Published:Updated:

பாதி உடல் எரிந்தநிலையில் தூக்கில் தொங்கிய பெண் - கர்நாடகத்தில் கொடூரம்!

`இளம் பெண் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நியாயம் வேண்டும்' என்று வலியுறுத்தி கர்நாடக மாநிலத்தில் பல்வேறு தரப்பினரும் போராட்டங்களும், கண்டன ஊர்வலங்களும் நடத்தி வருகிறார்கள். 

பாதி உடல் எரிந்தநிலையில் தூக்கில் தொங்கிய பெண் - கர்நாடகத்தில் கொடூரம்!
பாதி உடல் எரிந்தநிலையில் தூக்கில் தொங்கிய பெண் - கர்நாடகத்தில் கொடூரம்!

ர்நாடக மாநிலம் ராய்ச்சூரில் உள்ள உயர் கல்வி நிறுவனம் ஒன்றில் படித்த 23 வயதான பொறியியல் மாணவி திவ்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கடந்த (ஏப்ரல்) 13-ம் தேதி அன்று கல்லூரியிலிருந்து வீட்டிற்குத் திரும்பவில்லை. அன்றைய தினமே `தங்கள் மகளை  காணவில்லை' என்று அவரின் பெற்றோர் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ஆனால், அந்தப் பெண் மேஜர் என்று காரணம்சொல்லி, உடனடியாகப் புகாரைப் பதிவு செய்யாமல் இரு தினங்கள்வரை, திவ்யாவின் பெற்றோரை அலைக்கழித்திருக்கிறது காவல் துறை.

"நண்பர்களோடு அந்தப் பெண் எங்காவது சென்றிருப்பார். திரும்பி வந்துவிடுவார்" என்று தெரிவித்துள்ளனர், காவல் துறையினர். ஆனால், அவர்கள் சொல்வதை நம்ப மறுத்த திவ்யாவின் பெற்றோர், தங்களின் மகளை பல்வேறு இடங்களிலும் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் ஏப்ரல் 16-ம் தேதி அன்று (செவ்வாய்க் கிழமை), திவ்யாவின் உடல் கிடைத்திருப்பதாக அவரின் பெற்றோருக்கு போன் மூலம் தெரிவித்திருக்கிறது காவல் துறை. அந்தப் பெண் படித்த கல்லூரிக்கு அருகில் உள்ள ஒரு கோயிலைச் சுற்றியிருந்த பகுதியில், பாதி உடல் தீயில் எரிந்த நிலையில், தூக்கில் தொங்கிய நிலையில் திவ்யாவின் உடலை காவல் துறையினர் மீட்டுள்ளனர். பின்னர், அந்தப் பெண்ணின் உடல் கூராய்வு சோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

திவ்யாவின் உடல் கண்டெடுக்கப்பட்ட இடத்திலிருந்து கடிதம் ஒன்றைக் காவல் துறையினர் கைப்பற்றியிருக்கின்றனர். அந்தப் பெண்ணின் ஆடைகள் கிழிந்த நிலையிலும், அவருடைய டிபன் பாக்ஸ், கைப்பையில் இருந்த பொருள்கள் உள்ளிட்டவை அந்த இடத்தில் சிதறியும் காணப்பட்டுள்ளன. அந்தக் கடிதத்தில், தன்னுடைய மதிப்பெண் குறைந்ததாலேயே தற்கொலை செய்துகொண்டதாக திவ்யா எழுதியது போன்று எழுதப்பட்டிருந்தது. எனினும் அந்தப் பெண்ணின் ஒரு கை துண்டிக்கப்பட்டிருந்தது. என்றாலும் பிணக்கூராய்வு முடிவுகள் கிடைத்த பின்னரே, அந்தப் பெண் எப்படி மரணமடைந்தார் என்பதை உறுதியாகக் கூற முடியும் என்று போலீஸார் தரப்பில் சொல்கிறார்கள். 

இதற்கிடையே, "திவ்யா நிச்சயம் தற்கொலை செய்துகொண்டிருக்க மாட்டார். அவரை யாரோ சிலர் கொலை செய்திருக்கிறார்கள்" என அவரின் பெற்றோர் மற்றும் நண்பர்கள் அந்தப் பகுதியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அனைத்துத் தேர்வுகளிலும் நல்ல மதிப்பெண்ணோடு திவ்யா தேர்வானதாகவும், அவர் தன் தேர்வு முடிவுகளைக் கண்டு மகிழ்ச்சியடைந்ததாகவும் கூறிய அவர்கள், அந்தக் கடிதம் கொலைகாரர்களால் ஜோடிக்கப்பட்டு எழுதப்பட்டதாக இருக்கக்கூடும் என்று குற்றம்சாட்டினர். கொடூரமான முறையில் அவரை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று தெரிவித்து, உறவினர்கள், நண்பர்கள் பலரும் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், அந்தக் கொலைவழக்கு தொடர்பாக சுதர்ஷன் யாதவ் என்பவரை போலீஸார் கைது செய்திருக்கின்றனர். 

திவ்யாவின் உடல் கண்டெடுக்கப்பட்ட இடம், சுதர்ஷன் யாதவின் தந்தைக்குச் சொந்தமான நிலம் என்று கூறப்படுகிறது. திவ்யாவும், சுதர்ஷன் யாதவும் காதலித்து வந்ததாக சக மாணவர்கள் தெரிவித்துள்ளனர். இதை மறுத்த திவ்யாவின் பெற்றோர், தங்களின் மகளுக்கு சுதர்ஷன் தொடர்ந்து தொல்லை கொடுத்துவந்ததாகத் தெரிவித்தனர். 

கொலைக்கான காரணம் எதுவாயினும், பாதி உடல் எரிந்த நிலையில், தூக்கில் தொங்கிய அந்தப் பெண்ணின் புகைப்படம் மற்றும் அதுதொடர்பான தகவல்கள், சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்பட்டு வருகின்றன. இளம்பெண் ஒருவரின் கொடூரமான கொலையும், மரணித்த உடல் மீது நடத்தபட்டிருக்கும் இரக்கமற்ற வன்முறையும், பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. `இளம் பெண் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நியாயம் வேண்டும்' என்று வலியுறுத்தி கர்நாடக மாநிலத்தில் பல்வேறு தரப்பினரும் போராட்டங்களும், கண்டன ஊர்வலங்களும் நடத்தி வருகிறார்கள். 

இந்த வழக்கு விசாரணையின் முடிவுகள் குறித்து விளக்கமளிக்க, விரைவில் போலீஸார் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.