Published:Updated:

`துண்டு துண்டாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட வடமாநில இளைஞர்!’ – ஈரோட்டில் பரபரப்பு

`துண்டு துண்டாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட வடமாநில இளைஞர்!’ – ஈரோட்டில் பரபரப்பு
`துண்டு துண்டாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட வடமாநில இளைஞர்!’ – ஈரோட்டில் பரபரப்பு

வடமாநில இளைஞர் ஒருவர் பணத்துக்காக துண்டு துண்டாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஈரோட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

பீகார் மாநிலம் கல்யாண்பூர் பகுதியைச் சேர்ந்தவர் நித்தீஷ்குமார் (21). இவர் திண்டுக்கல் மாவட்டம், நாச்சியார்ப்பட்டியில் உள்ள எம்.எஸ்.கே மினரல்ஸ் என்னும் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்திருக்கிறார். மார்ச் 7-ம் தேதி வேலைக்குச் சென்ற நித்தீஷ்குமார் மாயமாகியிருக்கிறார். இதையடுத்து, அவரது உறவினரான ராஜ்குமார் என்பவர் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர், குஜிலியம்பாறை காவல் நிலையத்தில், நித்தீஷ்குமாரைக் காணவில்லை எனப் புகார் கொடுத்திருக்கிறார்.

இதற்கிடையே, பீகாரில் உள்ள நித்தீஷ்குமாரின் தாயார் ரேனுதேவிக்கு வாட்ஸ்அப் மூலம், நித்தீஷ்குமாரை கட்டி வைத்து அடிப்பது போன்ற புகைப்படம் ஒன்று கிடைக்கிறது. அதோடு, ‘நித்தீஷ்குமாரை நாங்கள்தான் கஸ்டடியில் வைத்திருக்கிறோம். ஒரு லட்ச ரூபாய் பணம் கொடுத்தால் அவரை விட்டுவிடுவோம்’ என்ற செய்தியையும் அனுப்பி எச்சரித்திருக்கின்றனர். இதைப் பார்த்துப் பதறிப்போன நித்தீஷ்குமாரின் தாயார் ரேனுதேவி பீகார் போலீஸாரிடம் இதுகுறித்து புகார் அளித்துவிட்டு, நடத்த விஷயத்தை உறவினரான ராஜ்குமாருக்கு சொல்லியிருக்கிறார். ராஜ்குமார் நடந்த விஷயத்தைத் திண்டுக்கல் போலீஸாரிடம் சொல்லி, நித்தீஷ்குமாரை கடத்தி வைத்திருக்கும் கும்பல் அனுப்பிய போட்டோவையும், அவர்களுடைய வாட்ஸ்அப் எண்ணையும் கொடுத்திருக்கிறார்.

அதனடிப்படையில், ஆள் மாயமான வழக்கைக் கடத்தல் வழக்காக மாற்றிய திண்டுக்கல் போலீஸார், அந்த வாட்ஸ்அப் நம்பரை டிரேஸ் செய்திருக்கின்றனர். அது ஈரோடு ராசாம்பாளையம் என்னும் பகுதியைக் காட்டியிருக்கிறது. உடனே ஈரோட்டுக்கு விரைந்த திண்டுக்கல் போலீஸார், ஈரோடு வடக்கு காவல் நிலைய போலீஸாருடன் ராசாம்பாளையம் பகுதியில் விசாரணை செய்திருக்கின்றனர். அங்கு ஒரு வீட்டில் விசாரணை செய்தபோது, வீட்டிலிருந்த ரத்தக்கறை போலீஸார் கண்ணில் பட்டிருக்கிறது. அதையடுத்து வீடு முழுக்க போலீஸார் சோதனை செய்தபோது வீட்டிலிருந்த ஒரு மூட்டையைக் கண்டு உறைந்து போயிருக்கின்றனர். அந்த மூட்டைக்குள் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் நித்தீஷ்குமாரின் சடலம் இருந்திருக்கிறது. உடனடியாக வீட்டிலிருந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ராகுல் தத்தா (21), நவின்குமார் பட்டேல் (21) மற்றும் அவருடைய மனைவி சசிகலா (22) ஆகியோரை ஈரோடு வடக்கு காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர்.

விசாரணையில், `நவின்குமார் பட்டேல் சொந்த ஊரான பீகாருக்குச் சென்றுவரும்போது ரயிலில் நித்தீஷ்குமாரைச் சந்தித்திருக்கிறார். ஒரே ஊர்க்காரர்கள் என்பதால் ரயில் சந்திப்பிலேயே இருவரும் நண்பர்களாகியிருக்கின்றனர். அப்போதுதான் திண்டுக்கல்லில் ஒரு வாட்டர் கம்பெனியில் குறைவான சம்பளத்தில் வேலை செய்து வருவதாக நித்தீஷ்குமார் கூறியிருக்கிறார். அதற்கு நவின்குமார் பட்டேலோ, `ஈரோட்டுக்கு வந்தால் அதிகமான சம்பளத்தில் வேலை வாங்கித் தருகிறேன்’ என ஆசை வார்த்தை கூறியிருக்கிறார். அப்படி ஈரோட்டுக்கு வந்த நித்தீஷ்குமாரை, நவின்குமார் பட்டேல். அவரின் மனைவி மற்றும் நண்பர் உதவியுடன் வீட்டில் கட்டிவைத்து அடித்துக் கொடுமைப்படுத்தியிருக்கிறார். அதை அவருடைய அம்மாவுக்கு அனுப்பி, ஒரு லட்ச ரூபாய் பணத்தை உங்கள் மகனுடைய அக்கவுண்டில் போடுங்கள் எனக் கேட்டிருக்கிறார். ஆனால், எதிர்முனையில் இருந்து சரியான பதில் வராததால் நித்தீஷ்குமாரை இரும்புக் கம்பிகளை அறுக்கப் பயன்படுத்தும் ஆக்ஸா பிளேடுகளைப் பயன்படுத்தி, துண்டு துண்டாக வெட்டிக் கொலை செய்திருக்கின்றனர்” எனத் தெரியவந்திருக்கிறது.

இதில் கொடுமை என்னவென்றால், நித்தீஷ்குமாரின் தாயார் தன் மகனை மீட்பதற்காக, அக்கவுண்டில் 40,000 ரூபாய் போட்டிருக்கிறார். அதில், 5,000-த்தை எடுத்து செலவு செய்த கும்பல் அதன்பின்னர் தான் நித்தீஷ்குமாரை துண்டு துண்டாக வெட்டிக் கொலை செய்திருக்கின்றனர். வட மாநிலத்தவர்களுக்குள் நடந்த இந்தக் கொடூர சம்பவத்தால் ஈரோடு ராசாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த மக்கள் கடும் அதிர்ச்சியில் உறைந்து கிடக்கின்றனர்.

இச்சம்பவம் குறித்து ஈரோடு வடக்கு காவல் நிலைய போலீஸார், இந்தக் கொலையில் சம்பந்தப்பட்ட மூன்று பேரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். பணத்துக்காகத்தான் நித்தீஷ்குமார் கொலை செய்யப்பட்டாரா!... அல்லது இதற்குப் பின் வேறு ஏதாவது காரணங்கள் இருக்கிறதா என்றும் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.