Published:Updated:

`என்னிடம் பணமில்லை; பழைய டிரஸ்ஸை போட்டுவிடு!'- பிறந்தநாளில் மகனின் கழுத்தை அறுத்த தாய்

`என்னிடம் பணமில்லை; பழைய டிரஸ்ஸை போட்டுவிடு!'- பிறந்தநாளில் மகனின் கழுத்தை அறுத்த தாய்
`என்னிடம் பணமில்லை; பழைய டிரஸ்ஸை போட்டுவிடு!'- பிறந்தநாளில் மகனின் கழுத்தை அறுத்த தாய்

ராஜிக்குப் பிறந்தநாள் வருது, புது டிரஸ் வாங்கிக் கொடுங்க என்று கணவரிடம் மனைவி கேட்டபோது பணமில்லை என்று சொல்லிவிட்டு வேலைக்குச் சென்றுள்ளார் கணவர். அவர் மீதான ஆத்திரத்தில் மகனின் கழுத்தைக் கத்தியால் அறுத்த தாய், தானும் தற்கொலைக்கு முயன்றார். இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

திருவள்ளூர் மாவட்டம், அம்பத்தூரை அடுத்த திருமுல்லைவாயல், சீனிவாசன் நகர், நடராஜன் தெருவில் குடியிருப்பவர் பானுபிரசாத்.  இவரின் மனைவி மம்தா (30). இவர்களின் மகன் ராஜ். வடமாநிலத்தைச் சேர்ந்த இந்தக் குடும்பம் பிழைப்புத் தேடி சென்னை வந்தது. அம்பத்தூரில் பானிபூரி வியாபாரம் செய்து வந்தார் பானுபிரசாத். வியாபாரத்தில் தினமும் குறைந்தளவே வருமானம் கிடைத்துவந்துள்ளது. இதனால் வறுமையோடு அந்தக் குடும்பம் வாழ்ந்துவந்தது. 

 இந்த நிலையில்தான் ராஜிக்கு பிறந்தநாள் வந்துள்ளது. புது டிரஸ் எடுக்க வேண்டும் என்று  கணவரிடம் மம்தா கூறியுள்ளார். அதற்கு அவர், `என்னிடம் பணமில்லை. அதனால் பழைய டிரஸ்ஸை போட்டுவிடு' என்று கூறியுள்ளார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரத்தில் `புதுடிரஸ் வாங்கிக் கொடுக்க வழியில்லை; உங்களுக்கு ஏன் மனைவி, குழந்தை' என்று மம்தா பேசியதாகக் கூறப்படுகிறது. 

அதையெல்லாம் காதில் வாங்கிக் கொள்ளாத பானுபிரசாத், பானிபூரி விற்றால்தானே அன்றைய தினம் சாப்பாடு என்பதால் அம்பத்தூருக்குச்  சென்றுவிட்டார். வியாபாரம் முடிந்து, இரவு 9 மணியளவில் வீட்டுக்கு வந்தார். அப்போது கழுத்தில் கத்தியால் அறுக்கப்பட்ட நிலையில் மம்தாவும், ராஜிம் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தனர். அந்த அறை முழுவதும் ரத்தம் வெள்ளமாக காட்சியளித்தது. ராஜிம் மம்தாவும் அரைமயக்கத்தில் இருந்தனர். 

இந்தக் காட்சியைப் பார்த்த பானுபிரசாத் அலறினார். அவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அங்கு வந்தனர். உடனடியாக 108 ஆம்புலென்ஸுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதோடு திருமுல்லைவாயல் காவல் நிலையத்துக்கும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் தகவல் தெரிவித்தனர். ஆம்புலன்ஸில் மம்தா, ராஜ் ஆகியோரை சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு இருவரின் உடல்நிலை மோசமாக இருப்பதாகக் கூறிய டாக்டர்கள், மேல்சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. கவலையோடு இருவரின் அருகில் பானுபிரசாத் மருத்துவமனையில் காத்திருக்கிறார். 

இதுகுறித்து திருமுல்லைவாயல் போலீஸாரிடம் கேட்டதற்கு ``ராஜுவின் பிறந்தநாளுக்கு புது டிரஸ் எடுத்துக் கொடுக்கவில்லை என்ற ஆத்திரத்தில் மம்தா இப்படிச் செய்துள்ளார் என்பது எங்களின் விசாரணையில் தெரியவந்துள்ளது. தற்போது மம்தா பேசும் நிலையில் இல்லை. இதனால் அவரிடம் விசாரணை நடத்த முடியவில்லை. அவரிடம் விசாரித்தால்தான் என்ன நடந்தது என்று தெரியும். பானுபிரசாத்திடம் கேட்டபோது பிறந்தநாள் தொடர்பாகத்தான் தகராறு ஏற்பட்டுள்ளதாகக் கூறினார். இதற்கிடையில் சம்பவம் நடந்த வீட்டிலிருந்து காய்கறிகளை அறுக்கும் கத்தி ஒன்று ரத்தக்கறையோடு கைப்பற்றியுள்ளோம். அதைவைத்துதான் மகனின் கழுத்தை முதலில் மம்தா அறுத்துள்ளார். அதன்பிறகு தானும் அதே கத்தியால் அறுத்து தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்துள்ளார். மகனை கொலை செய்ய முயற்சி செய்ததாக மம்தா மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர். 

பானுபிரசாத் வீட்டின் அருகில் உள்ளவர்களிடம் கேட்டபோது ``வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் யாரிடமும் சகஜமாக பழகமாட்டார்கள். வீட்டில் இந்தியில்தான் பேசுவார்கள். ஏதாவது கேட்டால் பதில் மட்டும் சொல்வார்கள். மற்றபடி என்ன நடந்தது என்று தெரியவில்லை. பானுபிரசாத் அலறல் சத்தம் கேட்டுதான் அங்கு சென்று பார்த்தபோது ரத்த வெள்ளத்தில் அந்தப் பெண்ணும், பையனும் கிடந்தனர். கழுத்தில் கத்தியால் அறுக்கப்பட்ட காயங்கள் இருந்தன" என்றனர். 

பிறந்தநாளுக்கு புதுடிரஸ் வேண்டும் என்று ராஜ், சிறுப்பிள்ளைத்தனமாக அடம்பிடித்திருந்தாலும் அவனை மம்தா சமரசப்படுத்தியிருக்க வேண்டும். ஆனால், கணவன் மீதுள்ள ஆத்திரத்தில் குழந்தையின் கழுத்தை அறுத்து, தானும் தற்கொலை செய்துகொள்ள அவர் முயன்றது தவறு என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். 

வறுமையின் நிறம் சிவப்பு என்பது பானுபிரசாத்தின் குடும்பத்தில் நடந்த சம்பவம் வெளிப்படுத்தியுள்ளது. 

பின் செல்ல