Published:Updated:

`நட்பில் விரிசல், தோழியைக் கொல்ல அபுதாபியிலிருந்து வந்த வாலிபர்!' - துப்புதுலக்கத் திணறிய கொச்சி போலீஸ்

`நட்பில் விரிசல், தோழியைக் கொல்ல அபுதாபியிலிருந்து வந்த வாலிபர்!' - துப்புதுலக்கத் திணறிய கொச்சி போலீஸ்
`நட்பில் விரிசல், தோழியைக் கொல்ல அபுதாபியிலிருந்து வந்த வாலிபர்!' - துப்புதுலக்கத் திணறிய கொச்சி போலீஸ்

கொச்சியில், கடந்த மாதம் 14-ம் தேதி, இளம்பெண் ஒருவர் மர்ம நபர் ஒருவரால் தீ வைத்துக் கொளுத்தப்பட்டார். ஆனால், அதிர்ஷ்டவசமாக அதில் இருந்து உயிர் தப்பினார். அவரைத் தீயிட்டுக் கொளுத்த முயன்ற அந்த மர்ம நபர் யார் என்பது கண்டுபிடிக்கப்படாமலே இருந்த நிலையில், ஒரு மாதத்துக்குப் பின் அவர் கைதுசெய்யப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கேரள மாநிலம் கொச்சியில், ஊட்டியைச் சேர்ந்த இளம்பெண் ரீட்டா (பெயர் மாற்றம்) என்பவர் தங்கிப் படித்துவந்தார். படிப்பின் நடுவே, கொச்சியில் ஒரு கடையில் பார்ட் டைமாக வேலையும் பார்த்துவந்தார். இதற்கிடையே, கடந்த மாதம் 14-ம் தேதி, அந்த ரீட்டா தன்கூட வேலைபார்க்கும் மற்றொரு பெண்ணுடன் பைக்கில் சென்றுள்ளார். அப்போது, அவர்களை வழிமறித்த முகமூடி அணிந்த மர்ம நபர் ஒருவர், தான் மறைத்துவைத்திருந்த பெட்ரோலை மேலே அவர்கள்மீது ஊற்றி தீ வைக்க முயன்றார். அப்போது, அங்கிருந்த பொதுமக்கள் அவரைத் தடுக்க, சிறிய தீ காயங்களுடன் ரீட்டாவும் அவரது தோழியும் உயிர் தப்பினர். ஆனால், அந்த மர்ம நபர் எஸ்கேப் ஆகிவிட்டார். அவர் யார் என்பதுகுறித்த விவரங்கள் ஏதும் தெரியாமல் போலீஸார் குழம்பிவந்தனர். பெட்ரோல் கொண்டுவந்த காலி பாட்டில் மட்டும் தான் போலீஸுக்கு ஆதாரமாகக் கிடைத்தது. இதனால் விசாரணையை முடுக்கிவிட்ட போலீஸார், ஒரு மாதத்துக்குப் பின் தற்போது குற்றவாளியைக் கைதுசெய்துள்ளனர். 

பாலக்காடு பகுதியைச் சேர்ந்த மானு என்ற இளைஞரைக் கைதுசெய்துள்ளனர். அவரைக் கைதுசெய்தது எப்படி என்பது குறித்துப் பேசிய போலீஸ் அதிகாரிகள், ``மானுவும் ரீட்டாவும் நெருங்கிய நண்பர்களாக இருந்துவந்துள்ளனர். உறவினர்களும்கூட. இருவருக்கும் ஊட்டி தான் சொந்த ஊர். கோயம்புத்தூரில் இருவரும் ஒன்றாகப் படித்துள்ளனர். இருவருக்கும் இடையே நெருக்கமான நட்பு இருந்துள்ளது. சமீபகாலமாக, ரீட்டா மானுவுடன் பழகுவதைத் தவிர்த்துவந்ததாகத் தெரிகிறது. இதனால், அவர் வேறு யாரையோ காதலிக்கிறார் என சந்தேகமடைந்துள்ளார் மானு. அந்த நேரத்தில், அவருக்கு துபாயில் வேலை கிடைக்க, அபுதாபி சென்றுவிட்டார். ரீட்டாவும் படிப்புக்காக கொச்சிவந்துவிட்டார். 

அபுதாபி சென்றாலும், ரீட்டா மீதான சந்தேகமும் மானுவை விட்டு விலகவில்லை. இருப்பினும், ஜனவரி மாதம் ஊருக்கு வந்தவர் கொச்சி வந்து ரீட்டாவை சமாதானம் செய்ய முயன்று, தன்னைக் கல்யாணம் செய்துகொள்ளும்படி வற்புறுத்தியுள்ளார். ஆனால், அதற்கு ரீட்டா சம்மதிக்காததால், அவர் மீதான கோபம் அதிகரித்துள்ளது. மீண்டும் அபுதாபி சென்றவர், ரீட்டா மீதான கோபத்தால் அவரைக் கொலை செய்யத் திட்டமிட்டுள்ளார். இதற்காக அபுதாபியிலிருந்து மீண்டும் திரும்பி வர எண்ணியவர், இது அவர்கள் குடும்பத்தில் யாருக்கும் தெரியக் கூடாது என நினைத்து, பெங்களூரு விமான நிலையம் வந்து, அங்கிருந்து கோயம்புத்தூர் வந்துள்ளார். பின்னர், கோயம்புத்தூரில் இருந்து டூவீலரை எடுத்துக்கொண்டு கொச்சிக்கு விரைந்துள்ளார். 

கொச்சியில் ரூம் எடுத்துத் தங்கியவர், மார்ச் 13-ம் தேதியே ரீட்டாவை கொலைசெய்ய முயன்றுள்ளார். ஆனால், அவரது முயற்சி பலனளிக்கவில்லை. மறுநாள், ரீட்டா வேலை செய்யும் இடத்தில் காத்திருந்து, பின்னர் அவரைப் பின்தொடர்ந்து போய் தீ வைக்க முயன்றுள்ளார். பொதுமக்கள் சூழ்ந்துகொண்டு  அந்தப் பெண்ணைக் காப்பாற்றியதால், அவர் சிறிய காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார். பொதுமக்கள் கூடியதால் அங்கிருந்து எஸ்கேப் ஆன மானு, மீண்டும் கோயம்புத்தூர் சென்று துபாய் சென்றுவிட்டார்" என்று கூறியுள்ள போலீஸார், ``குற்றவாளி முகமூடி அணிந்திருந்ததால், யார் என அடையாளம் காணமுடியவில்லை. இருப்பினும், கொலை முயற்சி நடந்த இடத்தில் இருந்த பொதுமக்கள், வழிப்போக்கர்கள் என 200-க்கும் அதிகமான மக்களிடம் விசாரணை நடத்தினோம். 

photo and news credit: @mathrubhumi

இதேபோல, 1000-க்கும் மேற்பட்ட போன் கால்கள், 100-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை ஆய்வுசெய்தோம். இதில், கொச்சி நகரத்தில் மட்டும் அதிகமான கேமராக்களை ஆய்வுசெய்தோம். அதில், தான் அவரின் பைக் உள்ளிட்ட விவரங்கள் தெரியவந்தது. பைக்கில் வந்தது மானு தான். அடையாளம் கண்டுகொண்ட பின்னர், அவர் அபுதாபியில் இருப்பது தெரியவந்தது. அவரைத் தொடர்புகொண்டு விசாரித்ததில் உண்மை வெளிவந்தது. அவரும் குற்றத்தை ஒப்புக்கொண்டார். பின்னர், துபாய் அதிகாரிகள் உதவியுடன் அவரை மீட்டு, கேரளா கொண்டுவந்தோம். சந்தேகத்தால்தான் குற்றத்தைச் செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார். முறையான விசாரணை நடந்துகொண்டிருக்கிறது. விரைவில் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்" என்று கூறியுள்ளனர். ஒரு மாதத்துக்குள் குற்றவாளியைப் பிடித்த கேரள போலீஸாருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.