றம்). இவர், கோவையில் உள்ள தனியார் கல்லூரியில்  ஹாஸ்டலில் தங்கி இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.  கடந்த 5-ம் தேதி, ஊருக்குச் செல்வதாகச் சொல்லிவிட்டு, ஹாஸ்டலிலிருந்து ஒட்டன் சத்திரத்திற்குப் புறப்பட்டுள்ளார். பஸ் ஏறிவிட்டேன் என்று தனது அம்மாவிடம் போன் செய்து சொன்ன மஹதி, நீண்ட நேரமாகியும் வீட்டுக்குச் செல்லவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர், கோவை காட்டூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். போலீஸார்  வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில்,  6-ம் தேதி மாலை
பொள்ளாச்சியை அடுத்த பூசாரிப்பட்டி அருகே, சாலையோரம் உள்ள முட்புதரில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் மஹதி சடலமாக மீட்கப்பட்டார்.

மஹதியும் அவரது உறவினர் ஒருவரும் கடந்த  4 ஆண்டுகளாகக் காதலித்துவந்தார்கள். இருவரின்  பெற்றோர்களும் அதற்கு சம்மதம் தெரிவித்து, இரண்டு மாதங்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம்கூட முடிந்துவிட்டது. வைகாசி மாதம் திருமணம் நடக்க இருந்த சூழலில், மஹதியை யாரோ இப்படி செய்துவிட்டார்கள். ``கல்யாணக் கோலத்தில் பார்க்கவேண்டிய பெண்ணை கடத்திக்கொண்டுபோய் இப்படிச் செய்துவிட்டார்கள். அவர்களை சும்மா விடக் கூடாது'' என்று கலங்கினார்கள் மஹதியின் உறவினர்கள். இதுதொடர்பாக  நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணையை முடிக்கிவிட்டது போலீஸ்.

மஹதி, கல்லூரியிலிருந்து வெளியேறியதும் பஸ் ஏறிவிட்டாரா என்பதை உறுதிப்படுத்த, கல்லூரிக்கு அருகில்  உள்ள பெட்ரோல் பங்க் சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வுசெய்தது போலீஸ். அதில், மஹதியிடம் ஒருவர் ஆவேசமாகப் பேசிக்கொண்டே செல்வதுபோல காட்சிகள் பதிவாகியிருந்தன. தொடர்ந்து, மஹதியின் செல்போன் அழைப்புகளை ஆய்வுசெய்து,  ஒட்டன்சத்திரம் பகுதியைச் சேர்ந்த தங்கராஜ் என்பவரது மகன் சதீஷ்குமாரிடம் போய் நின்றது.  நடந்த விசாரணையில், சதீஷ்குமார் குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து, அவரை உடனடியாகக் கைதுசெய்தது போலீஸ்.

இது தொடர்பாக போலீஸ் வட்டாரத்தில் பேசினோம், "சதீஷ்குமார் , அந்தப் பகுதியில் வட்டித் தொழில் செய்துவருகிறார். மஹதியும் சதீஷ்குமாரும் உறவினர்கள்தான். சிறு வயதிலிருந்தே இருவரும் காதலித்துவந்ததாகக் கூறப்படுகிறது. அவ்வப்போது செலவுக்கு மஹதிக்கு பணம் கொடுப்பது, நகை எடுத்துக்கொடுப்பது என்று சதீஷ்குமார் காதல் வளர்த்துள்ளார். இந்தச்சூழலில்,  சில வருடங்களுக்கு முன்பு சதீஷ்குமாரின் அப்பா கடன் தொல்லையால் தற்கொலை செய்துகொள்ள, நிலைகுலைந்துபோனார் சதீஷ்குமார். மஹதியைத் திருமணம் செய்துவைக்கும்படி அவரது பெற்றோரிடம் கேட்டதாகவும், அதற்கு அவரது பெற்றோர்கள் மறுத்துவிட்டதாகவும் சொல்கிறார்கள். எனவே, வேறொரு பெண்ணை சதீஷ்குமார் திருமணம் செய்துகொண்டிருக்கிறார்.  தற்போது, அவருக்கு இரண்டு வயதில் பெண் குழந்தை இருக்கிறது. இந்தச் சூழலிலும் மஹதியுடனான காதலைத் தொடர்ந்ததாக அதிர்ச்சித் தகவல் சொன்னார் சதீஷ்குமார்.

சில மாதங்களுக்கு முன், மஹதிக்கு வேறொருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. மஹதி, தனக்கு நிச்சயிக்கப்பட்ட  இளைஞரோடு சந்தோஷமாக பேசிக்கொண்டிருந்தது, சதீஷ்குமாருக்குக் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சூழலில், மஹதிக்கும் சதீஷ்குமாருக்கும் மோதல் வெடித்துள்ளது.  வெள்ளிக்கிழமை, மஹதிக்கு போன்செய்த சதீஷ்குமார், கோவைக்குச் சென்று  மஹதியைத் தனது காரில் அழைத்துச்சென்றுள்ளார். இருவரும் பூசாரிப்பட்டி அருகே சென்றபோது,  இருவருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. கொலைசெய்யத் தயாராக வந்திருந்த சதீஷ்குமார், நீ என்னைத் தவிர யாருக்கும் கிடைக்கக் கூடாது' எனக் கூறி, மறைத்து வைத்திருந்த கத்தியால் மஹதியின் கழுத்தில் குத்தியுள்ளார். சம்பவ இடத்திலேயே மஹதி பலியாக, சடலத்தை புதருக்குள் வீசிவிட்டு தப்பி ஓடியிருக்கிறார்" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு