Published:Updated:

நள்ளிரவில் குழந்தையுடன் தர்ணா; பூட்டை உடைத்த போலீஸ் - வீடியோவுடன் போலீஸ் நிலையம் சென்ற கணவர்

எஸ்.மகேஷ்
நள்ளிரவில் குழந்தையுடன் தர்ணா; பூட்டை உடைத்த போலீஸ் - வீடியோவுடன் போலீஸ் நிலையம் சென்ற கணவர்
நள்ளிரவில் குழந்தையுடன் தர்ணா; பூட்டை உடைத்த போலீஸ் - வீடியோவுடன் போலீஸ் நிலையம் சென்ற கணவர்

``எனக்கும் ரமேஷ்குமாருக்கும் திருமணமாகி ஓராண்டு கடந்துவிட்டது. எங்களுக்கு 5 மாதத்தில் பெண் குழந்தை உள்ள நிலையில் எனக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியுள்ளார் ரமேஷ்குமார். அவர் நல்லவர்தான். ஆனால் அவருடைய அம்மாவும் சகோதரியும்தான் எல்லாப் பிரச்னைகளுக்கும் காரணம்'' என்று கணவர் வீட்டின் முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பட்டதாரி பெண் கண்ணீர்மல்க கூறினார். 

சென்னை கொடுங்கையூர் எழில்நகரைச் சேர்ந்த ரமேஷ்குமாரின் வீட்டின் முன் கைக்குழந்தையுடன் இளம்பெண் ஒருவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இந்தத் தகவல் கிடைத்ததும் கொடுங்கையூர் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து இளம்பெண்ணிடம் விசாரித்தனர். அப்போது அந்தப் பெண்ணின் பெயர் பவித்ரா என்றும் ரமேஷ்குமாரின் மனைவி என்றும் தெரியவந்தது. பவித்ரா போராட்டத்தில் ஈடுபட்ட சமயத்தில் ரமேஷ்குமாரின் வீடு பூட்டப்பட்டிருந்தது. 

இரவு நேரம் என்பதால் காலையில் பேசிக் கொள்வோம் என்று போலீஸார் பவித்ராவிடம் கூறினர். ஆனால் அவரோ, `எனக்கும் என் குழந்தையும் நீதி கிடைக்கும் வரை இந்த இடத்தைவிட்டு செல்ல மாட்டேன்' என்று கூறினார். இதையடுத்து ரமேஷ்குமாரின் வீட்டின் பூட்டை உடைத்து பவித்ராவை வீட்டுக்குள் அனுப்பினர். இதையடுத்து நள்ளிரவில் உடல்நலம் பாதிக்கப்பட்ட பவித்ரா, அந்தப் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது, வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பவித்ரா புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில் விசாரணை நடந்துவருகிறது. 

பவித்ராவிடம் பேசினோம். ``நான், பி.சி.ஏ. படித்துள்ளேன். என் அப்பாவும் அம்மாவும் பிளாட்பாரத்தில் வியாபாரம் செய்து அதில் கிடைத்த பணத்தைக் கொண்டு என்னை கஷ்டப்பட்டு படிக்க வைத்தார்கள். அங்கு இருக்கும் வரை சந்தோஷமாகத்தான் இருந்தேன். எனக்கும் ரமேஷ்குமாருக்கும் 26.2.2018 அன்று திருமணம் நடந்தது. என்னுடைய மாமனார் லாரி டிரைவர். திருமணம் நடந்த அடுத்தநாள் அவர் விபத்தில் சிக்கினார். ஒருவாரத்துக்குப் பிறகு அவர் இறந்துவிட்டார். இதனால் என்னை ராசியில்லாதவள் என்று என்னுடைய மாமியாரும் நாத்தனாரும் கேவலமாகப் பேசினர். ஆனால், நான் அமைதியாக இருந்தேன். 

மூன்று மாதங்கள் கணவர் வீட்டில் இருந்தேன். அந்தக் காலகட்டத்தில் நான் அனுபவித்த கொடுமைகளை வார்த்தைகளால் சொல்ல முடியாது. இருப்பினும் ரமேஷ்குமாருக்காகப் பொறுத்துக்கொண்டு அங்கு வாழ்ந்தேன். என் மீது பரிதாபப்பட்ட ரமேஷ்குமார், மூன்று மாதங்களுக்குப் பிறகு என்னை அம்மா வீட்டுக்கு அனுப்பிவைத்தார். அந்தச் சமயத்தில் நான் கருவுற்றியிருந்தேன். அப்போது எல்லாம் ரமேஷ்குமார் நல்லவராகத்தான் இருந்தார். 

அதன்பிறகு கணவர் வீட்டினரால் பலவகையில் டார்ச்சர்களை அனுபவித்தேன். கர்ப்பிணி என்றுகூட பாராமல் என்னைத் துன்புறுத்தினர். குழந்தைக்காகவும் கணவருக்காகவும் அமைதியாக இருந்தேன். இந்தச் சமயத்தில் ரமேஷ்குமாரின் சகோதரி, நீ வந்த நேரத்தில் என் அப்பாவை நாங்கள் இழந்துவிட்டேன். இந்தக் குழந்தை பிறக்கும்போது யாரை இழக்கப்போகிறோம் என்று தெரியவில்லை. இதனால் உனக்கு ஊனமாகத்தான் குழந்தை பிறக்கும் என்று சாபமிட்டார். அப்போது எனக்கு 9 மாதம். இதனால் குழந்தை பிறக்கும் வரை கவலையோடு இருந்தேன். பெண் குழந்தை எனக்குப் பிறந்தது. அன்றைய தினம் ஆஸ்பத்திரிக்கு வந்த ரமேஷ்குமார், நான் மயக்கத்திலிருக்கும்போதே வீட்டுக்குச் சென்றுவிட்டார். அதன்பிறகு அவர் என்னையும் குழந்தையையும் பார்க்கவரவில்லை. குழந்தைக்கு 5 மாதமாகிறது. இதனால் வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் என்னை கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி புகார் கொடுத்தேன். விசாரணைக்கு வந்த ரமேஷ்குமார், காலஅவகாசம் கேட்டார். அதன்பிறகும் அவர் என்னுடன் சேர்ந்து வாழவில்லை. 

இந்தச் சமயத்தில்தான் சில நாள்களுக்கு முன் விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார் ரமேஷ்குமார். இதனால், அதிர்ச்சியடைந்த நான், நியாயம் கேட்டு கணவர் வீட்டுக்குச் சென்றேன். அங்கு என்னை அடித்தனர். வீட்டை பூட்டி விட்டு கணவர் வீட்டினர் வெளியில் சென்றுவிட்டனர். இதனால் இரவில் தெருவில் கைக்குழந்தையுடன் இருந்தேன். ரமேஷ்குமார், அவரின் அம்மா, சகோதரி பேச்சைக் கேட்டுதான் என்னிடம் அப்படி நடந்துகொள்கிறார். என் வீட்டிலிருந்து நகை, பணம் கேட்டு அடிக்கடி கணவர் வீட்டினர் தொந்தரவு செய்தனர். நான் அவருடன் சேர்ந்து வாழ விரும்புகிறேன். ஆனால், அதை ரமேஷ்குமாரின் அம்மாவும் சகோதரியும் தடுக்கின்றனர். எனவே, எனக்கும் என் குழந்தைக்கும் நீதி கிடைக்கவேண்டும்" என்றார் கண்ணீர்மல்க. 

ரமேஷ்குமாரிடம் பேசினோம். ``குடும்பம் என்றால் இன்பம், துன்பம் இருக்கத்தான் செய்யும். பவித்ராவின் உறவினர் ஒருவர் அ.தி.மு.க.வில் இருக்கிறார். அவரின் பேச்சைக் கேட்டுக்கொண்டு பவித்ரா இப்படிச் செயல்படுகிறார். அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்துகின்றனர். நான் எந்தத் தவறும் செய்யவில்லை. சட்டரீதியாகவே தனியொருவனாகப் போராடிவருகிறேன். நானும் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளேன். என்னிடம் பவித்ரா தொடர்பான வீடியோ, ஆடியோ போன்ற ஆதாரங்கள் உள்ளன" என்றார் சுருக்கமாக 

போலீஸ் நிலையத்துக்குச் சென்ற பவித்ராவிடமும் ரமேஷ்குமாரிடமும் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது ரமேஷ்குமார், பவித்ரா தொடர்பான சிசிடிவி கேமரா பதிவுகள், ஆடியோக்கள், வீடியோக்களை போலீஸாரிடம் காண்பித்துள்ளார். அப்போது இருவரும் சேர்ந்து வாழுமாறு போலீஸார் தெரிவித்துள்ளனர். இருவருக்கும் கவுன்சலிங் அளிக்க போலீஸார் முடிவு செய்துள்ளனர்.